பெரியார்பே ருரையாளர் இறையன், மேடைப்
பேச்சருவி, கோடையிடி, கொள்கைத் தென்றல்
அரியதிறன் கொண்டிருக்கும் ஆற்றல் கோமான்
ஆற்றொழுக்கில் ஆறுகளை வென்ற வீரர்
புரியவைப்பார், தெளியவைப்பார், உணர வைப்பார்
போர்ப்படையை உருவாக்கும் சொல்லின் சிற்பி
கரியதிரு மேனியினால் எனைக்க வர்ந்த
கனத்தஞான மழைக்கொண்டல், தமிழர் செல்வம்.
சாதிகளைத் தன்வீட்டில் வெட்டிச் சாய்த்த
சாதனையின் வேங்கையிவர், திரும ணத்தால்
ஏதிவர்க்கே இணையாய்இன் னொருவர்? அய்யா,
என்னதவம் செய்தாரோ இவரை ஏந்த,
மாதர்குலம் போற்றுகின்ற திரும கள்தான்
மனைவிளக்காய் இறையனுக்கே வாய்த்த தாலே,
சாதியிலே இணைதேடாச் சரித்தி ரத்தை
சாதித்தார். சாதித்தார். வெற்றி பெற்றார்.
செந்தமிழ்தான் இவர்மூச்சு தூங்கும் போதும்
சிந்தனைதான் இவர்விழிப்பு, எதற்கும் ஏங்கி
முந்தாத துறவுமனம் எவரி டத்தும்
முகமலர்ந்து பேசுகின்ற கனிவு நெஞ்சம்.
சிந்தாத கண்ணீரைச் சிந்த வேண்டாம்.
சித்தரைப்போல் சாவுதனை இவர்க டப்பார்.
இந்தநாள் போல்இறையன் என்றும் வாழ்வார்.
என்தமிழ்போல் வாழ்கவென்றே வாழ்த்து கின்றேன்.
மலர்மாமணி புலவர் இளஞ்செழியன், எம்.ஏ
No comments:
Post a Comment