Thursday, December 16, 2010

அண்ணலும் அறிவாசானும் ஓர் ஒப்பீடு

அண்ணல் அம்பேத்கர் அவர்களை அறிவாசான் தந்தை பெரியார் அவர்களோடு ஒப்பிட்டுக் கருதும்போதெல்லாம் கன்னலெனச் சுவைக்கிறது.

வர்ண-சாதி அமைப்பு முறை, விடாப்பிடியாக வலியுறுத்தும் பிற்போக்கு ’இந்து மதம்’ அதற்குக் காரணமான பார்ப்பனியக் கொடுமை, அதை ஆர்வத்தோடு முட்டுக் கொடுத்து நிலைநிறுத்த முயன்ற காந்தியம், அதைத் தயங்காது ஏற்றுக் கொண்ட பேராயக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சியினரின் போக்கு ஆகியவற்றைக் கடுமையாகத் திறனாய்வு செய்வதிலும், பெண்ணுரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுப்பதிலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெள்ளையராட்சி நீடிக்க வேண்டுமென வலியுறுத்துவதிலும், இரு பெருந்தலைவர்களும் வியந்து உவக்கத் தக்க வண்ணம் ஒத்த கருத்துக்களை வெளியிட்டனர் என்பதை இருவரையும் படித்தாய்ந்தவர்கள் நன்கறிவர்.

இவற்றைவிட்டு, நாம் வேறோர் உண்மைபற்றிச் சுருக்கமாக ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறோம்.

பேருண்மை

எப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த தந்தை பெரியார் ’தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதோர்’ என்பவர்களின் உரிமைக்காகச் சீற்றத்துடன் வழக்காடினாரோ, அதைப் போலவே தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உரத்த குரலில் வாதாடினார் எனும் அப்பேருண்மை யாவராலும் அறியவும், உணரவும் பெற வேண்டும்.

‘காங்கிரஸ்’ எனும் பேராயத்தில் தமிழகத் தலைமைப் பொறுப்பில் இருந்த பெரியார், 1922- ஆம் ஆண்டிலேயே தீண்டாமையையும் சாதி முறையினையும் கட்டாயப் படுத்தும் மனுதர்ம சாஸ்திரம், இராமாயணம் ஆகிய நூல்களை எரிக்க வேண்டும் என்று முழங்கியவர். அவரின் தீண்டாமை மறுப்பு முனைப்புப் பண்பைத் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் வைக்கம் அறப்போரைத் தொடங்கிய மலையாளத் தலைவர்கள், போராட்டத்தைத் தொடர்வதற்கு அவரை நம்பிக்கையுடன் அழைத்தனர்.

மனம் நெகிழ்ந்து...

ஒரு ’ஜாதி இந்து’ எனப்படுபவர் தீண்டத் தகாதவர்களுக்காக இருமுறை சிறைப்பட்டு தொடர்ந்து போராடிய நிகழ்ச்சிகளைச் செய்தித் தாள்களின் வழி அறிய நேர்ந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களே மனம் நெகிழ்ந்து போய் ஆசிரியவுரை தீட்டினார் என்ற வரலாறு இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய செய்தி.

’‘இம்மாதிரி கொடுமைப் படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும் , சாந்தத்தோடும் அகிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்பதும், இம்மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர்வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கிறீர்களா? என்பதும் எனக்கு விளங்கவில்லை ! .”

தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தலைமையேற்ற பெரியாரவர்கள் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பெருமக்களிடையேதான் இப்படி உரையாற்றினார். எப்போது? 1928-ஆம் ஆண்டில் - அதாவது இப்போதைய தலித் - அம்பேத்கர் இயக்கங்களின் தலைவர்கள் பிறந்திராதபோது.

வேறெவரால் முடிந்தது?

அத்துடன் நில்லாது, ” பிச்சை எடுப்பதற்கு உபயோகமாயிருக்கும் வேத படிப்பிற்காகக் கொள்ளை கொள்ளையாக லாபம் சம்பாதிக்கும் நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் சோறும் போட்டுப் படிக்கும்படிச் செய்கிறார்கள். இம்மாதிரியான உதவி ஆதி திராவிடப் பிள்ளைகளுக்கு அளிக்கப்படுமானால், அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றி, சிறுவயதிலேயே கூலிக்குச் செல்லும் எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று படித்து மந்திரி வேலைக்குத் தயாராகவிருப்பார்கள் என்பதை நினைத்து பாருங்கள்” என அம்மாநாட்டு முடிவுரையிலேயே அறைந்தார் என்பது பற்றி சற்று எண்ணிப் பார்ப்போருக்கு அவரின் தொண்டின் அருமை விளங்கிவிடும்.
”பஞ்சமப் பட்டம் ஒழியாமல் சூத்திரப் பட்டம் ஒழிந்து விடும் என நம்புவதைப் போன்ற வடிகட்டிய முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது ”
இவ்வாறு சாடுவதற்கு அய்யாவைத் தவிர வேறெவரால் முடிந்தது?

பள்ளன் கட்சி - பறையன் கட்சி

இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நாள்தோறும் வழக்காடி, தீர்மானங்கள் இயற்றி, கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, வெற்றிகளையும் குவித்துத் தள்ளியதால்தான் அவர்கண்ட சுயமரியாதை இயக்கத்தினை அன்றைய ”பெரியவர்கள் ” பள்ளன் கட்சி  என்றும் ; பறையன் கட்சி என்றும்
அழைத்தனர் !.

தஞ்சை மாவட்டம் போன்ற பகுதிகளில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் குடிவழி வந்த குடும்பங்கள் பல்லாயிரக்கணக்கில் அய்யாவைத் தம் குலத்தலைவராக எண்ணிப் போற்றி வருவதற்குக் காரணம் அவர்தம் நடவடிக்கைகளே.

இந்த நாட்டுக்குச் சொந்தக்காரப் பழங்குடிமகனாக - தமிழனாக அவர் கருதியது  தீண்டத் தகாதவன் என்றாக்கப்பட்ட ஆதி திராவிடனைத்தான் . தன் இறுதி பேருரையிலும் ” தீண்டாமை ” பற்றிக் குறிப்பிட்டு விட்டுத்தான் இயற்கை எய்தினார் பெரியார்.

எனவேதான், ” இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , எனக்கும் நண்பர் தமிழ்நாட்டில் உங்களிடம்தான் இருக்கிறார். அவர்தான் தோழர் ஈ.வெ.ரா ” என அண்ணல் அம்பேத்கர் அவர்களே குறிப்பிட நேர்ந்தது.

ஒப்பீட்டுப் பட்டியல்

இனி - அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களின் உய்வுக்கும் உயர்வுக்கும் பாடுபட்டுக் கொண்டே, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் பற்றியும் அக்கறை காட்டினார் என்பது நிறைவான செய்தியல்லவா?

இந்திய மக்களை ஆளும் வகுப்பினர், தொண்டுபுரியும் வகுப்பினர் (Governing and servile classes ) என இரு பெரும் பிரிவுகளாகக் காட்டிய அறிவு மேதை அம்பேத்கர், இரண்டாம் பிரிவில் தீண்டத்தகாதோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் இணைத்துக் குறிப்பிட்டார்.

உள்ளாட்சி நிறுவனங்களின் பொறுப்பில் தொடக்கக் கல்வி என்பது விடப்பட்ட ஆண்டாகிய 1923- இல் பம்பாய் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோரில் ஒருவர்கூடக் கல்லூரியை எட்டிப் பார்க்கவில்லை என்பதை ஒப்பீட்டுப் பட்டியலிட்டுக் காட்டிய அண்ணலவர்கள், அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

சென்னை மாநிலத்தில் அய்ந்தொழிலாளர்களாய் இருந்த கம்மாளர் என்னும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தங்களை ” ஆச்சாரி” என அழைத்துக் கொள்ளக் கூடாது எனப் பார்ப்பனரால் தடை செய்யப்பட்ட உரிமை மறுப்புப் பற்றிக் கூட நுட்பமாகக் குறிப்பிட அவர் தவறவில்லை.

அவர்தம் நூல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

வழி காட்டுதல்

ஒருமுறை அண்ணல் அம்பேத்கர் லட்சுமணபுரியில் பொழிந்த உரையில், ”பிற்படுத்தப்பட்டோர் மிகவும் ஒதுங்கியிருந்த காரணத்தால்தான் அவர்கள் தொல்லைப்படும் சூழ்நிலை வந்துள்ளது. அரசு அதிகாரத்தை உயர்சாதி ஆளும் வகுப்புகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஒற்றுமைப்பட்டு அவர்கள் முன்னணி அமைத்துப் போராட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் தங்களின் வலிமையை உணர்ந்தவர்களாயில்லை, ஒரே தலைமை, ஒரே கட்சி, ஒரே நோக்கு என நீங்கள் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோருமே, ஏன் அவர்கள் நாட்டை ஆளக்கூடாது? என முழங்கினார். அவரின் வழிகாட்டுதல் ஓரளவு நடைமுறையாகிவிட்டதை இந்நாட்டு இன்றைய அரசியல் வரலாறு பேசுகிறதன்றோ? .

அண்ணல் அவர்கட்குத் தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல் சட்டத்திலேயே இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் செய்ய முடிந்ததுபோல், பிற்படுத்தப்பட்டோர்க்காகச் செய்யவியலாமற் போய்விட்டதே என்பதாக மிகப் பெரும் ஏக்கம். இது அவர் தம் இந்திய சட்ட அமைச்சர் பதவியைத் துறந்து நேருவுக்கு அனுப்பிய விலகல் மடலில் புலப்படுத்தப்பட்டுவிட்டது.

இடித்துரை

” பிற்படுத்தப்பட்டோர்க்கான பாதுகாப்பு எதுவும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெறாமற் போய்விட்டமை குறித்து நான் மிகவும் வருந்தினேன். சமாதானமுறையில் ” இந்தியக் குடியரசுத் தலைவரால் அமர்த்தப்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ’ என்பதான ஓர் பிரிவு அரசியற் சட்டத்தில் வரையப்பட்டது. சட்டம் நடப்புக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்ட போதிலும் ஆய்வுக் குழுபற்றிய பேச்சையே காணோம்” என அவர் இடித்துரைத்ததன் விளைவாகத்தான் காகா கலேல்கர் குழு, பிறகு மண்டல் குழு என அமைக்கப்பட்டு, இப்போது புதிய வரலாறு படைக்கப்படும் நன்னிலை தோன்றியது.

இந்த செய்திகளை எல்லாம் முறையாக இயங்கும் மூளைபடைத்தோர் சிந்தித்தால் அண்ணல், அறிவாசான் ஆகிய இரண்டு உரிமைக் காவலர்களும் வாழ்நாள் முழுவதும் காட்டி வந்த மாந்தப்பற்று எளிதில் புரிந்துவிடும். இருட்டடிப்பு, அறியாமை ஆகிய - இரு தீமைகளும் களையப்பட்ட - ஒன்றுபட்ட குமுகாயம் தோன்ற நம் இயக்கம் தன் கடமையை விடாது இயற்றிக் கொண்டேயிருக்கும்  ! .








No comments:

Post a Comment