Tuesday, March 15, 2011

குடியாட்சிப் பண்புகளில்!

தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியப் பெருநாட்டில் கழிந்த அரை நூற்றாண்டுக் காலமாக இடம் பெற்று வரும் ஆட்சியியல் நடவடிக்கைகள் மக்களாட்சி இலக்கணத்திற்குட்டவையா எனும் வினா எழுப்பப் பெற்றால் " இல்லை " எனும் விடையே பேருருவெடுத்து நிற்கும் !

குடியாட்சி இலக்கணததை மிகவும் பகடி - கேலி செய்து கொக்கரிப்புச் சிரிப்பு சிந்துவதைப்போல, அவ்வளவு முரண்பாடாக அரசியல் இருப்பது எதனால் ?

குடியாட்சிப் பண்புகளில் குறைந்த அளவுப் பயிற்சி கூட நம் மக்கள் அனைவருக்கும் தரப்படாத குற்றமே இதற்கு அடிப்படையான காரணம் !

மக்களாட்சி முறை வெற்றி பெறப் படிப்பு, பயிற்சி இரண்டும் குடிகட்கு இன்றியமையாதவை. இரண்டில் ஒன்றேனும் இருந்தால் கூட சற்று தாழ்வில்லை எனலாம். நம் மக்களுக்கு இவை இரண்டும் இல்லை. படிப்பில்லா மக்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலாவது ஓரளவு பலன் விளைந்திருக்கும்.  

ஆண்டை மனப்பான்மை
         ஆட்சி என்றால் என்னவென்று தெரியா ம(மா)க்கள் கோடிக் கணக்கில் நம் நாட்டில் வாழ்கின்றனர். அவர்கட்குக் குடியாட்சி என்பது பற்றியும் அதில் தாங்களே முதன்மையானவர்கள், அடிப்படையானவர்கள், அதிகாரிகள் எனும் நிலைப்பற்றியும் தெளிவு கிடையாது. தங்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் முகவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதற்குத்தான் சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும், பொறுப்பேற்கிறார்கள் என்பதை முழுமையான புரிந்து கொள்ளவில்லை. அதாவது புரிந்து கொள்ளுமாறு செய்யப்பட வில்லை.

இந்த நிலையில் தங்களுடைய ஒப்புச் சீட்டுகளின் அருமையும் பெருமையும் அவர்களால் உணரப்படுவதில்லை. அரசினரின் நடவடிக்கைகள் அவர்களால் ஆய்வு செய்யப்படுவதில்லை. தங்களின் முகவர்கள் அமைச்சர்கள் ஆகியோரின் தவறுகள் அவர்களால் சுட்டிக் காட்டப்படுவதில்லை. தங்களின் உரிமைகளை அவ்வப்போது தட்டிக் கேட்பதற்கு அவர்கள் முனைவதில்லை.

பிறகெப்படி ஆட்சி மக்களுக்காக மக்களால் ஆளப்படும் மக்களினது ஆட்சியாக இருக்க முடியும்?


எனவே, தான் வேட்பாளர்கள் மக்களுக்குக் கையூட்டு வழங்கத் துணிச்சலாக முன் வருவதும், தேர்ந்தெடுக்கப்பட்டபின் அதிகாரமாக ஆண்டைப்பான்மை - எஜமானத்தனம் காட்டுவதும் தாராளமாய் நடக்கின்றன. ?


குடி செய்யும் நெறிகளா?
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒழுங்காகச்     சென்று கடமையாற்றாமை (சான்று : தொலைக்காட்சி)


  • வாக்கெடுப்பு" நடக்கையில்கூட மண்டபத்தினுள் இல்லாமை. 
  • பணத்திற்காக ஒப்பளிப்புச் செய்தல். 
  • நாகரிகமில்லாமல் கூச்சல் போடுதல்.  
  • அவைத் தலைவரையே முற்றுகையிடுதல்.  
  • உறுப்பினர் ஒருவர்க்கொருவர் "போடா, வாடா" என்று ஏசிக் கொள்ளுதல்.  
  • பண்பாடற்ற அருவருப்பான கெட்ட சொற்களைப் பயன்படுத்தி வைதல். 
  • ஆடை களைந்து காட்டும் நாணமின்மை.  
  • இடத்தை விட்டு எழுந்து முன்னே விரைதல்.  
  • இருக்கைகளின் மேலேயே ஏறிப் பாய்தல்.  
  • ஆளுநர் உரையின்போதும், முதலமைச்சர் உரையின்போதும் தடைக் செயல்களில் ஈடுபடுதல்.  
  • எதிர்க் கட்சியினரைப் பகைவராகவே கருதுதல்.  
  • உடன் உறுப்பினர்களைத் தாக்குதல்.  
  • அவைத் தலைவர் அனைத்துக் கட்சியினருக்கும் தாம் பொது என்று எண்ணி நடவாமை. 
  • அமைச்சர்கள் ஒழுங்காக விடை சொல்லும் பொறுப்பிலிருந்து வழுவுதல்.  
  • மக்களின் நன்மைக்காக என்றில்லாமல் தன்னல நோக்குடன் ஆட்சித் தலைவர்கள் சட்டம் செய்தலும் சட்டத்தைத் திருத்துதலும்.  
  • கெட்ட உள்நோக்கத்துடன் .  மாநில அரசுகள் கலைக்கப்படுதல்
  • பணத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சி  மாறுதல்
  • சாலைகள் அமைத்தல், நீர்க் குழாய்கள் அமைத்தல், குளம் - ஏரி கண்மாய்களில் தூரெடுத்தல், பல வகையான கட்டுமானங்கள், ஒக்கிடுதல்கள், பராமரிப்புகள் முதலிய செயல்கள் நடக்கையில் பித்தலாட்டங்கள் - கையாடல்கள் - கொள்கையிடல்கள் ஆகியவற்றை நிகழ்த்துதல்; 
  • தேர்தல்களின் போது கள்ளச்சீட்டுப் போடச் , ஒப்போலைகளை ஒட்டு மொத்தமாகக், சீட்டுப் பெட்டிகளையே எடுத்துக் கொண்டு ஓடி . விடுதல் கவர்தல்செய்தல்
இவை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. இவ்வாறு நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை போல (Taken for granted) போல மிகமிக இயல்பாகப் போய்விட்ட இந்த நிலவரங்களெல்லாம் " குடி செய்யும் நெறிகள் " ஆகுமா? ஆகவே ஆகா!

80 ஆண்டுக்கு முன்னரே .....
இப்படி குடியாட்சிப் பண்புகளில் மக்கள் பயிற்சி பெறாவிட்டால் ஒழுங்கீனங்களும் நாணயக் கேடுகளும், நேர்மைக்கு நேர்ச்சிகளும், பொது ஒழுக்கச் சாவுகளும், மாந்தத் தன்மையற்ற கடுமைகளும், நாட்டில் ஊன்றப் பெற்று அவைதாம் நாட்டு நடப்பு நிலை (Order of the Day ) என்று ஆகிவிடும் என்பதை 80 ஆண்டுகளுக்கு முன்னரே நீதிக் கட்சி என அழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் பார்ப்பனரல்லா முன்னோடிகளும் பின்னர் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நம் இன மீட்பர் தந்தை பெரியாரும் கற்பனை செய்துவிட்டனர்.
         
அவ்வண்ணமே தங்களின் எதிர்பார்ப்பை அந்தக் காலத்திலேயே பொறுப்புணர்ச்சியோடு வெளியிடவும் செய்தனர்.

1916- "டிசம்பரில் நீதிக் கட்சித் தலைவர்கள், மக்கள் தொண்டர் பிட்டி தியாகராயர் பெயரால் வெளியிட்ட பார்ப்பனரல்லாதார் பேரறிக்கை என்னும் புகழ் தோய்ந்த ஆவணத்தில், " தேசியங்கள் " கோரிய முழுமையான உடனடியான குடிமக்கள் தன்னாட்சி (Home lrule ) பற்றிக் குறிப்பிட்டு" பெரும்பன்மை மக்களின் படிப்பின்மையையும் தகுதி யின்மை யையும் பற்றிப் பொருட்படுத்தாக மக்களாட்சிக் கோரிக்கை குறித்து நம் மறுப்புக் கருத்தை உரிய காலத்தில் ஒலிக்கவில்லையேல், எல்லா மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்றாகிவிடும்.

விரும்பத்தகாத விளைவுகள்பற்றிய கவலையோடு நன்றாக வரையறுக்கப்பட்ட மக்களின்பால் நம்பிக்கைவைக்கும் கொள்கையால் விளையும் முற்போக்கான வளர்ச்சி, மக்களின் தகுதியுடைமை மெய்ப்பிக்கப் பட்டதன் பின் தொடர்ச்சியாக, காலங் கருதி வழங்கப்படும் உரிமைகள் இவற்றை மட்டுமே நாம் வலுவாக ஏற்கிறோம் என்பதைக் கூறியாக வேண்டும்.

அரசினர் இதுபற்றி நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு முன்பாக, அனைத்துச் சாதியினர், வகுப்பினர், இனத்தினர் தம் ஆர்வங்களையும், விருப்பங்களையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். நம் பார்ப்பனரல்லா மக்கள் முதலில் தம் பையன்களையும், பெண்பிள்ளைகளையும் மிகப் பெரும் எண்ணிக்கையில் படிக்க வைக்க வேண்டும் ’’ என்பதாகச் சாற்றினார்.

நான்காம் நெறி  
           
சில மாதங்கள் கழித்து1917- இல் தெ.... சங்கத்தின் சட்ட திட்டங்கள் வெளியிடப்பட்டபோது மேற்குறிப்பிட்ட கருத்தே 4-ஆம் நெறியாக இப்படி இடம் பெற்றது:
             
விரும்பத்தகா விளைவுபற்றிய அக்கறையோடு நன்கு வரையறைசெய்யப்பெற்ற - மக்களிடம் நம்பிக்கை வைக்கும் கொள்கைபயக்கும் முற்போக்கான வளர்ச்சி, மக்களின் தேர்ச்சி உறுதிப்பட்டமைக்குச் சான்று தோன்றிய விடியலின் பிறகு, காலத்தினால் அளிக்கப் பெறும் உரிமைகள் ஆகியவற்றை மட்டுமே சங்கத்தனர் திண்ணமாக ஒப்புகின்றனர். முழுமையான தன்னாட்சிக்கான காலம் இந்தியாவில் இன்னும் வரவில்லை. அந்த நோக்கத்தினை எய்துவதற்கு நம்மை அணியப்படுத்திக் கொள்ளும் காலம் இது ".
    
எப்படிப்பட்ட தொலைநோக்கும் எதிர்பார்ப்பும், உரிமையுணர்வும், துணிச்சலும் நீதிக்கட்சிப் பெருமக்கட்கு இருந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கையில் பெரிய மலைப்பும் வியப்பும தோன்றுகின்றன.

No comments:

Post a Comment