இறையன், இனநலம், தமிழாளன், நாடகன், பொருநன், பெரியார் மாணாக்கன், மாந்தன், பாணன், வேட்கோவன், சான்றோன், அறிவேந்தி, கிழவன், வழக்காடி, பிடாரன், சுவைஞன், சீர்தூக்கி, பூட்கையன், செய்தி வள்ளுவன் போன்ற பல புனைபெயர்களில் திராவிட இயக்க இதழ்களில் எழுதி வந்த இவரின் இயற்பெயர் கந்தசாமி என்பதாகும். மதுரையில் இராமுத்தாய் - அழகர்சாமி ஆகிய பெற்றோரின் மூத்த மகனாய் 4.6.1930 அன்று பிறந்து, திண்டுக்கல்லில் வளர்ந்து, இன்று, தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் தலைமையகத்தில் இயற்கை அழைத்துக் கொள்ளும்வரை (12.08.2005 வரை) பொறுப்பாற்றிய இவரின் வாழ்க்கை குறிப்புகள் பல்சுவை வாய்ந்தவை.
அமெரிக்க கிறித்தவத் தொண்டற நிறுவனத்தின் (A.M.C.C.) தொடக்கப் பள்ளியில் தன் அய்ந்தாம் ஆண்டகவையில் முதலாம் வகுப்பில் சேர்ந்த இவரின் இசையுணர்வு, கலையார்வம், வாயாடும் இயல்பு, எதனையும் உடனடியாகப் புரிந்தேற்கும் திறன் முதலியவற்றைக கண்டுகொண்டனர் ஆசிரியப் பெருமக்கள்.
எனவே, படிப்பு, பாட்டு, நடிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பிலிருந்தே இவருக்கு நிறையப் பயிற்சி அளித்து, கல்லி யெடுத்து வெளிக் கொணருதல் என்னும் நற்கடமையை அக்கறையுடன் நிறைவேற்றிய ஆசிரியப் பெருமக்கள், இவர் அய்ந்தாம் வகுப்பு முடித்து வெளியேறுவதற்குள், கல்விக் கூறுகள் எல்லாவற்றிலும் நல்ல தேர்ச்சி பெற்ற முதல் தர மாணாக்கனாக இவரை உருப்படுத்திவிட்டனர். இவ்வண்ணம், இவரின் பிற்கால நடவடிக்கைகளுக்கெல்லாம் வித்திட்டு நீரூற்றியவர்கள் சான்றோர்களாகிய ஆசான்மாரே.
இவரின் இயல்பூக்கங்கள் பண்படுவதற்கு அறிவியல் அடிப்படையிலான மரபியல்கூறும் ஒரு காரணியாய் அமைந்தது. இவரின் குடும்ப முந்தையர்கள் அய்ந்தொழிலாளர்கள் ஆவர். தொழிற் புலமைக்காகப் பல தங்கப் பதக்கங்கள் பெற்றவர்கள். இவரின் அன்னையாரும் இனிமையாகப் பாடுவார். எனவே, மரபியல், சூழ்நிலை இரண்டு வாய்ப்புகளுமே சிறப்பாக அமைந்து இவரை சமைத்தன.
” லேடீஸ் க்ளப் ” என்னும் மகளிர் மனமகிழ்மன்றம் (சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நாட்டில் உருவான நகர நாகரிகத்தின் ஒரு கூறு அவ்வமைப்பு ), திருமண விழாக்கள் போன்றவற்றுக்குப் பலரும் இவரை அழைத்துச் சென்று பாடி - நடிக்க வைத்ததால், தயக்கமின்றி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும் கூச்சமற்ற சிறுவனாக - பின்னர் விடலையாக - இவர் வளர முடிந்தது. இச்சூழ்நிலையில் இவரின் தந்தை இவர் அய்ந்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருக்கும் கட்டத்தில், திடிரென்று ” உறார்மோனியம் ” என்னும் இன்னிசைத் துருத்தியை இவரிடம் கொண்டுவந்து கொடுத்து, ” ஆசிரியரொருவரை ஏறபாடு செய்யும்வரை தானாகவே கற்றுக் கொண்டுவா ” என்று ஊக்கப்படுத்தினார். ”விழுந்து எழல் ” (Trial and Error ) முறையில் ”ஙொய்யா ஙொய்யா பையா ” என அழைக்கப்படலானார்.
அதே பள்ளிப் பருவத்திலேயே இவர் பல்வேறு பட்டறிவுகளுக்கு இலக்காக நேர்ந்தது.
மூன்றாம் வகுப்பில் இவர் இருந்தபோது ஒரு முறை தன் தந்தையிடம் ”வண்ணான் வந்தான் ” எனக் கூற நேர்ந்தது. இவர் கன்னத்தில் ஓங்கி அறைந்த இவரின் அப்பா, ”வந்தார் என்று சொல் ” எனக் கண்டித்து விளக்கமாக அறிவுரை சொன்னார்.
இவருடன் அய்ந்தாம் வகுப்பில் பயின்ற ஆதிதிராவிட மாணவர்களை இல்லததிற்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் உட்கார விரிப்புத் துணியோ, பாயோ எடுத்துப் போட இவரின் அம்மா தயக்கம் காட்ட, அவருடன் கடும் சொல்லாடலில் இறங்கி விடாப்பிடியாக நின்று, தன் நிலைப்பாட்டில் இறுதியாக வென்றார். இவரின் தந்தையின் தீர்ப்பு இவர் பக்கம் இருந்தது.
கீழை நாடுகள் சென்று நிறைய உறைவகங்களும் வளமனைகளும் படைத்து ஊர் திரும்பிய இவரின் பெரியப்பாவின் கடைசல் பட்டறைத் தட்டிகளின்மீது ஒட்டப்பட்டிருந்த ” விடுதலை” இதழ் களை நோக்க நேர்ந்த இவர், அவற்றில் காணப்பட்ட புதுமுறை எழுத்துக்கள் பற்றிப் பெரியப்பாவிடம் முழுமையான விளக்கம் கேட்டு, அதன் நியாயத்தை அப்போதே உணர்ந்தவரானார்.
இவவாறு சிறுவனாக இருந்தபோதே பெரியார்ப் புரட்சியின் பாதிப்புகளுக்குத் தன்னை அறியாமலேயே இலக்கானார். அப்பாதிப்புகள் பிற்காலத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளாக வளர்ந்து இவரை அறிவாசான் அய்யாவின் பாசறைக்கு இட்டுச் செல்லுவதில் பங்காற்றியுள்ளன.
இவர் பயின்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதாலும், அன்பர் ஒருவரிடம் தனிப்பாடம் கேட்டதாலும் திண்டுக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இவர் எளிதாக சேர முடிந்தது. ஆறாம் படிவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு வரையிலும், படிப்பிலும் முதல் மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார். விளையாட்டுகளில் நிறைய ஆர்வம் காட்டிய இவர் வெளியூர்கட்கெல்லாம் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டார்.
அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கிய-சொல்லாடல் மன்றம் (Literary and debating Society ) என்ற ஒன்று அமைக்கப்பட்டு, மாணவர்கட்கு ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்சி தரப்பட்ட நிலையில், இவர் அதை நல்ல வண்ணம் பயன்படுததிக் கொண்டு சொல்லாற்றல், எழுத்தாற்றல், நடிப்பாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டார். பள்ளி போட்டிகளிலும், கலந்து கொண்டு நிறையப் பரிகள் பெற்றார்.
இவர் நான்காம் படிவம் என்னும் ஒன்பதாம் வகுப்பில் (1944-இல்) படித்துக் கொண்டிருக்கையில் தமிழிசை இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் நிறுவப்பட்ட தமிழிசைச் சங்கத்தில் சேர்ந்து முறைப்படியான தொல்லிசை பயின்று, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருள் முதல் மாணாக்கனாகத் தேர்ந்து, வெள்ளிக் கோப்பைகளும், வெள்ளிப் பதக்கங்களும் வென்றார். தொடர்ந்து எட்டாண்டுகள் தொல்லிசையில் ஆழமான பயிற்சியை இவர் பெற்றமை அவ்வப்போது பிற்காலத்தில் பயன்படவே செய்தது.
தமிழிசை பயின்று கொண்டிருந்த காலத்தில் பார்ப்பனப் புன்மை பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இவருக்குக் கிட்டின.
திண்டுக்கல்லில் பார்ப்பனர் நடத்திக் கொண்டு வந்த ” யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் ” எனும் ”சபா” வின் சார்பில் நிகழ்ந்த ” கச்சேரி ” களின் தமிழ்மொழித் தீண்டாமை - ” சபா ” வில் பாடிய அதே இசைப் பெருங்கலைஞர்கள் தமிழிசை மேடையில் இசைக்க வந்தபோது வெளிக்காட்டிய அநாகரிகப் பண்புகள் -
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் திண்டுக்கல் ” அங்குவிலாஸ் ” பளிங்கு மாளிகைக் கண்ணாடி அரங்கத்தில் பாடவந்த பார்ப்பனரல்லா இசைப் புலவர்களுக்கு இவர் அணுக்கத் தொண்டனாகப் பணிபுரிந்து அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட கலையுலகம் பற்றிய கருத்துக்கள் -
பார்ப்பனர்களுடன் பல போட்டிகளில் இவர் கலந்துகொண்டபோது உயர்ந்த மதிப்பெண்களை இவர் ஈட்டினாலும் உரிய பரிசுகள் இவருக்கு வழங்கப்படாமல், பார்ப்பன இளைஞர் சார்பாகக் காட்டப்பட்ட பாகுபாடு போன்றவை இவரின் மூளைத் திரையில் அழுத்தமாகப் பதிந்தன.
பதிவுகள் உறுதியாக நிலைக்க வேண்டுமே . திண்டுக்கல் தமிழிசை விழாவில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணாவின் ஆழமான விளக்கவுரை அதைச் செய்தது. ” தமிழன் தமிழிசையை வெறுக்க மாட்டான். வெறுப்பவன் தமிழனாய் இருக்க மாட்டான் ” என்னும் கி.ஆ.பெ.வின் ஒலி முழக்கத்திற்கும் அதில் பங்குண்டு.
ஒரு முழுமையான தமிழின உணர்வாளன் கருவாகி உருவாகத் தொடங்கிவிட்டான். ஒவ்வொரு ”குடிஅரசு” இதழின் எழுத்துக்களும் ” திராவிடநாடு ” ஏட்டின் கருத்துக்களும் இவ்விளைஞனால் மேயப்பட்டன, ஆயப்பெற்றன.
உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் பயின்று கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் இனவுணர்வுத்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த இவர் பொதுவுடைமை இயக்கப் பாதிப்புக்கும் இலக்காகியிருந்தார். இவர் வாழ்ந்து வந்த பகுதி ” குறவன் பள்ளம் ” என்னும் பாட்டாளிகளின் குடியிருப்புகளை அடுத்ததாகும். சுருட்டு சுற்றுதல், சுவைப் புகையிலைச் சிப்பமிடுதல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்த உழைப்பாளிகளிடையே பணியாற்றிய பொதுவுடைமைக் கட்சி முன்னோடிகளுடன் நன்கு உறவாடிய இவர் இந்திய மாணவர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். பொதுவுடைமை தொடர்பான நூல்களையும், இதழ்களையும், சிற்றேடுகளையும் ஆழமாகப் படித்தார். அப்படிப்பு பின்னர் தந்தை பெரியாரின் கோட்பாடுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப் பேருதவியாய் இருந்தது. பிற்காலததில் திண்டுக்கல் மலைக்கோட்டைப் பூங்காவில் அடிக்கடி பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுடன் அமர்ந்து சொல்லாடல் நிகழ்த்துவதற்கு அவர் முன்னர் பயின்ற பொதுவுடைமை இலக்கியங்கள் தகுந்த சான்றுகளாய் அமைந்தன.
இத்தகைய பட்டறிவுகளால் இவருக்கு ஒரு பெரும் உண்மை தெளிவாயிற்று. அதாவது பொதவுடைமைக் கொள்கைகளைப் பெரியார் ஏற்றுக் கொள்ளுகிறார். மேலும் சிறப்பான சிலவற்றைக் கூறுகிறார். ஆனால் பொதுவுடைமையாளரோ, பெரியாரின் இன்றியமையாக் கொள்கைகட்கு ஏற்பிசைவு தர மறுக்கின்றனர். ஓர் உண்மையான பொதுவுடைமைக் கொள்கையாளரை ” பூர்ஷ்வா ” எனக் கொச்சைப் படுத்துகின்றனர். ” ஏன் ” எனும் பெருவியப்பு இவருக்கு.
உயர்நிலைப் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு (1947- மார்ச் ) எழுதிய இவரின் எண், தேர்வு முடிவுகளில் அச்சேறவில்லை. அப்படியானால் தோல்வி என்றுதானே பொருள்? ” தேறாமை ” க்கான காரணம் இவருக்குப் புரியவில்லை. கற்பித்தவர்கட்கோ கற்பனை செய்யவே முடியவில்லை. மீண்டும் இவர் அதே பள்ளியில் இறுதி வகுப்பில் தலைமையாசிரியரின் நல்லெண்ணத்தின் உதவியால ” மீள்பயில் மாணாக்கனாக - Supplementary Student ” சேர்ந்து பயிலத் தொடங்கிவிட்டார்.
ஒரு வெறியோடு காலாண்டுத் தேர்வுக்காக இவர் அணியமாகிக் கொண்டிருந்தபோது, - ஆம், மூன்றரை மாதங்கழித்து - ”கந்தசாமி அரசுப் பொது தேர்வில் வெற்றியடைந்து விட்டான் ” என்னும் செய்தி தலைமையாசிரியருக்குத் கிடைத்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படிப்பு அவ்வளவுதான்.
” சிரிப்பதா? அழுவதா ? என்னும் நிலை இவருக்கு. நம்நாட்டை நாமே ஆளத் தொடங்கியதன் உடனடிப் பயன் இது. ஆனால், அதுவும் ஒரு நன்மையை விளைவித்தது. இவரின் இயல்புகளுக்கும் விருப்பங்களுக்கும் பொருத்தமான ஆசிரியர் பணியை மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பாக அது அமைந்தது.
அக்கல்வியாண்டு முடிந்ததும், ஆசிரியர் பயிற்சிக்காக இவர் கோரிக்கை அனுப்ப, அடுத்த கல்வியாண்டில் (1948) திண்டுக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே பயில மாவட்டக் கல்வியதிகாரியின் ஆணை கிடைத்து விட்டது.
பயிற்சி நிறுவனத்தில் இவர் சேருங்காலத்திற்குள் ஒரு முதிர்ச்சியுள்ள திராவிடர் கழக இளைஞனாய் ஆகிவிட்டிருந்தார். எனவே, ஆசிரிய மாணாக்கன் என்னும் அந்தத் தகுதியை எய்தியவுடனேயே இவர் ஆற்றிய முதல் வினையே திராவிடர் மாணவர் கழகம் நிறுவியமைதான்.
பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் அன்றாடம் காலை மாணவர் கூடலின்போது பாடப்பட்டுவந்த ” வாழிய செந்தமிழ் ” எனும் பாடலை இசை கற்றவராகிய இவர் முற்படப் பாட வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.
சுப்பிரமணிய பாரதியின் பல்வகைப் பாடல்களையும் பயின்று, போட்டிகளில் பங்கேற்று நிறையப் பரிசுகள் வாங்கிய இவர், அப்பாடலில் இடம் பெறும் ” ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் ” என்னும் வரி பற்றி முனைப்புடன் கருதி, பயிற்சியில் சேர்ந்திருந்த மாணவர்களின் குறிப்பிட்டவர்களை அழைத்து ( ஆசிரிய மாணாக்கர்களின் பெரும்பான்மையோர் பெரியார் இயக்கச் சார்பாளர்கள்) கலந்தாய்வு செய்தார்.
தன்னை முன்பாட்டிசைக்க நிறுத்துவார்களேயானால், ” ஆரிய நாட்டினர் ” எனும் வரிக்கு மாற்றாகச் ” செந்தமிழ் நாட்டினர் செம்மையோடியற்றும் ” என்பதாகத்தான் முன் எடுத்தத் தர, தோழர்களெல்லாம் அவ்வாறே பின்பாட்டாக இசைக்க வேண்டும் என இவர் திட்டம் தந்தார்.
மறுநாள் காலை கூட்டம் தொடங்கியபோது, எதிர்பார்த்தபடியே இசையாசிரியர் இவரைத் திரும்பத் திரும்ப வற்புறுத்த, திட்டமிட்டபடியே இவர் முன்பாட்டிசைக்க, பாதி மாணவர்கள் ” செந்தமிழ் நாட்டினர் செம்மையோடியற்றும் ” என்று பிற்பட்டுப் பாட, மீதியான தேசிய மாணவர்கள் ” ஆரிய நாட்டினர் ” என்றே பாட, அதன் விளைவாகப் பரபரப்புச் சூழ்நிலை உருவாகி, அச் செய்தி ”வீடுதலை” யிலும் வெளியாகிவிட, அச்சிக்கல் பற்றிச் சென்னை அரசு சிந்தித்து, அப்பாடலின் முதலிரண்டு வரிகளும் கடையிரண்டு வரிகளும் பள்ளிகளில் பாடப்பெற்றால் போதுமென ஆணை வழங்க நேர்ந்தது.
பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1948-ல் ஈரோட்டில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஏற்கெனவே திண்டுகல்லில் இவரின் நடவடிக்கைளைக் கவனித்திருந்த ”டார்ப்பிடோ” ஏ.பி. சனார்த்தனம் அவர்களால் கி. வீரமணி, மு.கருணாநிதி ஆகிய அன்றைய இளம் முன்னோடிகளிடம் ” இவர் இயக்கத்திற்கு நன்கு பயன்படுவார் ” என அறிமுகப்படுததப் பெற்றார். அப்போதிருந்து, இயற்கை தன்னை அழைத்துக் கொள்ளும் வரையிலும், தமிழகத்தில் கழகச் சார்பில் நடைபெற்றுள்ள பெரிய மாநாடுகள் அனைத்திற்கும் சென்று கலந்திருக்கிறார்.
1949-இல் நிகழ்ந்த விரும்பத்தகா வெளியேற்றங்களின்போது, ஆசிரியர் பயிற்சி மாணவராக இருந்த இவர், அய்யாவின் விளக்கங்களை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு, உணர்ச்சிக்கடிமையாகாது, அறிவின் ஆட்சிக்கு இலக்கானவராய் - அய்யாவின் கழகத்தில் ஊன்றி நின்றார்.
மேலும், திண்டுக்கல் திராவிடர் கழகத்தையே முற்றிலுமாகக் கலைத்துவிட வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியோரிடம், ” கழகத்தைச் சார்ந்து கடைசியாக ஒரேயொரவர் இருந்தாலும் அவரிடம் பிறர் பதவி விலகல் மடல் கொடுத்துவிட்டு வெளியேறிவிட வேண்டுமே யொழிய கழகத்தையே கலைப்பதாகக் கூறுவதை ஒப்பமாட்டோம் ” என்று உறுதி காட்டியதுடன், புதிய நிருவாகக் குழு ஒன்றை அரும்பாடுபட்டு அமைப்பதில் பெரும்பங்காற்றினார்.
அத்துடன் அய்யா-அம்மா திருமண ஏற்பாட்டை வரவேற்கும் முறையில் திண்டுக்கல்லுக்கு அவர்களை வரவழைத்து மாபெரும் கூட்டமொன்றை மாணவர் கழகத்தின் சார்பில் நடத்திக் காட்டினார்.
திராவிடர் மாணவர் கழகத்தில் தொண்டாற்றிக் கொண்டே YMDA எனும் திராவிட இளைஞர் விளையாட்டுக் கழகம் அமைத்து, வளைப்பந்து, (Tennikoit) உதைபந்து (Foot ball) ஆகிய விளையாட்டுகளில் நம் இளைஞர் பயிற்சி பெறச் செய்து, பல போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப் பெற ஏற்பாடு பண்ணியவர் இவர்.
ராஜகோபாலாச்சாரி புதிய கல்வி என்ற பெயரில் ” குலக் கல்வித் திட்டம் ” கொண்டுவந்த போது உயர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த இவர் அக்கல்வித் திட்டத்தை மறுத்து ஆசிரியர்களின் ஆய்வுக் குழுக்களில் குரல் கொடுக்க தயங்கவில்லை.
அதே ஆச்சாரியார், ஆடசியின்போது அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பெற்ற இவர், ” அ. கந்தசாமி, ஆசிரியர், அரசர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி, பறமக்குடி ” என்னும் முகவரிக்கு ”விடுதலை” வரவழைத்து, பார்ப்பன ஆசிரியர்கள் உட்பட ஆசிரியரனைவரையும் படிக்கச் செய்தார்.
பறமக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கழகக் கிளைகளைச் செம்மைப்படுத்துவதற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், என். ஆர். சாமி ஆகிய முகவை மாவட்டத் தலைவர்கட்குப் பெருந்துணை புரிந்தார் இவர்.
சில ஆண்டுகளிலேயே நிலையுயர்வு வழங்கப்பட்டு, பள்ளி ஆய்வாளராய்த தேவகோட்டைக்கு அனுப்பபட்ட இவருக்கு ஆசிரியருலகிலும், அரசு அதிகாரிகளிடத்திலும் நற்பெயர் கிட்டியது.
பெரியார் நெறியைப் பின்பற்றிய இவர் ஆசிரியர்கட்கு உயர்ந்த மதிப்பளித்து (கல்வியதிகாரிகளை ”எஜமான்” என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர்கள் வாழ்ந்த காலமது ) அவர்களுடன் தோழராக, ஊக்குவிக்கும் வழியாட்டியாகப் பழகிய இவரது பான்மை ஆசிரியர்களிடையே வியப்பு, தன்மதிப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தோற்றுவித்தது.
அக்காலத்தில் முதியோர் கல்வி என்னும் பெயரில் நடைபேற்ற இரவுப் பள்ளிகளைத் திடீரென்று பார்வையிடச் சென்று ஊர்மக்கள் கூடலுக்கு ஏற்பாடு பண்ணிக் கல்வியின் இன்றியமையாமையைப் பயன் கூட்டும் வண்ணம் எடுத்துரைத்த இவரின் பொறுப்புணர்ச்சி, அக்காலத்திய அய்ந்தாண்டுத் திட்டங்களைப் பரப்புவதில் இவர் காட்டிய பேரார்வம் ஆகியவற்றால் கல்வித்துறை மேலதிகாரிகள் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியாளர்களும் இவரைப் பாராட்டி, காமராசர் அரசுக்கு அறிக்கைகள அனுப்பினர்.
தேவகோட்டை, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்மாப்பேட்டை (தஞ்சை), குளித்தலை, மாயனூர், சீர்காழி, திருவாடானை, (தேவகோட்டை), திருப்பூர், குடிமங்கலம், பல்லடம் ஆகிய வட்டாரங்களில் கல்வி ஆய்வாளராகவும், கீழக்கரை, பறமக்குடி, கோடைக்கானல், சேயூர், கோடம்பாக்கம்(சென்னை) முதலிய ஊர்களில் அரசுப் பள்ளிகளின் துணை ஆசிரியராகவும், திண்டுக்கல், குருக்கத்தி, மேலூர், அமராவதி புதூர், ஆகிய ஊர்களில்ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநராகவும், பாடியநல்லூர் (செங்குனறம்) ஆண்டார்குப்பம், அன்னை சிவகாமி நகர் ஆகிய ஊர்களில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராயும் கல்வித் துறையின் பல நிலைகளிலும் பணியாற்றிப் பட்டறிவு நிரப்பினார் இவர்.
இப்பணிகட்கிடையே இவர் ” இளங்கலை” ப் பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கல்வித்துறையின் இசைவு பெற்றுப் படித்து, பயிற்றுவித்தலில் பட்டம் (Bachelor of Teaching-English and Tamil ) எய்தினார்.
கல்வித்துறையால் இவர் பெங்களூரிலுள்ள ”Regional Institute of English ” எனும் நிறுவனத்தில் முழுமையான சிறப்பு பயிற்சி பெற அனுப்பப்பட்டார். ” British Council ” பேராசிரியர்களிடம் உயர்தரப் பயிற்சி அங்கு இவருக்குக் கிட்டியது. இக்கல்லூரிகளிலெல்லாம் பாடம் கற்பிப்பதில் முதன்மைத் தகுதியாளராகவே இவர் வைக்கப்பட்டார். அவ்வாறு இவர் எய்திய தகுதி நம் இயக்கத்திறகு அவர் இயற்கை எய்தும் காலம் வரை பயன்பட்டு வந்துள்ளது.
தொடக்கத்தில் கிறித்துவப் பள்ளிகளிலும் பின்னர் அரசுக் கல்வித் துறையின் பல பிரிவுகளிலுமாக 38 ஆண்டுக்காலப் பணிகளின்போதும் தான் ஒரு பெரியார்க் கொள்கையாளன் என இனங்காட்டிக் கொள்ள இவர் தயங்கியதே கிடையாது.
தொடக்கத்தில் கிறித்துவப் பள்ளிகளிலும் பின்னர் அரசுக் கல்வித் துறையின் பல பிரிவுகளிலுமாக 38 ஆண்டுக்காலப் பணிகளின்போதும் தான் ஒரு பெரியார்க் கொள்கையாளன் என இனங்காட்டிக் கொள்ள இவர் தயங்கியதே கிடையாது.
நடைமுறை வாழ்க்கையிலும பெரியாரின் தமிழெழுத்துச் சீரமைப்பு நெறியையே கையாண்ட இவர், கல்வியதிகாரி எனும் நிலையில் பள்ளிகளில் ஆய்வுக் குறிப்புகள் பதிவு செய்தபோது ” பெரியார் எழுத்துக்களைக் கையாளுகிறீர்களே ” என்று வினவியோர்க்கு, ”என் வரையில் பெரியார் எழுத்துக்களே பொருத்தமானவை - இயற்கையானவையாகும். நீங்களும் இதை இப்போது பின்பற்ற வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. ஆனால், பிற்காலத்தில் இதைத்தான் நீங்கள் ஏற்றுக் கற்பிக்கப் போகிறீர்கள் ” என்றார். அவையே உண்மையாகி, தமிழக அரசால், பெரியார் எழுததுச் சீர்திருத்தம், ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனைவராலும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.
சிறுவனாக இருந்தபோது இவரின் பெரியப்பாவின் பட்டறையில் அன்றாடம் ” விடுதலை ” எழுத்தகளை நோக்க நேர்ந்த இவர் அவ்வெழுத்துக்களையே அன்றாடம் எழுதவும் நேர்ந்தது.
சில சிற்றூர்ப் பள்ளிகளில் ஆதித்திராவிட பழந்தமிழ்க்குடிக் குழந்தைகள் பிரித்து அமரவைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகளை - தலைமையாசிரியர்களிடம் நயமாகவும், சட்டப்படி வற்புறுத்தியும், சரி செய்ய முனைப்புக் காட்டினார்.
பிகானீரிலிருந்து வந்த கல்வித் தூதுக்குழுவினர், தமிழகக் கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை இராமேசுவரம், திருவெண்காடு, வைத்தீசுவரன் கோவில் முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ”கடமை” வாய்த்தபோது, பிற ஏற்பாடுகளைக் குறைவற முறையாகச் செய்து முடித்துவிட்டு, ”மன்னிக்க வேண்டும், நான் இதில் நம்பிக்கை இல்லாதவன், நீங்கள் உள்ளே சென்று திரும்புகின்றவரை நான் இங்கே - மண்டபத்திலேயே காத்திருக்கிறேன் ” எனத் தயங்காமல் கூறியவர் இவர். இவரின் தலைமைக்கு இலக்கான பள்ளிகள் - பணிமனைகளில் சமயம் தொடர்பான எவ்வகை நிகழ்ச்சியும் நடவாதவாறு இவர் செய்தார்.
மாதந்தோறும் நடைபெறும் ஆசிரியரவைக் கூட்டங்களில் இவர் ஆற்றிய பகுத்தறிவுப் பொழிவுகள் பிற வட்டார ஆசிரியர்களிடத்தும் தாக்கம் விளைவித்தன.
பள்ளி விழாவில் பங்குபெற வந்த அடிகளாரிடம் சமய நம்பிக்கையாளர்கள் வழமைப்படி “ திருநீறு ” ஏந்திப் பெற்றுக் கொண்ட நிலையில், அவரின்பால் பெருமதிப்புக் காட்டி வணக்கம் தெரிவித்த இவர், திருநீறு மட்டும் வாங்காது தவிர்த்துக் கொண்டதன் பயனாக இருவரும் எடுத்துக்காட்டான அன்பர்களாகிவிட நேர்ந்தது.
திருப்பத்தூர் (காரைக்குடி), விருத்தாசலம் ஆகிய ஊர்களில் அடிகளார் பொறுப்பில் நிகழ்ந்த மதம், கடவுள் பற்றிய பட்டிமன்றங்களின் இவரும் பங்காற்றும் அரிய நல்வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததுடன், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பறங்கிமலைப் (பிரான்மலை) பாரியாக அமர்ந்து நாற்பத்தொன்பது புலவர்க்குப் பரிசில் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த அடிகளார் இறைவன் நம்பிக்கையற்ற இறையனைப் பற்றி பரிசில் பெறும் ஒரு புலவராய் பங்கேற்கச் செய்தார்.
அய்யா அவர்கள் 1957 -இல் சிறைப்படுத்தப்பட்டுச் சென்னை - பொதுமருத்துவமனையில் இருந்தபோது, சென்னைக்கு வந்த இவர் அன்னை மணியம்மையாரின் ஏற்பாட்டில் அய்யாவுக்கு உணவு கொண்டுபோகும் தோழருடன் சென்று அய்யாவைக் கண்டார்.
ஆய்வாளராகப் பணியாற்றிய இவர் கையூட்டை (அப்பதவியில் அதற்கான வாய்ப்பு நிறைய உண்டு ) இறுதிவரை மறுத்து வாழ்ந்து காட்டிய பூட்கைப் பெருமிதத்திற்கு உரியவர், அன்பளிப்பு என்னும் பெயரால் பொன் - பொருள் ஆகியவை இவரை நாடி வந்த வாய்ப்புகளின்போது மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.
அரசுப் பணியில் இருக்க நேர்ந்தாலும் இவர் அய்யாவையே எண்ணி வாழ்ந்த கொள்கையாளர் என்பதை ஒளிபாய்ச்சிக் காட்டும் சிறப்புச் செய்தி ஒன்றுண்டு. அதுதான் அய்யாவின் கொள்கைப்படி இவர் தன் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்து பற்றிக் கொண்டமை.
அய்யாவின் கொள்கைகளே இவ்வுலகை ஆள வேண்டியவை என்பதிலே அசைவிலா ஊக்கம் படைத்தவராய், அய்யாவின் அருங்கோட்பாடுகளைப் பரவச் செய்வதில் தன்னால் இயன்ற பங்களிப்பு என்னவாக இரக்க முடியும் என்பதுபற்றிப் பல ஆண்டுகளாகக் கருதிக் கருதிப் பார்த்த இவர் சாதியொழிப்பு மணம் செய்து கொள்ளுவதே, சாலும் எனும் முடிவுக்கு வந்து, அது பற்றித் தன் தோழர்களுடன் கலந்தாய்வு நடத்தியிருந்தார்.
பறமக்குடியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டத்தில் அவ்வூரில் திராவிடமுன்னேற்றக் கழக நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்த, ஏற்கெனவே இவருடன் பழக்கப்பட்ட - நண்பரின் மருமகள் இலட்சுமி (பின்னர் திருமகள் ஆகிவிட்டார்) அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த மாணவி. இராமநாதபுரம் சேதுபதி குடும்ப உறவினரான அவர் இவரின்பால் காட்டிய பற்றும், பரிவும் இவருக்கு அவரின்மீது நல்லுணர்வும் நம்பிக்கையும் தோற்றுவித்தன.
அய்ந்தாண்டுக் காலம் பொறுத்திருந்து ஒருவருக்கொருவர், நன்றாகப் புரிந்து கொண்டு எந்தக் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும் எனும் உளத்திண்மையும் பூண்டு, அச்சுறுத்திய எதிர்ப்புகளையெல்லாம் திட்டமிட்டு வென்று, 10.03.1959 அன்று இருவரும் துணைவர்களாக - இணையர்களாக - திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களுடன் தந்தை பெரியாரின் முதற்கொள்கையான ” ஜாதி ” யொழிப்புக்குப் பங்களிப்புச் செய்த வீரர்களாயினர். அன்றைக்கே இருவரும் ” எங்களின் இணைப்பைக் காதல் திருமணம் என்று குறிப்பிடாதீர்கள் இது சாதியொழிப்புக் குறிக்கோள் மணம் ” என்று அறிவிப்புச் செய்தனர். இவர்களின் இணைப்பு தற்செயலாக நேர்ந்த ”ஜாதி”க் கலப்பு மணமன்று. இவர்தம் பிற்கால நடவடிக்கைகள் இவ்வுண்மையினை நிலைநிறுத்துபவை.
இவர்களின் மக்கள் பண்பொளி, இறைவி, மாட்சி ஆகிய மூன்று பெண்களுக்கும் இவரிருவரின் ”ஜாதி” களையும் சேராதோரைக் கணவர்களாய் ஆக்கிவைத்துக் காட்டினர். அவ்வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் முறையே அன்னை மணியம்மையார் தலைமையிலும், இந்திய குடியரசுத் தலைவர் கியானி செயில்சிங் முன்னிலையிலும், ”ஆசிரியர்” கி. வீரமணியவர்களின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்படடன. தன் துணைவியாரிடம் இவர், தங்களின் இரண்டாம் செல்விக்குத் தமிழ்க் கண்டத்தின் தலைக்குடியான ஆதித் திராவிடப் பஞ்சமக்குடியிலிருந்து ஒரு துணைவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்னும் தனது நெடுங்கால உள்ளக்கிடக்கையை சொல்லிக் காட்டியபோது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ”நானும் பிள்கைளும் முன்பே இப்படி நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்று முடிவு செய்து வைத்திருக்கிறோமே” என்றார் திருமகள். எத்தகைய புரட்சி நாட்டம். இப்படி ஜாதி கெடுத்தோர் ஆயினர் இவர்கள். அவ்வண்ணமே அது நடந்தது ஒரு மீப்பெரும் தஞ்சை மாநாட்டில்.
இவர்களுடைய மகனின் வாழ்க்கை ஒப்பந்தம் சற்று வேறுபாடான - புதுமை வாய்ந்த நிகழ்ச்சியாய் அமைந்தது. குடியரசுத் தலைவருக்கு இயக்கம் கருப்புக் கொடி காட்டும் பேரணி நடத்தி, ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டிருந்தபோது, இவ்விருவரின் திட்டப்படி, இசையின்பன் - பசும்பொன் வாழ்க்கை ஒப்பந்தம் தமிழர் தலைவரால் நடத்தி வைக்கப்பட்டது. இச்சிறைத் திருமணம் பற்றி ” கைது செய்யப்பட்டோர் கைபிடித்துக் கொண்டனர் ” எனச் செய்தியேடுகள் வியந்து எழுதின.
பல ஆண்டுகளாக இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடமுடியாத சூழ்நிலையில் பிறவகை ஒத்துழைப்பு மட்டுமே காட்டிவந்த ”இறையன்” எனும் தமிழ்ப்பெயரை எய்திக் கொண்டுவிட்ட கந்தசாமி யின் வாழ்வில் கற்பனையே செய்திராத அந்த நல்வாய்ப்பு ஏற்பட்டது.
02.07.1970 அன்று சிவகங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகக் கூட்டத்தில் மக்களுக்கு அறிவு கொளுத்த வந்திருந்த ” அறிவின் எல்லை ” அய்யா அவர்களைக் கண்டு வணக்கம் தெரிவிக்க சென்ற இவரை மாவட்டக் கழக முன்னோடிகள் அம்மாபெரும் பொதுக்கூட்ட மேடையில் அய்யாவின் முன்னிலையில் பேசுமாறு செய்து விட்டனர்.
நல்லவண்ணம் தன்மான இயக்கத் தனிச் சிறப்புகளை மக்களின் முன்பு எடுத்துவைத்து அமர்ந்த இறையனை ” உயர் எண்ணங்கள் மலரும் சோலை ” யாம் அய்யா அவர்கள் உளமாரப் பாராட்டினார். ” என்னுடன் இப்படியே பறமக்குடிக்கு வருகிறீர்களா? ” என்பதாக வேறு அய்யா கேட்டுவிட்டார். அவ்வளவுதான் இவர் தன்னையே மறந்தார். எங்கோ பறந்தார்.
தொடர்ந்து அய்யா அவர்கள் மககளுக்குப் பாடங்கள் கற்பித்த கூட்டங்களில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. உலகப் புகழ் வாய்ந்த சேலம் மாநாடு (1971), இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருவாரூர் மாநாடு (1971) ஆகிய தனிச்சிறப்பு படைத்த மாநாடுகளில் இவர் சிற்றுரையாற்றுமாறு அய்யா செய்தார்கள். தி.மு.க. ஆட்சியில் பகுத்தறிவாளர் கழகங்கள் நிறைய முளைத்தெழுந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்கள் பரப்பிய பெரும் பணியில் நல்ல அளவுக்குப் பங்குண்டு இவருக்கு.
இவரின் தொண்டின் எல்லையின் விரிவாக்கத்திற்காகவும் இவரது உரைப்பொழிவுத் திறன் கழக இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் கழகத் தலைமை வட ஆற்க்காட்டு வடசேரியில் நடந்த ” பயிற்சி முகா ” மிற்கு இவரை அழைதது, பாடங்கள் எடுக்குமாறு ஏற்பாடு செய்தது. அங்கு இவர் விளைவித்த தாக்கத்தை மதிப்பிட்ட கழகத் தலைமை தொடர்ந்து இவரைப் பயிற்றுநர்ப் பணியில் ஈடுபடுத்தியது.
பகுத்தறிவாளர் கழகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர் கழகத்தின் தலைமையால் புதிதாக உருவாக்கப் பெற்ற பகுத்தறிவு ஆசிரியரணி எனும் அமைப்பின் தலைவராக அமர்த்தப்பட்டார். அவ்வமைப்பின் சார்பில் பல பயன் கூட்டும் நடவடிக்கைள் மேற்கொண்டார்.
ஆற்றலும் ஆர்வமும் மிக்க சென்னைப் பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்களின் துணைக் கொண்டு 10- ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பயிலும் (பார்ப்பனரல்லாத்) தமிழ் மாணவ-மாணவியர்க்கு இலவசமாகச் சிறப்பு வகுப்புகள் இவரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க இனத் தொண்டாகும். பல ஆண்டுகள் இத்திட்டத்தினைப் பெரியார் திடலில் நடைமுறைப்படுத்தினார் இவர்.
1989-மே 31 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர் மறுநாட்காலையே தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாக தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி உடனடியாகத் தமிழ்நாட்டு அரசுப் பணித் தேர்வாணைக்குழு நடததும் தேர்வுகட்கு நம் இன இளைஞர்கட்குப் பயிற்சியளிக்கும் திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வினைப்பாட்டில் இறங்கிவிட்டார்.
ஏற்கெனவே நமதியக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த இவரை, ”விடுதலை” யில் ” ஆன்மீகம் அறிவோமா? ” எனும் பொருள் பற்றித் தொடர்ந்து எழுதும் பத்திப் படைப்பாளர் (Columnist) ஆக்கினார் ” விடுதலை ” ஆசிரியர். அம்முயற்சியில் நல்ல உழைப்புக் காட்டினார் இவர். இன்னும் கழகத்தின் பயிற்சிப் பட்டறைப் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் (கலைத்துறை) ” விடுதலை ” அயல்நாட்டுப் பதிப்பு (இணையதளம் ) பொறுப்பாளர், பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலக இயக்குநர், தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர், பாரளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித்தலைவர், ” புதுமை இலக்கியத் தென்றல் ” , மேடை ஒருங்கிணைப்பாளர், பெரியார் பயிலக ஆங்கிலப் பேச்சுப் பயிற்றுநர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று, ” குடி செய்வார்க்கு இல்லை ” என்று பெரியார் காட்டிய தொண்டறத்தை மேற்கொண்டு உண்மையாகவும், செம்மையாகவும் ஒழுகியவர் இவர்.
வெல்லுஞ்சொல் திறன் வாய்ந்த இவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பெரியாரியலை மக்களிடம் பரப்புவதில் இன்பம் கண்டவர். சில ஊர்களில் நடந்த இயக்க நிகழ்ச்சிகளின்போது கொள்கை எதிரிகளின் தொல்லைகட்கும் உள்ளானவர்.
பட்டிமன்றங்கள் பாங்கறிந்து ஏறிச் சொல்லாடல் புரிவதில் நிறையப் பட்டறிவு இவருக்கு உண்டு என்பதால்இயக்கத்திற்கு நல்ல அளவிற்குப் பயன் பட்டார். மதப் புன்மைகளையும் பாழ்த்தும் தன்மைகளையும் மக்களிடையே வெளிப்படுத்தி நாட்டையே குலுக்கிய ” A ” பட்டிமன்றங்களை இயக்கம் ஏற்பாடு பண்ணியபோது இவர் பெரும் பங்காற்றினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ” சோவியத் இதழ்கள் விழா ” வில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நடந்த ” சோவியத் யூனியனில் நடைபெறும் மாற்றங்கள் சோஷியலிசத்தைப் பலப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? ”என்னும் பட்டிமன்றத்தில் ” பலவீனப்படுத்தும் ” என்று கழகத்தின் சார்பில் வழக்காடிய அணியின் தலைவராக இறையனார் எடுத்துவைத்த வழக்கு பெரும் பரபரப்பை விளைவித்ததுடன் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களின் அரும் பாராட்டுகளை ஈட்டியது. அம்மேடையில் இவர் சோவியத்துக் குழுவினரின் முன்னிலையிலேயே ”போச்சு, போச்சு ” என அலறிய வண்ணமே, சோவியத் ஒன்றியம் உடைந்தே போனது.
இவரது பயனுடைய உரை வீச்சின் வலிமையையும் இவரின் பெரியாரியற் பயிற்சியின் ஆழத்தையும் மதிப்பீடு செய்த கழகத் தலைமை இவருக்குப் ” பெரியார் பேருரையாளர் ” விருதளிக்க வேண்டுமென்று கருதியது.
அதன்படி 1982- பிப்ரவரியில் திருச்சியில் மூன்று மாலைகளில் கற்றுத் துறைபோகிய சான்றோர்களின் தலைமையில் முறையே, ”பெரியார் ஒரு சமுதாய வழக்குரைஞர் ” , ” ஒரு நோய் முதல் நாடும் மருத்துவர் ”, ” ஒரு தேர்ந்த பொறியாளர் ” என்னும் தலைப்புகளில் செய்திச் செறிவான உரைப் பொழிவுகள் நிகழ்த்திய இறையன் அவர்களுக்குப் பெரியார் பேருரையாளர் என்னும் விருதினைக் கழகத் தலைமை 21.02.1982 அன்று அளித்து பெருமைப்படுத்தியது.
இவரின் மொழிபெயர்ப்பாற்றலில் நம்பிக்கை கொண்ட கழகத் தலைமை நம் இயக்க நிகழ்ச்சிகளில் இவரைப் பயன்படுத்தியது. வி.டி. ராஜசேகர், சந்திரஜித், டி.பி. யாதவ், பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, தேவராஜ் அர்ஸ், பிரகாஷ் அம்பேத்கர் முதலியோரின் ஆங்கிலப் பேச்சுகள் இவரால் மொழிபெயர்த்து மக்களின் முன் வைக்கப்பட்டன. பசவலிங்கப்பா, டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி போன்றோர், ” இட்டு வாருங்கள் இறையனை ” என விரும்பியழைக்கும் அளவிற்கு, மக்களிடம் தாக்கம் விளைவிக்கவல்லதாக இவரது மொழி பெயர்ப்புத் தன்மை இருந்தது.
இவரின் எழுத்துநடை தனித் தன்மை வாய்ந்தது. தூய தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் - பெரிதும் சிறிதுமாக - எழுதியுள்ளார். பெரும்பாலும், எல்லாமே ஆய்வு முறையில் அமைந்தவை.
” விடுதலை ” , ” உண்மை ” - சிறப்பு மலர்களில் அய்யாவின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த விளக்கக் கட்டுரைகளை விரித்தெழுதியுள்ளார். ” சோ ” ராமசாமி என்னும் பார்ப்பன எழுத்தாளர் ”Sunday” என்னும் ஆங்கில இதழில் திராவிடர் இயக்கம் பற்றிக் கொச்சைபடுத்தி வரைந்த கட்டுரையைத் திறனாய்வு செய்து இவர் படைத்த கட்டுரைத் தொடர், இனத்திற்குக் கேடு விளைவிக்கும் ஏனைய கருத்தாளர்களுக்கு இவரால் எழுதப்பட்ட மறுப்புக் கட்டுரைகள், நம்முடைய மாநாடுகள் - விழாக்கள் பற்றி இவர் எழுதிய எழுத்தோவியங்கள், கழகத் தலைவர் அவர்கள் பங்கு பற்றிய கல்லூரி - பல்கலைக் கழகங்களின் கருத்தரங்குகளின் பயன் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள் ஆகியவை குறிக்கத்தக்கவை.
இவர் யாத்த சுயமரியாதைச் சுடரொளிகள், இல்லாத இத்துமதம், ஜெயலலிதாவின் பின்னாலா திராவிடர் கழகம் சென்றது? ஆகிய நூல்கள் பிறரால் மேற்கோளாகக் காட்டப்படுபவையாக விளங்குகின்றன.
” பெரியார் ஆயிரம் ”, ” மகாபாரத ஆராய்ச்சி ” என்னும் தொகுப்பு நூல்களில் இவரின் பங்களிப்பு உண்டு. தமிழக அரசின் திறந்த வெளிப் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் அய்யா பற்றிய இவரின் கட்டுரை இடம் பெற்றது.
குறைந்த அளவே புழக்கத்திலுள்ள தனித் தமிழ்ச் சொற்களை இவர் தன் கட்டுரைகளில் ஆங்காங்கே பெய்து எழுதுவதால் புரிதலின் நேரம் கூடுகிறது என்னும் நடப்புண்மையை இவர் பகுத்தறிவுப் பார்வையுடன் ஏற்றுக் கொண்டார் எனினும் நாளடைவில் நன்மையே என நம்பினார். ” பெரியாரியல் ” எனும் சொல்லாட்சியைப் புழக்கத்திற்குக்கொண்டு வந்ததில் இவருக்குப் பேரளவுப் பங்குண்டு.
இவர் ஒரு பாவலர் என்பதுவும் பதிவு செய்யத்தக்கது. பல்வகைப் பாவினங்களிலும் பாக்கள் புனையும் புலமை கொண்ட இவர் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஜெர்மன் தலைநகரத்திலும் நடந்த பாவரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.
இவர் ஒரு பாவாணரும் ஆவார். பாடல்கள் இசைத்தல் மட்டுமின்றி இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் அவற்றிற்குப் பண்ணமைத்துப் பாடுவதிலும் பயிற்சி நிரம்பிய இவரின் ” ஆண்களா? பெண்களா?, ” ” தமிழினத்தின் விடிவெள்ளி ”, ” வாராது வந்த மணி ” எனும் பாடல்கட்கு நிறைய வரவேற்பு. தஞ்சை - தங்கம் வழங்கு விழாவில் இவர் இயற்றி இசைத்த ” Universal Community || என்ற பாடல் வெளிநாட்டு விருந்தினரின் பெரும் பாராட்டை ஏற்றது.
இயக்கத்தின் வளர்ச்சிக்கான களப் பணிகளில் ஈடுபாடும் கழகக் கிளர்ச்சிகளில் பங்குபற்றும் துணிச்சலும் கொண்ட இவர் எட்டுமுறை காவலதுறையினரால் தளையுண்டவர்.
இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்காலத்தில் தளைசெய்யப்பட வேண்டிவர்களின் பட்டியலில் இறையன் பெயரும் இருப்பதாகக் கூறி, காவல்துறையினர் இவரை அழைத்துக் கேட்டபோது, ” பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒருபோதும் எழுதிக் கொடுகக மாட்டேன் ” என்று வீரங்காட்டினார்.
சமுதாய விஞ்ஞானி என்று போற்றப்பட்ட தந்தை பெரியார் நடத்திய இதழ்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களைச் சிந்திக்க வைத்தன. அவர் இந்த இதழ்களை நடத்திவரும்பொழுது சந்தித்த இடையூறுகள், எதிர்ப்புக்கள், சிறைவாசங்கள், தண்டனைத் தொகை செலுத்துதல் ஆகியவற்றை இக்கால இளைஞர்கள் அறிய வாய்ப்பில்லை. பெரியார் ஒரு மாபெரும் பத்திரிக்கையாளர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதழாளர் சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளையின் சார்பாக இதழாளர் பெரியார் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்த முடிவு செய்து, அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்களும், இந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் மு. வளர்மதி அவர்களும் பெரியார் பேருரையாளர் அ. இறையனார் அவர்களை அழைத்து 09.12.1998 அன்று புதுக்கல்லூரித் தமிழ்த்துறை வழியாக இந்நிகழ்வை நடைபெறச் செய்ததன் பேரில், சொற்பொழிவாளரான இறையனார் இத்தலைப்பை யொட்டி ஒரு மணிநேரம் சுருக்கப் பொழிவு வழங்கினார். இதனை முழுமையாக விரிவாக எழுதி வழங்கினால், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர் பலருக்கும் பெரிதும் பயனுடையதாக அமையும், என அடுத்து வந்த இயக்குநர் முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் இப்பணியை மிக விரிவாகவும் ஆழமாகவும் செய்து, இதழாளர் பெரியார் எனும் நூல் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, பலராலும் பாராட்டப்பெற்றது. இறையனாரின் இறுதி காலத்தில், இந்நூல் வெளியிடப்பட்டு அவரது இயக்கத் தொண்டறத்தில் இது ஒரு மகுடமாக அமைந்துள்ளது.
இத்தகைய பல்வகைப் பண்பு நலன்களுடன், இயக்கத் தொண்டறத்தில் இவர் இத்தனை ஆண்டுகள் இடையறாது ஈடுபட்டொழுக, உறுதுணையாக - உந்துவிசையாக - ஊக்குவிப்பாளராக ஒத்துழைப்புத் தந்து வந்த இவரின் இணையர் திருமகள் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இவருடன் கைகோத்த நாள்தொட்டு பெரியார் படையில் சேர்ந்துவிட்ட திருமகள் கழக வீராங்கனையாகவே தன்னை இனங்காட்டிக் கொண்டார். தாலி அணியாமை, குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளாமை, மத நடவடிக்கை எதிலும் அகத்தாலோ, புறத்தாலோ ஈடுபடாமை ஆகியவற்றை கடைபிடித்து வந்த திருமகள், மதுரையில் 1971- இல் நடந்த மாபெரும் பெரியார் கூட்டத்தில், சேலத்தில் அய்யா போட்ட மகளிர் உரிமைப் புரட்சித் தீர்மானத்தை வரவேற்றுப் பாராட்டிதழ் படித்துப் பணிந்தளிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகிய இருவரின் பாராட்டிற்கும் பரிவுக்கும் இலக்கான திருமகள் தங்களின் குழந்தைகளுக்கும் தன்மானக் கொள்கைகளைப் புகட்டிப் புகட்டி அவர்களையும் உருப்படுத்தினார்.
ஒரு குறிக்கோட் குடும்பத்தைத் தன் துணைவர் இறையனாருடன் இணைந்து கட்டியது மட்டுமா? அக்குடும்பம் உறைவதற்கு மடிப்பாக்கம் , பெரியார் நகரில், வீரமணித் தெருவில், ” மணியம்மையார் மனை ” யையும் இணையர் இருவரும் எழுப்பிப் பெருமிதங் கொண்டனர். அவ்வில்லத்தைத் திருமகள் பெயருக்கே உடைமையாக்குவதில் இறையனார் பேரின்பம் கண்டார்.
இறையனாரின் இணையர் திருமகள், மகள்கள் மூவர், மருமகள் ஆகிய அய்வரும் மீட்பர் பெரியாரின் உருவக்கல் பதித்த தொங்கலொன்றை அணிந்து கொண்டுள்ளனர். வீரமணி, வெற்றிமணி, புயல், சீர்த்தி, அழல், புகழ், இனநலம், அடல் என்பவை இக்குடும்பப் பிள்ளைகளின் பெயர்கள்.
இவ்வண்ணம் குடும்பத்தையே இயக்கத்திற்காகக் கொடுத்தும், ”ஜாதி” யைக் கெடுத்தும் தொண்டறம் மேற்கொண்டிருக்கும் இறையனார் அவர்கள் தன் பதினேழாம் அகவையிலிருந்து இயற்கை எய்திய எழுபத்தாறாம் அகவை வரை ஒரே கொள்கை, ஒரே கழகம், ஒரே தலைமை, ஒரே கொடி என வாழ்ந்து காட்டியுள்ளார் என்பது நாமனைவரும விம்மிதமுற வேண்டிய செய்தி.
புத்தம், தம்மம், சங்கம், சரணம் ஆகிய சொற்கள் பற்றிய அறிவாசான் தந்தை பெரியாரின் இலக்கண விளக்கத்திற்குத் தக ஒழுகிவந்த இறையனார் தம் எழுபத்தாறாம் அகவையில் உடல்நலக்குறைவின் காரணமாக 2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள் இரவு 9 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார்-மணியம்மை மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.
அன்னாரது உடல், கழகத் தோழர்கள், நண்பர்கள் உறவினர்களின் பார்வைக்காக பெரியார் திடலில் வைக்கப்பட்டது. டாக்டர் கலைஞர், தொல். திருமா வளவன், நெடுமாறன், சுப. வீரபாண்டியன், இளஞ்செழியன், மற்றும் பல தலைவர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள் மாலை 4 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக ஓட்டேரி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித சாத்திர, சடங்குகளும் இல்லாது எரியூட்டப்பட்டது.
No comments:
Post a Comment