வெற்றித் திருவுருவாய் விளங்கும் நம் திராவிடர் தந்தை பற்றிய ”ஆட்சியில் தி.மு.க.“ எனும் நூலின் ஆசிரியர் பிலிப் ஸ்ப்ராட் மிகச் சிறந்த வரலாற்றுப் பேருண்மை ஒன்றினைக் கண்டுணர்ந்து வெளியிட்டுள்ளார்.
“ மிகப் பெரும் புலமையோர் எனபோர் தோல்வியுற்ற முயற்சியில் திரு. பெரியார் ஈ.வெ.இராமசாமி மிக கடுமையற்ற பகுத்தறிவுக் கோட்பாட்டின் ஆர்வத்துடன் ( “ திராவிடர் - “ தமிழர்” எனும் ) துணைத் தேசிய இனத்தின் மிக வெம்மையான உடனடி உந்துணர்வுகளையும் கூட்டியூட்டி வெற்றி பெற்று விட்டார் “ என்பதே அவரின் முடிவு. ( '' Mr. Periyar E.V. Ramasamy has succeeded where more intellectual men have failed by adding to the tepid enthusiasm of Rationalism the more fiery urges of sub-Nationalism '' ? Mr. Philip Sratt in "" The D.M.K. in Power"
மூன்று உண்மைகள்
அவரது இந்தத் துணிவு ஏதோ நுனிப்புல் மேய்ந்ததன் விளைவன்று. நிறைய உண்மைகளை ஆழ்ந்து, ஆய்ந்து, தேர்ந்து, தெளிந்த நிலையான தீர்வாகும்.
மேற்கண்ட முடிவில் அவர் மூன்று உண்மைகளைச் சுட்டுகிறார்.
(1) பேரறிஞர்களால் முடியாததைப் பெரியார் அவர்கள் முடித்துக் காண்பித்தார்கள். (2) இணவுணர்ச்சித் தீயை மூட்டிப் (3) பகுத்தறிவு ஒளியைப் பரப்பினார்கள்.
இம்மூன்றினையும் பற்றி முழுமையாக இல்லாவிடினும் கொஞ்சமேனும் திறனாய்வு செய்வது பகுத்தறிவாளரிடையே பயனுள்ள தெளிவினைப் படைக்க வல்லது.
அசைக்க முடியவில்லையே ஏன்?
தமிழகத்தைப் பொருத்தமட்டில் வள்ளுவர் தொடங்கி, திருமூலர் நடுவாக, வள்ளலார் இறுதியாக கற்றுத் துறைபோகிய கணக்கற்ற அறிவாளிகள் மக்களின் வாழ்க்கைப் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும் என விரும்பினார்கள். இயன்ற வழிகளில் முயன்றார்கள், என்றாலும் உருப்படியான - குறிப்பிடத்தக்க - நிலையான பலன்களை அவர்கள் கண்டாரல்லர். தமிழகத்தற்குப் புறமான மற்ற மாநிலங்களில் தோன்றிய புத்தர் - சாங்கியர்களிலிருந்து தொடங்கி வேமண்ணா, நாராயண குருக்கள் ஆகியோர் வரை எவருடைய முற்போக்குக் கருத்துக்களும் நம் வாழ்முறையைத் தாக்கி அசைத்திட முடியவில்லை, காரணம் என்ன? நம் மக்கள் மாற்றங்கள் எவற்றையும் விரும்பியேற்க முன்வரா அளவிற்கு அறியாமைச் சாக்கடையில் உளம் ஒப்பிக் கிடந்தார்கள். இத்தகைய மண்ணில் - ஏனையோர் வெற்றி கற்பனை கூடச் செய்யவொண்ணாமற் போய்விட்ட மண்ணில் நம் அய்யா அவர்கள் எய்திய மாபெரும் வெற்றி வையம் முழுதும் ஏற்றுக் கொண்டுவிட்ட இயல்பான உண்மையாக நிற்கிறது.
காலூன்றி நிலைத்தனவா ?
எப்படி முடிந்தது இத்துணை அருஞ்செயல் ?
“ மெய்பொருள் காண்பது அறிவு “ என்றும்,
வள்ளுவர் தம் குறளிலேயே பகுத்தறிவுக் குரல் எழுப்ப முனைந்தார் என்பது உண்மையே.
“ நட்ட கல்லும் பேசுமோ ? “ - திருமூலர் அடித்துக் கேட்கத்தான் செய்தார்.
“ கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக “ - வள்ளலார் இவ்வாறு வாய்விட்டுக் கதறியது அண்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியே.
ஆனால் இவற்றை இன்றைய மேடைப் பேச்சுகளில் பயன்படுத்தும் நிலை மட்டுமே உண்டானதே தவிர, இக்கருத்துக்கள் அன்றைய மக்களிடையே வலுவாகக் காலூன்றி நிலைத்தனவா என்றால், இல்லையென்பது மட்டுமன்று, இக்கருத்துக்களைச் செவிமடுத்து கேட்க மக்கள் ஆர்வமாக முன் வந்தார்கள் என்பதற்கு அறிகுறி எதுவும் கிடையாது.
இப்படியும் பாடினார் வள்ளுவர்
இதற்கு இரண்டு காரணங்களை நம்மால் காணமுடிகிறது. முதன்மையாக, பகுத்தறிவியல் இலக்கணததை எல்லாத் துறைகளுள்ளும், எல்லாச் செய்திகளுள்ளும் செலுத்தி முழுமையான திறனாய்வு செய்து மக்கள் முன்னர் வைக்க இவர்கள் தயக்கம் காட்டிவிட்டனர்.
“ எந்தப் பொருளாயினும், எவர் வாயிலிருந்து வந்தாலும், எத்தன்மை பெற்றதாயினும் துருவிக் காண்பதே அறிவு “ என்று அருமையாக விளக்கிய அதே அறிஞர் வள்ளுவர்தான் தெய்வம், அலகை, ஊழ், எழு பிறப்பு, மேலுலகம் போன்றவற்றில் மக்கள் வைத்திருந்த அறிவற்ற நம்பிக்கையினை ஏற்றுப் போற்றினார். “ பிறப்பினால் எல்லோரும் ஒத்தவரே “ என்று பேசிய அவரே, துணைவி கணவனைத் தொழ வேண்டும் என்றும், “ இரப்போர் இல்லாவிட்டால் உலக நடப்பு சுவை பெறாது “ எனவும், சமநிலை முன்னேற்றத்தின் தடை நிலைகளை உறுதிப்படுத்தினார்.
பகுத்தறிவுக்கு எல்லை
“ நட்ட கல் பேசாது “ எனும் அறிவியலுண்மையைத் துணிந்து அறைந்த திருமூலர், “ நாதன் உள்ளே இருக்கிறான் “ என்று ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது.
சாத்திரச் சழக்குகளையும், கோத்திரச் சண்டைகளையும் கடுமையாகச் சாடி, “ சமரச சன்மார்க்கம் கண்ட இராமலிங்க வள்ளலார்“
“ சண்முகத் தெய்வமணி “ யையும், “ பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற, அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வத் “ தையும் எதிர்க்கத் தயங்கினார்.
அதாவது இந்த அறிஞர்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை அமைத்துக் கொண்டு, அதற்கு மேல் வாழ்க்கை நெறிகளை ஆய்வு செய்து அறிவிப்பதற்கு அஞ்சிவிட்டார்கள், அல்லது பொது மக்களைப் போன்றே புலன்களுக்கு எட்டாத சிலவற்றின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து விட்டார்கள்.
எல்லாம் அரை வேக்காடு
உலகப் பகுததறிவு இயக்கத்திற்கு முதன் முதலில் உருக்கொடுத்த சான் மார்ட்டினோ எனும் “ பிரெஞ்சுப் பேரறிஞர், “ குருட்டு நம்பிக்கையின்றி, புலன்கட்கு எட்டக்கூடியவற்றை மட்டும் ஏற்று, தெய்வச் செய்திகள் என்பவற்றைத் தள்ளுபடி செய்யும் ஆழமான அறிவு நிலை நுகர்ச்சியே பகுத்தறிவாகும் “ என விளக்கினார்.
இதன்படி மேற்கண்ட நம் நாட்டு அறிஞர்கள் யாவரும் அரைகுறைப் பகுத்தறிவாளர்களேயொழிய முழுமை எய்தியோர் அல்லர்.
இரண்டாவதாக, இவர்களுள் எவரும், பகுத்தறிவு முன்னேற்றக் கொள்கைகட்குப் பிறவிப் பகைவராக வாய்த்துவிட்ட பார்ப்பன இனத்தின்மீது நேரடியாகப் போர் தொடுக்க ஓர் இயக்கம் அமைத்தோ இன்றேல் தனியாகவோ முனையவில்லை, முயலவில்லை.
பார்ப்பனரைப் பணியும் வீரம்
“ சுரர் “ களின் அறங்களை வெறுத்தெதிர்த்த “ அசுரர் “ களின் அவல முடிவினைத் தெரிவிக்கும் கற்பனைக் கதைகளையும், அவற்றின் விளைவாகப் பார்ப்பனரைப் பணிந்து கிடந்த வீர (?) மன்னர்களையும் கருத்திற்கொண்டு இவர்கள் அடங்கி ஒடுங்கிக் கிடந்திருக்கலாம். அன்றேல், “ நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி “ முடிவெடுப்பதில் தவறிழைத்திருக்கலாம்.
இவ்விடத்தில் நாம், பிற்காலத்தவையும், பிற நாடுகளிலிருந்து இறக்கப் பெற்றவையுமாகிய இசுலாமிய, கிறித்தவச் சமயங்களைச் சார்ந்த மன்னர்களே, பார்ப்பனர்களால் ஏற்கெனவே வகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த விழா மரபுகளும், சடங்கு முறைகளும் தங்கள் சமய நடப்புக்களிடையே நுழைந்து கொள்ளுவதைத் தடுக்க முடியவில்லை என்ற உண்மைகளையும், எப்படி இவர்கள் பார்ப்பனரையே தங்கள் நம்பிக்கைக்குரியோராய் வைத்துதக் கொள்ள நேர்ந்தது எனும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் நினைத்தல் தேவை.
இதுவும் அவன் செயலே
இப்படியாக, நாகரீகத்தின் நறுமணமே படாமல் மேலும் மேலும் நலிந்து, அறியாமையில் ஆழ்ந்து, அடிமைத்தளையில் பிணிக்கப்பட்டுக் கிடந்த தமிழின உழைப்பாளி மக்களை உய்யச் செய்வதில் தந்தை பெரியார் அவர்கள் எப்படி அயராது முயன்று வெற்றி பெற்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது.
இளமைப் பருவததிலேயே எதனையும் துணிவாக எதிர்மறையில் அணுகி ஆராய்வதில்அய்யா அவர்கள் சுவை கண்டிருக்கிறார்கள். “ தாழ்த்தப்பட்டோர் “ இல்லத்தில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதில் விடாப்படியாக அவர் இருந்தமையால், “ எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது “ என்று சொல்லிக் கொண்டிருந்த ஒருவரது கடை முன்புறமிருந்த பந்தலை வீழ்த்திவிட்டு “ இதுவும் அவன் செயலே என்று அவர் கடைகாரரைக் கிண்டல் பண்ணியமையும் அவர்தம் பகுத்தறிவுப் பார்வைக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டுக்கள்.
வியப்புணர்வே காரணம்
உளவியலின்படி இவ்விரு வேறு நிகழ்ச்சிகள் தாம் பெரியாரவர்கள் பிற்காலத்தில் மாபெரும் சாதி ஒழிப்பு வீரராயும், ஆரியத்தை அஞ்சாது எதிர்க்க வல்லவராயும், பகுத்தறிவின் ஆழத்தையே காணும் பண்டாரகராயும், ஓங்கித் திகழ அடிப்படையாக அமைந்தன என்று கருதலாம்.
“ மெய்யியல் (தத்துவம்) வியப்புணர்வில் தொடங்குகிறது “ என்று விளக்கினார், நாட்டுக்கு நன்மை கூட்டும் பகுத்தறிவு பகர்ந்து நஞ்சைப் பரிசாக ஏற்ற கிரேக்க பெரியார்.
அதே வியப்புணர்வே - நம் மக்களின் வாழ்க்கை வழிகளில் நிரம்பியிருந்த முரண்பாடுகள், கொடுமைகள் பற்றிய வியப்புணர்வே திராவிடப் பெரியார்க்குத் தீராச் சிந்தனையைக் கொடுத்து, தெளிவான பகுத்தறிவுக் கருத்துகளின் ஊற்றாக அவர்களைப் பக்குவப்படுத்தியது.
தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ்
தந்தை பெரியாரவர்கள் கடந்த அரை நூற்றாண்டாக உலகியலின் எல்லாத் துறைகள் பற்றியும் முறைகள் பற்றியும் தமக்கென்றே உரிய தனிப்பாணியில் ஆய்ந்து பிழிந்து, சாற்றையும் சக்கையையும் பகுத்து நாட்டிற்கு - ஏன் - உலகிற்கே வழங்கயுள்ளார், அவர்தம் கருத்துக்களை எல்லா வகை இலக்கணக் கோல்களையும் வைதது அளந்து பார்த்த பின்னர்தான், உலக நாடுகளின் மாபெரும் மேதைகளை உறுப்பினராய்க் கொண்ட அனைத்து நாட்டு அறிவியல் - பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தந்தை அவர்கட்கு “ தென்கிழக்காசியாவின் சாக்கிரடீசு “ “ புதிய உலகின் தொலை நோக்காளர் “ என்ற பொறித்த இசைப் பட்டயம் தந்து தனக்கு ஏற்றம் சேர்த்துக் கொண்டது.
மார்க்சையே கண்டேன்
வடநாட்டு “ பிளிட்சு “ இதழின் துணையாசிரியர் திரு. கே. ஏ. அப்பாஸ், அய்யாவைச் சந்தித்த பின்னர், “ மார்க்சையே கண்டுவிட்ட மனநிறைவு கிட்டிற்று “ என்று புகழ்ந்து எழுதுகையில், தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்கத் தான்தோன்றிகள் சிலர் அய்யாவைக் “கொச்சை பொருள் முதற் கொள்கையர் “ என்பதாகத் திறனாய்வு எனும் பெயரில் திட்டினாலும், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பெரியாரின் “ மெட்டீரியலிசம் “, “ தத்துவ விளக்கம் “ , “ பெண் ஏன் அடிமையானாள்? “ எனும் மூன்று நூற்களை மட்டுமே படித்தால்கூட அவர் முழுமையான பகுத்தறிவாளர் என்பததை புரிந்து கொள்ள முடியும்.
கரடுமுரடான சொற்கள்
“ கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குபவன் காட்டுமிராண்டி “ என்ற அண்மைகால அறிவிப்பு மேலோட்டமாய்ப் பார்த்தால், மிகவும் கடுமையான - நயமற்ற - முரட்டுத் தன்மை வாய்ந்த சொற்றொடர்களாகப்படும். ஆனால், அவர்தம் நகைச்சுவை தோய்ந்த விளக்கங்களைப் புரிந்து கொண்ட பின்னர் எவரும் அச்சொற்றொடர்களைப் பொருளாழம் மிக்க மெய்யியல் தீர்ப்பு என்று ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர். அதிலும் “ அய்யத்தின் பலனைத்தான் ( Benefit of Doubt ) ஆண்டவன் மீது ஏற்றினார்கள் “ எனும் அவர்தம ஆய்வுரை நினைந்து நினைந்து வியந்தின்புறக்கூடிய அருமையான, அழகிய உண்மையாகும்.
தந்தையின் பணி பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் பரப்புவதுடன் நின்று விட வில்லை. பகுத்தறிவு வாடையே படாத மடமைச் செய்திகளைச் சமயத்தின் பெயரால் சலிப்பின்றிப் புளுகி வைத்தோரும், எங்கிருந்தேனும் பகுத்தறிவுக் கருத்துக்கள் வருமாயின் அவற்றை உடனடியாக ஒழித்துக் கட்டுவதில் “ சரச - சாம - தான - பேத - தண்ட ” முறைகளை கையாண்டு வெற்றி கண்டு வந்தோருமாகிய பார்ப்பனக் கொடுமையாளரோடு வெறியுடன் போராட வேண்டிய இன்றியமையாமையும் தந்தைக்கு ஏற்பட்டது.
அரசியலும் ஆலயமும்
உலகமாந்தன் ( Citizen of the World ) எனும் நூலில் ஆலிவர் கோல்டு சுமித் எனும் ஆங்கில அறிஞன், “ பாதிரிகள், பார்ப்பனர், பிக்குகள் ஆகியோர் எவ்வகை மாற்றத்திற்கும் ஏற்பளிக்க உளங்கொள மாட்டார்கள் “ என்று காட்டியபடி, எல்லா நாடுகளிலும், மதத்தலைவர்களின் மனப்போக்கு ஒரே தன்மையாகவே இருந்தது என்றாலும் கூட, மற்ற நாடுகளில் அரசியல் தலைவர்களின் கைகள் ஓங்கியபோது சமயத் தரகர்களின் கொட்டம் ஓய வேண்டியிருந்ததை வரலாற்று ஏடுகள் நமக்குக் காண்பிக்கின்றன. ஆனால், நம் நாட்டில் பார்ப்பனர் மட்டுமே படிப்பறிவு பெற்றிருந்தமையால், இயற்கையாக அவர்களே அரசியல் தலைவர்களாகப் பெரும்பாலும் வர நேர்ந்தது. எனவே, அரசியல் தலைமைக்கும், ஆலயத் தலைமைக்கும் எந்தச் சூழ்நிலையிலும் ஒற்றுமையும் இணக்கமுமே நிலவி வந்தன, சில வேளைகளில் மாற்றங்கள் கட்டாயமாகத் தேவைப்பட்டபோது மதத் தலைவர்களாம் பார்ப்பனர் விட்டுக் கொடுக்க மறுத்தே விட்டார்கள்.
பார்ப்பனரை ஏன் சாட வேண்டும் ?
இச்சூழ்நிலையில் தந்தையவர்கள் தமிழரிடையே பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சுவதோடு, பார்ப்பன எதிர்ப்புத் தன்மான உணர்வினையும் ஊட்டினால்தான் உருவான பயன் காண முடியும் என்று கண்டார்கள் அவரின் திட்டத்தைத் தொலைநோக்குடன் புரிந்து கொள்ள வியலாத நிலையில் சில அறிஞர்கள், “ பகுத்தறிவைப் பரப்பவேண்டியதுதான், ஆனால், பார்ப்பனர்களை ஏன் கடுமையாகச் சாட வேண்டும் ? “ என்றனர். வேறு சிலர் பார்ப்பனர்தம் பிடியிலிருந்து நாம் விடுபட வேண்டியதே, எனினும் எதற்காக கடவுளையும் மதத்தையும் எதிர்ப்பதில் கருத்துச் செலுத்த வேண்டும்? என்றனர்.
இவற்றையெல்லாம் பெரியார் பொருட்படுத்தவில்லை. பகுத்தறிவுக்குப் புறம்பான குருட்டு நம்பிக்கைகளும் பார்ப்பன இனத்தின் உழைப்பில்லா உயர் வாழ்வும் பிரிக்க வொண்ணாமல் பின்னிக்கிடந்த நுட்பமான நிலை நூற் பயிற்சியாலும், நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளாலும் அவர்க்கு நன்றாகப் புலப்பட்டது. எனவே, நாட்டு மக்களின் நலனுக்காக இரண்டு வகைக் கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றுவதென உறுதி பூண்டார்கள். ஊர்தோறும் சுற்றி உள்ளம் திறந்து பேசினார்கள்.
கருப்புச் சட்டையின் உட்பொருள்
இந்த எதிர்நீச்சலில் எதிர்பார்த்தபடியே எத்தனையோ இடுக்கண்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் இறுதியில் அவர்தம் விடா முயற்சி வென்றது.
பார்ப்பனர் அனைவரும் வடமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆரிய இனத்தினர் ஆனபடியால், தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனரல்லாத தமிழர்கட்குத் திராவிடர் எனும் இனப்பெயரைச் சூட்டுவதற்கு நல் வாய்ப்புக் கிட்டிற்று பெரியாருக்கு.
பகுத்தறிவு - தன்மானஇயக்கத்தின் பெயரைத் திராவிடர் கழகம் எனும் இனவழியமைப்பாக மாற்றினார். திராவிடர்களின் இருண்ட நிலையைக் குறிக்கும் கறுப்பு வண்ணமும், அவ்விருளினை நீக்கவல்ல வீரத்தைக் காட்டும் சிவப்பு வண்ணமும் கொண்ட கொடியை அறிமுகப்படுத்திய அய்யா அவர்கள் இயக்க தொண்டர்கள் ஒரே சீராக கறுப்புச் சட்டை அணிந்து கொள்ளச் செய்தார்கள்.
சங்கராச்சாரியே ஏற்றார்
“ இந்து மதமும், இந்து மதக் கடவுள்களும், தமிழனுக்கோ, தமிழ் நாடடிற்கோ தொடர்புடையனவல்ல. எந்த தமிழராலும் ஏற்பட்டவையும் அல்ல. எவையும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையும் அல்ல. இவை யாவும் அயல் மொழியாகிய ஆரிய மொழியிலும், வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை ” என்ற தமிழனத் தந்தையின் கருத்தை இதுவரை எவரும சான்றுகளுடன் மறுத்துரைக்க முன்வரவில்லை. மாறாக இக்கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சான்றுகள்தான் ” கல்கி ” இதழில் சமயத் தலைவர் சங்கராச்சாரி வாயிலாகவும், “ கலைக் களஞ்சியம் ” தொகுப்பில் சட்ட அறிஞர் வரதாச்சாரி வாயிலாகவும் கிடைத்துள்ளன.
“ பார்ப்பனர் தம் ஒழுக்கக் கேடுகளையெல்லாம் இந்து மதக் கடவுள்கள் மீது ஏற்றிவிட்டனர் ” எனும் அய்யாவின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டோருக்கு அரிய விருந்தாயிற்று.
பார்ப்பனத்தி நாற்று நடுகிறாளா?
“ இந்து மதம் நமது மதமாயிருந்தால், அதில் நாமே நம்மை ஈன சாதி - இழிபிறவி - நாலாம் சாதி - சூத்திரன் - பார்ப்பனனின் அடிமை -நம் பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தக்கவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ” எனும் ஈரோட்டு ஏந்தலின் இயல்பான கேள்வி எத்தனை ஆயிரம் தமிழர்கள் இந்து மதத்திற்கு விடைகொடுத்துவிட்டு, முழுப் பகுத்தறிவாளர்களாகத் தங்களை உயர்த்திக்கொள்ள செய்தது.
“ கோவில் கட்டியவன் தமிழன், குளத்தை வெட்டியவன் தமிழன், கடவுளுக்கு உருவம் சமைத்துக் கொடுத்தவன் தமிழன், குடமுழுக்குக்குக் கொட்டியழுதவன் தமிழன், இவ்வளவும் செய்த தமிழன் கருவறையினுள் நுழையக் கூடாது என்கிறானே ஆரியன். இன்னும் தமிழனுக்கு மானம் - வெட்கம் - பகுத்தறிவு வரவில்லையென்றால், பிறகு எந்த நூற்றாண்டில் வரமுடியும் ? ” என்றும்
“ எந்த பார்ப்பனத்தியாவது நாற்று நடுகிறாளா? களை எடுக்கிறாளா? பேயாடுகிறாளா? இல்லையே, ஏன்? ” என்றும்
தமிழனத் தலைவர் விடுத்த கணை ஒவ்வொருவரின் உளச் சான்றையும் உலுக்கி எடுத்தது.
தாலி ஆராய்ச்சி
நம் தமிழர் இல்லங்களில் கடைபிடிக்கப் பெற்றுவந்த திருமண முறைகள் தொடர்பாக, ” பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப ” எனும் தொல்காப்பிய வரிகளை எடுத்துக் காட்டிய பெரியாரவர்கள், ” இன்று பெண்களின் அடிமைச் சின்னமாய் விளங்கும் “ தாலி ” பண்டைய தமிழகத்தில் இடம் பெற்றிருந்ததா? ” எனத் தமிழ்ப் புலவர்களிடம் அய்ய வினா எழுப்பியதால், “ தமிழர் திருமணத்தில் தாலி ” எனும் பொருள் பற்றி ஆராய்ச்சி செய்த தமிழறிஞர், “ மங்கல நாணோ, தாலியோ தமிழர் திருமணத்தின்போது கட்டப்பட்டதாகத் தெரியவில்லை ” என்று முடிவு கட்ட வேண்டியிருந்தது.
அடிகளார் கண்ட நாத்திகம்
வ. உ. சிதம்பரனார், மறைமலை அடிகளார், திரு. வி. கலியாணசுந்தரனார், சோம சுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் எல்லாம் பெரியாரது இன உணர்ச்சிக் கண்ணாடியை அடிக்கடி பொருத்திக் கொண்டதால் அவ்வப்பொழுது, ஆங்காங்கே பகுத்தறிவுக் கொவ்வாத நிலைகளைக் கண்டுபிடித்துக் கண்டிக்க முடிந்தது. மிகப் பெரும் சமயத் தலைவராகிய குன்றக்குடி அடிகளாரோ, இனவுணர்ச்சியின் எல்லைக்கே சென்று, “ இன்றைய ஆத்திகம் என்பது தமிழின அழிவாகும், இன்றைய நாத்திகம் என்பது தமிழின உய்வாகும்” என்று அறிக்கை விட்டாரென்றால், அதற்கு அடிப்படையிட்டது தந்தை பெரியாரே என்பதனை அடிகளாரே ஒப்புக் கொள்ள தயங்க மாட்டார்.
பகுத்தறிவாளருக்கு இனப்பற்று இருக்கலாமா?
இவ்வண்ணமாகப் பெரியாரவர்கள் பகுத்தறிவு, இனவுணர்வு ஆகிய இரு மருந்துகளையும் ஒன்றாகக் குழைத்துக் கொடுத்து, தமிழர்களின் அடிமை நோயின் அடிப்படை வலுவைக் குறைப்பதில் மிகப் பெரும் வெற்றியைக கண்டுவிட்டார்கள். விதைத்தவரே விளைச்சலை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.
இங்கே ஒரு கேள்வி பிறக்கிறது. “ ஒரு பகுத்தறிவாளருக்கு இனப்பற்று இருக்கலாமா ? ” என்பதே அது.
எடுத்த எடுப்பில் இது சிக்கலாகக் காணக் கூடும். சிறிது சிந்தித்தாற்கூட தெளிவு கிட்டிவிடும்
பகுத்தறிவியலின் குறிக்கோள் யாது? மன்பதை முழுதும் மகிழ்வாக வாழச் செய்வதே - அதாவது வேறுபாடுகளற்ற சமநிலை சமைப்பதே. ஆக, பகுத்தறிவாளர்க்குத் தேவையானது மனிதப்பற்று.
ஆரியமும் இந்திய தேசியமும்
பெரியாரவர்களும் தமக்குக் கடவுள் பற்று, நாட்டு பற்று, மொழிப் பற்று கிடையா என்றும், மனிதப்பற்று மட்டுமே உண்டு என்றும் அடிக்கடி கருத்து வெளியிடுகிறார். இந்த மனிதப் பற்றுக்குப் பெருங்கேடாய் - தடைக்கல்லாய் நிற்பது ஆரிய இனவழி வந்தோர் கற்பனையாக உருவாக்கி வைத்துள்ள “ இந்திய தேசியம் ” என்பதாகும். மாந்தப் பற்றுக் கொண்டோர் தங்கள் குறிக்கோளுக்கு குறுக்கே வரும் எவற்றையும் எதிர்த்தாக வேண்டும். தந்தையின் உயர்ந்த நோக்கம் நிறைவேறவிடாமல் ஊறு விளைவிப்பவை ஆரியமும், இந்தியத் தேசியமுமே. தமிழக அரசினரின் சட்டத்தை எதிர்த்து ஆகம நூற்களில் குறிப்பிட்டுள்ள வகுப்பார் தவிர, ஏனைய பிரிவினர் “ சாமி ” யெனும் கல்லைத் தொட்டால், “தீட்டு”ப் பட்டு விடும் என்பதாகச் சென்ற ஆண்டு பார்ப்பன இனத்தவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்காடினமையும், அதனை ஏற்றுக் கொண்டு நடுவர்கள் தீர்ப்பு வழங்கினமையும் சமநிலைக் கோட்பாட்டுக்கு எவர் உலை வைக்கத் துணிகின்றனர் என்பதற்கு இணையற்ற சான்றுகள். எனவே, திராவிடத் தேசியம் அல்லது தமிழ் தேசியம் எனும் பெயரால் மனிதச் சமநிலை படைத்த மன்பதையைக் காண விரும்பி உழைக்க முனைந்தார் பெரியார்.
பொதுவுடைமையும் தனி நாடும்
“ சோவியத் ” துத் தலைவர்கள் எப்படித் தனிநாட்டில் பொதுவுடைமைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயன்றார்களோ, அதே போன்றுதான் தற்போதைக்குத் தமிழ்நாட்டிலே யும் சமநிலை அமைப்பை உருவாக்கி வழிகாட்டலாம் என்று செயலாற்றினார் பெரியார். “உண்மையான பொதுவுடைமை ஆட்சி இந்நாட்டில் உண்டாகுமாயின், அப்போது தனிநாட்டுக் கொள்கைக்குப் பெரும்பாலும் தேவையிராது” என்று 1952- ஆம் ஆண்டிலேயே தந்தை அறிவித்தமை அவர்களுடைய கொள்கைத் தெளிவினை அய்யத்திற்கிடமில்லாமற் காட்டிவிட்டது.
எனவே, பெரியாரவர்களின் நடைமுறைக் கோட்பாடுகளில் குழப்பம் எதுவும் கிடையாது.
அனைத்துலகின் மூத்த பேராசிரியர்களின் கருத்துப்படி, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் நடந்திராத மிகப் பெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காண்பித்தே விட்டார்கள் நம் தந்தை.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது போன்று தமிழினத்தின் தூக்கத்தைக் கலைக்க மதயானையென வந்து மிதித்துப் பெரியார் அவர்கள் பெரும் அறிஞர்களென்போர் செய்தற்கு அரிதாகிவிட்ட மலை போன்ற முயற்சியில் மாட்சிமை நிறைந்த வெற்றியை ஈட்டி விட்டார்கள்
செயற்கரிய செய்த செம்மலின் புகழ் வரலாற்றில் நிலைத்து வாழப் போவது உறுதி.
-இறையன்
No comments:
Post a Comment