Saturday, December 18, 2010

என் அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்தேனே


    நமது இயக்கத்தின் முதுபெரும் முக்கியத் தோழர்களில் ஒருவரும் பெரியார் பேருரையாளருமான பேராசிரியர் இறையன்அவர்கள் மறைந்தார் என்ற செய்தி, பேரிடி தாக்கியது போல் தாக்கியது - என்னையும் இங்குள்ள என் குடும்பத்தினரையும், கழக நண்பர்களையும். கடந்த சில நாட்களாக உடல் நலமற்று, சிகிச்சையில் இருந்த இறையன் அவர்களை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று செய்த முயற்சிகள் இறுதியில் பலனளிக்கவில்லையே!  ஆம் ,  நாம் தோற்றுப் போனோம்.  என்னே கொடுமை!

    நம் ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறுகின்ற “இயற்கையின் கோணல் புத்தி ” என்பது பற்பல நேரங்களில் இப்படித்தான் நம்மை வாட்டி வாட்டி வதைக்கிறது.  அவருடைய  75 ஆம் ஆண்டு அகவை விழாவை மிகச் சிறப்பாக நடத்தி கழகக் குடும்பத்தினரும், அவருடைய குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

நம்பிக்கை தளராமல் இருந்தோம்

    அதற்கு முன் சற்று தளர்ந்திருந்த  இறையனார் அவர்கள்,  ஏற்புரை நிகழ்த்தும்போது, அவருக்கே உரிய மிடுக்கோடு முழங்கினார்.  நானோ,  நண்பர்களோ அதை அன்று அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு உற்சாகப் பெருவெள்ளத்தில் அவரும் நீந்தினார். நம்மையும் நீந்த அனுமதித்தார். அவரது நோய் சற்று கடுமையானது என்று மருத்துவர்கள் சொன்ன போதிலும், நாங்கள் நம்பிக்கை தளராமல்தான் இருந்தோம்.  பாரீஸ் மாநாட்டிற்கெனப் புறப்பட வேண்டிய காரணத்தினால், அவரது பிறந்தநாளை சில நாள்களுக்கு முந்தியே நடத்திடுமாறு - நான் இறையன் அவர்களையும், திருமகள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன்.

எங்கள் அங்கங்கள்

    எதை எப்பொழுது சொன்னாலும் ஏற்க பழக்கப்பட்ட, பண்பட்ட அந்தக் கொள்கைக் குடும்பம் அதையும் அன்புக் கட்டளையாக எடுத்துக் கொண்டு செயல்பட்டது.  கடந்த சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் பெரியார் திடலில் உவகையும், மகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த விழாவாக அவ்விழா அமைந்தது.  ”அவர்கள் இருவரும இயக்கத்தின் கொள்கைத் தங்கங்கள் மட்டுமல்ல. எங்கள் அங்கங்கள்”  என்று நான் அன்று கூறியது எனது உள்ளத்து உணர்வுகளின் அப்பட்டமான வெளிப்பாடு,  மிகையல்ல.

என் அரிய தங்கம்,  அங்கத்தை இழந்தேனே

    அப்படிப்பட்ட அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்து தவிக்கும் கொடுமை இவ்வளவு விரைவில் ஏற்பட்டு விட்டதே,  என் செய்ய? கும், இறையனாரின் இனநலப்பற்றும், எதையும் ஏற்று இன் முகத்தோடு செயல் புரிந்திட்ட பாங்கும் அவரது தனித் தமிழ் அறிவும், ஆர்வமும் தனித்தன்மைக்கொண்டவை. எவரைக் கொண்டும் அவர்தம் இடத்தை நிரப்பிட இனி ஒரு போதும் முடியாது,  முடியவே முடியாது.

எளிதில் எவரும் இல்லை

    பதவி ஓய்வு என்ற நிலைக்குப் பின் அவரது தொண்டறம் இயக்கத்தின் எல்லா முனைகளுக்கும் வற்றாது கிடைத்தது.  வரலாறாக நிலைத்தது.  எழுதுவதில், பேசுவதில்,  வாதாடுவதில், ஆய்வு செய்தலில் அவருக்கு இணை எளிதில் எவருமில்லை என்று நிறுவி - இயக்க வரலாற்றில் நிலைத்தவர்.

சாதியை ஒழிப்பதில் ஓர் ஒப்பற்ற செயல் வீரர்

    சாதியை ஒழிப்பதில் அவர் ஓர் ஒப்பற்ற செயல் வீரர்.  அதற்கு அவரது குடும்பமே ஒரு சிறு போர்ப்படை! அவரது கொள்கைப் பற்று, வெறும் எழுத்து, பேச்சோடு நின்று விடுவதல்ல.  செயல்,  செம்மையான செயல் என்பதன் மூலமே ஒளிவீசித் திகழ்கிறது.  அவரது ஆற்றல்,  பல்துறை ஆற்றல். செய்திகளை நல்ல தமிழாக்கம் செய்து அவர் மேடையில் நின்று முழங்கினால் அது முதன்மைப் பேச்சாளரின் பொழிவுக்கே அணி சேர்க்கும்.

சாவிலும் பறிக்க முடியாத ஒன்று

    ஆய்வுத் துறையில் அவரது தலைசிறந்த படைப்பு, காலத்தால் அழிக்க முடியாதது - சாவிலும் பறிக்க முடியாத ஒன்று.  அவரது ஆய்வு நூலான ”இதழாளர் பெரியார் ” என்ற நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான உரைக் கொத்து.  40 ஆண்டுகளுக்கு மேலான நட்புறவில் நிகழ்ந்த எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அடுக்காக நினைவில் வந்து நின்று நம் வேதனையை, தாங்கொணாத் துயரத்தைப் பெருக்குகிறது.

கொள்கைச் சிங்கத்தை ஆழிப் பேரலை அடித்துச் சென்று விட்டதே!

    பாழும் நோய்,  எங்கள் கொள்கைச் சிங்கத்தை இப்படி ஆழிப் பேரலைபோல் அடித்துச் சென்று விட்டதே! என்றும் மாளாத் துயரத்தில், மீளாத் துன்பத்தில் உள்ள நிலையில் எங்களைவிட நேரடியாக பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள திருமதி திருமகள் இறையன் அவர்களுக்கும், அவர்தம் அன்புச் செல்வங்களுக்கும் எப்படித்தான் ஆறுதல், தேறுதல் கூறுவது!  நாம் பகுத்தறிவாளர்கள் எந்த இழப்பையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பெற்றவர்கள் என்பதால்,  எதைத் தவிர்க்க இயலாதோ அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர, என்னதான் தீர்வு?

இறையனாருடன் தொலைபேசியில் பேசினேன்

    கடந்த வாரம்தான் தஞ்சையில் இறையனார் தங்கியிருந்தபோது, நாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தபோது, இப்படி ஒரு செய்திக்கு யாரும் தயாராகவில்லை.  தொண்டருக்குத் தொண்டர் என்று எண்ணியே நாளும் கடமையாற்றிடும் நானும், என் வாழ்விணையரும் இப்போது சென்னையில் இருந்து அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கடமையாற்ற இயலாது காலம் சதி செய்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தைப் பிழிந்தெடுக்கிறது.

நம்பிக்கை,  ஏமாற்றம்

    நம் கருஞ்சட்டைக் குடும்பம் கடமையாற்றும் என்பதுதான் இதில் ஒரு சிறு ஆறுதல்.  அவரிடம் நாங்கள் விடைபெற்றுக் கொண்டு பயணமானபோது அதுவே அவரது பிரியா விடையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  காரணம் நம்பிக்கை!  ஏமாற்றம்தான் என் செய்வது!

கண்ணீரை உகுக்கிறேன்

    அவருக்கு இயக்கத்தின் சார்பில் தலைதாழ்ந்த வீரவணக்கம் கூறுகிறோம்.  அவரது தொண்டறத்தால் அவர் மறைய மாட்டார்.  நம் ஒவ்வொருவரின் இதயங்களில் நிறைந்து இயக்க வரலாற்றின் இணையற்ற பொன்னேடாகத் திகழ்வார்;  திகழ்ந்து கொண்டே இருப்பார்!

                                      கண்ணீர் மல்க வழியனுப்பும் உயிர்த் தோழன்,
கி. வீரமணி,
தலைவர்,
               திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment