Saturday, December 18, 2010

பவள விழா - சிறப்புரை

தமிழர் வாழ்வில், வரலாற்றில் ஒப்புயர்வற்ற சிறப்பிற்கும்,  பின்பற்றுதலுக்கும் உரியவரான தந்தை பெரியாரின் இயக்கம், அந்த வகையில், இலட்சக்கணக்கான பின்பற்றாளர்களையும், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் நூற்றுக்கணக்கான முன்னோடிகளையும் பெற்று வந்திருக்கிறது.

    அத்தகைய முன்னோடிகளில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,சொற்பொழிவாளர்கள் என பல்துறை வித்தகர்கள் இருந்து வந்துள்ளனர்.  இவர்களின் ஆற்றலால் தந்தை பெரியாரின் இயக்கம் ஆழ்ந்து வேரூன்றி அகன்று பரவியது.  அதே அளவு தந்தை பெரியாரின் தத்துவங்கள் இவர்களது பல்துறை ஆற்றல்களைச் சிறப்பித்தது. திராவிட இயக்கக் கருத்துகளை நீக்கிப் பார்த்தால், இவர்களின் ஆற்றல்கள் பொருளற்றதாகிவிடும்.  அதேபோல் இந்த முன்னோடிகளின் செயல்பாடுகளை நீக்கிப் பார்த்தால் திராவிட இயக்கம் வரலாறு இன்றிப் போய்விடும்.

    திராவிட இயக்கத்தின் சிறப்பே,  “பகுத்தறிவு தத்துவத்தை ஒரு தேசிய இயக்கமாகச் செயல்படுத்தியது தான் ” என்பது உலகளாவிய பேரறிவாளர்களின் மதிப்பீடு.

    மேற்குறிப்பிட்ட முன்னோடிகள் வெறும் எழுத்தாளர்களாகவோ, கவிஞர்களாகவோ, சொற்பொழிவாளர்களாகவோ அறியப்படுவதில்லை.  மாறாக,  தந்தை பெரியாரின் பகுத்தறிவியக்க எழுத்தாளர், பகுத்தறிவியக்கக் கவிஞர்,  பகுத்தறிவியக்கச் சொற்பொழிவாளர் என்றுதான் அறியப்படுகிறார்கள். அப்படி அறியப்படுவதில்தான் அவர்கள் பெருமைப்படுகிறார்கள்,  நிறைவு கொள்கிறார்கள்.

    தங்களின் சிந்தனை,  செயல்,  சொல்லாற்றல்களின் உயிர்ப்பு, வளர்ச்சி, மேம்பாடு  என்பவை பகுத்தறிவியக்கத் தத்துவங்களோடுதான் என்கின்ற வகையிலேயே தங்களின் வாழ்வின் இயல்புகளை முறைப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

    சமூகத்தின் எந்தப் பிரிவினருடைய மனமும் புண்படாமல் அவர்களின் பொதுவான உணர்வுகளை மகிழ்வித்தால் மட்டும் போதும் என்று கருதியிருந்தால் இவர்களில் பலர் ஏராளமான பொருளும் ஈட்டியிருக்கலாம்.  எல்லாத் தரப்பு மக்களின் பாராட்டையும்,  மதிப்பையும் பெற்றிருக்கலாம்.  ஆனால், இவர்கள் தாங்கள் பெறும் புகழிலும், பாராட்டிலும்  சமூக மேம்பாட்டிற்கான,  மனித இன விழிப்பிற்கான பொருள் இருக்க வேண்டும் என்பதாக உறுதி எடுத்துக் கொண்டவர்கள்.

    தந்தை பெரியாரியக்கம் உருவாக்கிய பல்வேறு ஆற்றலாளர்களில் சிந்தனையாளர்கள் வெகு சிலர். அவர்களுள் மொழிப்புலமை பெற்றவர்கள் இன்னும் சிலரே.  அதிலும் எழுத்தாற்றல்,  சொற்பொழிவாற்றல் இரண்டிலும் சிறந்தோர்  மிகமிகச் சிலரே.  இதில் விரல் விட்டு எண்ணத்தக்கவர்களே தமிழிலும்,  ஆங்கிலத்திலும்  சீர்சால் புலமை பெற்றவர்கள்.  இத்தனை சிறப்பியல்புகளையும் ஒருங்கே பெற்று, பகுத்தறிவியக்கத்தின் விலைமதிப்பற்ற  கருவூலம் போன்ற சிலரில் ஒருவர்தான்  பேராசிரியர் இறையனார் அவர்கள்.

    அவருடைய கேண்மை பலரை - குறிப்பாக இளைஞர்களை அறிவியக்கச் சிந்தனையாளர்களாக ஆக்கியுள்ளது.

    அவரது இல்லம், எங்கிருந்தாலும், பெரியாரியக்கத்தின் கருத்தரங்கக் கூடமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது.

    அவர் சொற்பொழிவாற்றும் மேடைகள், சமுதாயக் கேடுகளுக்கெதிரான வழக்காடுதல்களாகவே அமைந்து வந்திருக்கின்றன.

    அவர் எழுத்தின் தெளிவு, சொல்ல வந்த கருத்தின் முடிவான வார்த்தைகளாகவே அமையும்.

    அவருடனான உரையாடல், பாசம் இயைந்ததானாலும் முகமன் கருதா துணிச்சலுடனேதான் இருக்கும்.

    அவர் திரட்டிய உறவும், நட்பும் பெரும்பாலும் அறிவு சார்ந்தவையாகவே வளர்ந்து வந்திருக்கின்றன.

    ஆர்ப்பாட்டமில்லாத அறிவாளி.  தெளிவான சிந்தனையாளர். அயராத ஆற்றலாளர்.

    தந்தை பெரியாரியக்க வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து பயன் பெறத்தக்க பேரறிவாளர்.

    திராவிட இயக்கத்தின் மிக அரிதான மாமனிதர் இறையனார் அவர்கள்.

    “ அண்ணா ” என்று அவரை அழைக்கும்போது நான் பரவசமாகிறேன்.

    “ தம்பி ” என்று என்னை அவர் அழைக்கும்போது தந்தை பெரியாரியக்க வரலாற்றுத் தூண் என்னை அனுசரணையாக ஏந்திக் கொள்ளும பெருமிதம் அடைகிறேன்.

    பகுத்தறிவியக்கத்தின் இந்தப் பேரறிவாளர்க்கு பவள விழா எடுத்துச் சிறப்பிக்கும் அனைவரையும் பாராட்டுவதோடு, அவர் பொருட்டு வெளிவரும் இந் நூல் எதிர்கால மக்களுக்கு இறையனாரின் வாழ்வை வழிகாட்டியாக்கும் என்று உறுதிபட வாழ்த்துகிறேன்.


- டாக்டர்.  பி. ஜெகதீசன்,
( முன்னாள் துணைவேந்தர்,
பாரதிதாசன் பல்கலைக் கழகம்.)

 மாநில திட்டக்குழு உறுப்பினர்



                 




No comments:

Post a Comment