Saturday, December 18, 2010

இயற்கையின் அழைப்பை ஏற்றார் இறையன்

விலைபேச             முடியாத             இமய            மென்றே
விழாவெடுத்தோம்        புகழ்ந்துரைத்தோம்        இன்றோ        நீங்கள்
நிலையாமை            நிலைத்ததென்ற        குறட்            கருத்தை
நினைவூட்டிக்            கண்மூடித்            துயில்கின்        றீரோ

அலைகடலும்        மாஉலகும்            வணங்கி        வாழ்த்தும்
அய்யாவாம்            பெரியாரைக்            காண்ப        தற்கே
அலைகடலாய்ப்        புகழேந்திப்            புறப்பட்        டீரோ ?
ஆசானாய்            இயற்கையுமை        அழைத்த        தாமோ ?

அய்யாவாய்            வீரமணி            ஈங்கிருக்க
அவர்துணையை        மறந்தோராய்            ஏன் துயின்றீர் ?
பொய்யானோர்        குவிகின்றார்            என்பதாலா ?
புதுவாழ்வைத்        தேடுதற்கே            புறப்பட்டீரோ.
           
நெய்வடியும்            உம்பேச்சில்            நெற்கதிர்கள்
நிறைவளமாய்க்        கொட்டுமுன்றன்        பேரெழுத்தில்
வெய்யோனும்        வெண்ணிலவும்         உம்மிழப்பை
விரும்பாமல்            தேம்பியழும்.            துயில்வதேனோ ?

திருமகளை            உம்வாழ்வின்            துணையாய்ப்         பெற்றும்
திரும்பாத            ஊருக்குப்            பயணம்        ஏனோ ?
மருமகன்கள்            மகன்களாகக்            கிடைத்திருந்தும்   
மறந்தவரைப்            பிரிந்தீரே,            ஞாயந்தானா ?   
   
பெருமகளாய்            உம்மகள்கள்            பெருமை        சேர்த்தார்
பெரியாரை            உம் வழியே            பற்றி            வந்தார்.
ஒரு மகனாம்        இசையின்பன்        பேத்தி            பேரன்
உமக்கென்ன            குறையய்யா ?        உறங்கி        விட்டீர்.   
எண்திசையும்        பெரியாரின்            புகழ்            கிடக்கும்
எத்திசையில்            இறையன்நீர்            தேடச்            சென்றீர்.
விண்திசையில்        நீர்போந்து            தமிழர்            வாழ்வை
வித்தூன்றி            வளர்ப்பதற்கே        விரும்பி        னீரோ.

மண்திசையில்        தமிழரெலாம்            மானம்        விற்றார்.
மறந்தவரை            நீங்கிடுவோம்            என்றா            சென்றீர் ?
புண்தசையாம்        உடலென்று            வெறுத்தொ        துக்கிப்
புகழுயராய்            வாழ்வதற்கு            முடிவா        செய்தீர்.   

                   
                                                    -கவிஞர்  அரிமா.


No comments:

Post a Comment