Sunday, December 19, 2010

அறைகூவல் எறிகிறோம் ஆரியத்திற்கு!

அம்பலத்துக்கு வந்து விட்டது ஆரியம்!.  இறுதி முயற்சியில் இறங்கி  விட்டார்கள் முன்னறிவில்லா முப்புரிநூல் பார்ப்பனர்கள்.

    உள்நாட்டிலும், அயல்நாடுகளிலிருந்தும் கொட்டுகின்ற கொள்ளைப் பணம், இந்திய அரசு தரும் ஏந்துகள்,  ஊடகங்களின் விளம்பர ஒத்துழைப்பு, பங்காளிச் சண்டையினால் காட்டிக் கொடுக்கத் துணியும் தமிழினத்தின் இரண்டகம்,  என்ன நடக்கிறதென்பதைப் பற்றிக் கருதும் பழக்கமில்லா மக்களின் ஏமாளித் தனம், எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்களின் கண்ணன் காட்டிய வழியாம் சூது - சூழ்ச்சிக் கயமை ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கை கொண்டு வெளிப்படையாக வெறியாட்டம் போடுகின்றனர் அவர்கள் - ஆடை துறந்த மனநோயாளிகளாக ! .

    “  பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதும் “  தமிழர் தலைவரும் அவரின் தொண்டுக்குத் துணை நிற்கும் எண்ணத் தொலையா இயக்கத் தோழர்களும் நம்பிக்கை வைத்திருப்பதோ உண்மையின் நன்மையின் மீது தான்.  எனவே,  உண்மையே வெல்லும் ; சூது சுருண்டு மாயும்.  இது உறுதி.    

    “  இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை “ என்று மானமீட்பர் தந்தை பெரியார் தேர்ந்து தெளிந்து அறுதியிட்டார்கள்.

    “  இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டுமானால், வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும் ? “ எனக் கேட்டார் அண்ணா.  இவ்விரு கருத்துகளும் பொருளாழம் மிக்கவை.

    என்றாலும், உள்நோக்கங் கொண்ட ஆரியப் பார்ப்பனர்,  “ இந்துக்கள், இந்துக் கலாசாரம்,  இந்துத்துவா,  இந்துராஷ்ட்ரம் “ என்பதாகக் காட்டுக் கூச்சலிட்டுக் பார்க்கின்றனர்.

குரலுயர்த்திக்  கூவினார்.

    “ நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆகட்டும், அல்லது சங்க காலப் பழைய ஆதாரங்களில் ஆகட்டும், அல்லது ஆரிய நாகரிகப் பழக்கவழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவற்றிலாவது இந்து அல்லது இந்து மதம் என்ற வார்த்தை இருக்கிறதா ? “ என்று முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே - அதாவது இந்த நாட்டைப் பிடித்த பெருந்தொழுநோயான, “ ராஷ்ட் ரீய சுயம் சேவக் சங் “ என்னும் மதவெறி அமைப்பு தோன்றிய தொடக்கக் கட்டத்தில் - ஆம், 1925 - ஆம் ஆண்டிலேயே குரலுயர்த்திக் கூவினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

    அய்யாவின் கேள்வியை அறை கூவலாக எதிர்கொண்டு,  “ இதோ இருக்கிறது - இந்நாட்டின் இன்ன நூலின் இன்ன இடத்தில் -               ”இந்து“ என்னும் இந்நாட்டு மதத்தைக் குறிக்கும் பெயர் இருக்கிறது “     என்று எவரேனும் நிலைநாட்ட முன்வந்ததுண்டா?  வெட்கக்கேடு என்னவென்றால் -   இந்துத்துவ முன்னோடி சூர தீர வீர சவர்க்காரும் முனையவில்லை.  இந்து வெறி அமைப்பை நிறுவிய குரு கோல்வால்கரும் முன்வரவில்லை. அவ்வமைப்பின் ஏனைய தலைவர்களும் முயலவில்லை.

    ஏன், இந்து என்று சொல்லிக் கொள்ளுவதிலே தான் பெருமிதம் அடைவதாக அக்காலத்தில் வெளிப்படையாக அறிவிக்க வெட்கமேபடாத காந்தியாருங்கூடத் துணிந்தாரில்லை.

    காந்தியாரோ,  “ இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்ளுகிறேன் “ என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது  பார்ப்பனரால்,  “ தெய்வம் “ என்றும்,  ”ஜகத்குரு” என்றும் கொண்டாடப்பட்ட மறைந்த காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெரியவாளே என்ன சொல்லிற்று?.
                               “ இப்போது ஹிந்து மதம் என்ற  ஒன்றைச் சொல்லுகிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது.  நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது ! “

    இன்னொரு  “ துறவி “ யாகிய விவேகானந்தர்,  “ ஹிந்து “ என்னும் சொல்லை வழங்கத் தமக்கு விருப்பம் இல்லை என்பதாகத்தானே அறிவித்தார்.

    சமஸ்கிருத மொழியில் கற்றுத் துறைபோகிய - “ மஹா மஹோபாத் யாய “ பட்டம் எய்திய  “ பண்டித ராஜ் “  ஷ்யாம் குமார் ஆச்சார்யா என்னும் காசிப் புலவரே,  “ வட மொழி அகர முதலிகளிலும் தற்காலம் வரையிலான வடமொழி இலக்கியம் முழுவதிலும் ஹிந்து,  ஹிந்துஸ்தான் என்ற சொல் எதுவும் கிடையாது “ எனப் பதிவு செய்துள்ளாரே ! .

    பண்டித ஜவஹர்லால் நேரு,  சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற வடநாட்டு - தென்னக பார்ப்பனர்களும்,  “ நமது பழைமையான இலக்கியங்களில் “ஹிந்து “ எனும் சொல் இல்லை “ என்றும்,  “ அது ஒரு அண்மைக்காலப் புதிய பெயர் “ என்றே எழுதிவிட்டார்களே !. 

    தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாகிய மறைமலையடிகள்,  மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, காசு. பிள்ளை,  திரு.வி.க. முதலியவர்களின் ஆய்வுகளிலும்  “ ஹிந்து“ என்றொரு சமயம் அகப்படவில்லையே ! .

சட்ட அறிஞர்கள்

    சட்ட அறிஞர்கள் சாற்றுவது தான் என்ன?

    வெள்ளையராட்சியின்போது இருந்து  “ Federal  Court  “ என்னும் தீர்ப்பு மன்றத்தில் தீர்ப்பாளராகப் பணியாற்றிய மாண்பமை வரதாச்சாரி,  “ இந்து மதத்திற்கு இலக்கணம் வகுப்பது எளிதன்று “ என்றும்,

    ஜெய்ப்பூர் பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரி முதல்வராகவிருந்த  கே. ஆர்.ஆர்.  சாஸ்திரி,  “ திகைப்பூட்டும்  ஹிந்து எனும் சொல்லாட்சியே நம் நாட்டு மூலத்தைக் கொண்டதன்று “ என்றும்,

    தலைமைத் தீர்ப்பாளராய்க் கடமையாற்றிய மாண்பமை இராச மன்னார்,  “ இந்து மதம் என்ற சொல்லின் தெளிவில்லாத பொருள் பற்றிய கூர்த்த உணர்வோடுதான் பேசுகிறேன் “ என்றும் பதிவு செய்து நிலையூன்றி விட்டார்களே ! .

    பிறகு,  ஹிந்துவியல் என்னும் இழவுப் பெயருக்கு மூலப் பெயரே இல்லையா?  அதன் உண்மையான பெயர்தான் யாது ?

    பெயர் இல்லாமல் என்ன?  வேதாந்தம், மதம்,  சமாதான தர்மம்,  பிராமண மதம்,  ஆரிய தர்மம் எனும் பெயரால் பார்ப்பனியக் கொள்கை அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

    “ மணிமேகலை “ ஆசிரியர் சுட்டுகின்ற அளவைவாதி,  சைவவாதி, வைணவவாதி,  வேவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேஷகவாதி, பூதவாதி என்ற சமயக் கணக்கர் பட்டியல் இப்பொருள் தொடர்பாக நாம் தீர்மானிப்பதற்குத் துணையாய் ஒளிகாட்ட வல்லது.  சைவம், வைணவம், வேதம் ஆகிய நெறிகளின் சார்பில் வழக்குரைத்தனர் என்றால் இந்துத்துவம் என்பதற்கு இடமேது?

    சாத்தனார் காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னர் ஆதி சங்கரர் காலத்தில் இருந்தனவாகக் கூறப்படும் காணாபத்தியம்,  கௌமாரம், வைஷ்ணவம், சங்ரம், சாக் தம், சைவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ‘ சண்மதம் “ (அறுசமயம் ) என்றழைக்கும் சூழ்நிலை உருவானது எனும் செய்தியும்,

    “ இந்து சமயம் எனும்அடையாளப் பெயரில் எந்தவொரு மத நிறுவனமும் இந்தியாவில் நடந்து வரவில்லை “ என்னும் அக்னி ஹோத்ரம் ராமாநுஜ தாத்தாச்சாரியின் கூற்றும் உண்மையைத் துல்லியமாகத் தெளிவாக்கும் பெருஞ்சான்றுகள்.

    ஆனால், உண்மைப் பெயர்களையே தொடர்ந்து பயன்படுத்தி அழைத்துக் கொண்டிருந்தால், நாட்டில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றி உயர்வாழ்வு வாழ எப்படி முடியும்?  ஆழமாய்க் கருதியது ஆரியம்.

    அதன் விளைவாக,  அயல்நாட்டுக்காரர்கள் இட்ட பெயரையே பயன்பாட்டில் வைத்துக் கொண்டு, நிலையூன்றி பிழைக்காலம் எனத் திட்டமிட்டு “ஹிந்து “ என்ற சொல்லையே கையாண்டு பார்க்கின்றனர் பண்பாடு - மாந்த நேயம் என்பதை முற்றாகத் துறந்தொதுக்கிவிட்ட பார்ப்பனர்.

    “ வெள்ளைக்காரன் நமக்கு  ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம்,  அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது “ என்னும் சந்திர சேகரேந்திர சரஸ்வதித் தெய்வம்  “ அருளிச் செய்த “ மெய்ம்மொழியால் நமக்கு எத்தனையோ விளக்கங்கள் கிடைக்கின்றன.

    கிரேக்கர்,  பாரசீகர், அராபியர்,  பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், முதலியோரெல்லாம் போலியாகப் பலுக்கிய - உச்சரித்த - “ஹிந்து “ என்ற சொல்லாட்சியை - ஆளவந்த அயலவர்கள், பேச்சு - எழுத்து வழக்குகளில் கையாண்டது மட்டுமின்றி, அவர்கள் நமக்காக இயற்றிய சட்டங்களிலேயே  பதிவு செய்து, அதைத் திரும்பப் திரும்பப் பயன்படுத்திப் புழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர்.

    கி.பி. 1770- களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் முதலில் வங்காளப் பகுதிக்கென வில்லியம் ஜோன்ஸ் உள்நாட்டில் நிலவி வந்த வாழ்வியல் சட்டங்களைத் தொகுத்து அதற்கு  ஹிந்துச் சட்டம் ( Hindu Law )  என்ற பெயரை இட்டு, அதனைக் கல்கத்தா உயர்முறை மன்றத்திற்கு உரியதாக்கி,  பிறகு பம்பாயிலும், சென்னையிலும் உயர்மன்றங்கள் அமைக்கப்பட்டபோது அதே ஹிந்துச் சட்டத்தைப் பிற பகுதிகட்கும் உரியதாக்கினார்.

செப்பு

    ஆக, ஆரியரல்லா மக்கள் ஹிந்துச் சட்டத்திற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். ஹிந்துக்களாய் ஆக்கப்பட்டார்கள். திராவிட இனத்தவர் வடபுலத்துக்கேயுரிய  மிதாட்சரச் சட்டம் தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அறியாமையில் ஆழ்த்தப்பட்டுக் கிடந்தனர்.  இன்றைக்கு அந்தச் சட்டப்படி பார்ப்பனரைத் தவிர ஏனைய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ! . இவ்வுண்மைகளையெல்லாம் இந்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து தெளிவடையும் காலம் வந்தாகிவிட்டது.

    இதோ அறைகூல் எறிகிறோம் ஆரியத்திற்கு ; .  மேற்கண்ட செய்திகளை அறிஞர்கள் வெளியிட வில்லை என்றோ, அவர்களின் கூற்றுக்கள் யாவும் பொய் என்றோ மறுக்க முன்வரும் வீரம் - மானம் - நாணயம் , துளியளவும் - உனக்கு உண்டோ?  ஆரியமே ! செப்பு.

- இறையன்.










No comments:

Post a Comment