Friday, February 11, 2011

படிப்பு பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை


            ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எனபோரின் பொறுப்பில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே ஓராசிரியர் பள்ளிகள் என்பவை திறக்கப்படடன.  வேலையற்றோர் நிவாரணத் திட்டம்எனும் பெயரில் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.  “ Planning Commission Schools under unemployment Relief Scheme ” என்று அவை ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன.

            1950- களில் உயர்நிலைப்பள்ளி நீக்கப் பொதுத் தேர்வில்  வெற்றி பெற்று (அந்த நாள்களில் அதுவே குறிப்பிடத்தக்க போதிய படிப்பு !) வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர்களாக அமர்த்தப்பட்டனர்.  ஆசிரியர்ப் பயிற்சி பெறாதோர் அவர்கள் என்பது கவனத்திற்குரியது.  பயிற்சி பெற்றோராகவே போட வேண்டுமென்று குறியாக இருந்திருந்தால அக்காலத்தில் அவ்வளவு பேர் கிட்டியிருக்க மாட்டார்கள்.  ஒரு சில ஆண்டுகளில் அந்த ஆசிரியரனைவரும் முறையான ஆசிரியர்ப் பயிற்சி பெற்றுத் திரும்புமாறு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது ! படிப்படியாக ஓராசிரியர் பள்ளிகளில் இரண்டு - மூன்று ஆசிரியர்கள் இடம் பெறும் நிலை உண்டாக்கப்பட்டு விட்டது.

            அந்தக் கால கட்டத்தில் தமிழக அரசின் கல்வித் துறையில் ஆசிரியராக முதலில் அமர்த்தப்பட்ட நான், குறுகிய காலத்தில் பள்ளி ஆய்வாளனாக மாற்றப்பட்டுத தொண்டாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். எனவே பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தில் எனக்கு நேரடிப் பட்டறிவு உண்டு.  300-க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழும் சிற்றூர்களைக் கண்டுபிடித்து அந்த ஊர்களிலெல்லாம் பள்ளிகளை அமைக்கும் பெரும்பணியினைப் பள்ளி ஆய்வாளர்களாக இருந்தோர் நன்கு உழைத்து நிறைவேற்றினர்.

            பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதுமா?  அன்றாடங் காய்ச்சிக் குடும்பங்களைச் சேர்ந்த பாலர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு என்ன உறுதி?  பள்ளிக்கு ஒரு வேளை வந்தாலும் பட்டினியால் வாடும் வறிய குடும்பங்களில் பிறந்த சிறு பிள்ளைகள் பசியுடன் பாடங் கேட்டால் பயன் விளையுமா?  இதை ஆழமாய்க் கருதிப் பார்த்த காமராசர் ஏழைக் குழந்தைகட்கு இலவசமாக்ப் பகலுணவு வழங்கும் திட்டத்தினைச் செயற்படுத்தினா.  கல்வியலுவலர்கள் பகலுணவுத் திட்ட அரசு உதவித் தொகைகளுக்கான காசோலைகளை எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் விரைந்து அவற்றைத் தலைமையாசிரியர்களிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.

            ஊராட்சி ஒன்றியங்கள் உருவான பிறகு படிப்படியான முறையில் மூன்று ஆண்டுகளில கட்டாயக் கல்வித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார் காமராசர்.   அந்தக் கட்டத்தில் ஒன்றியங்களில் அமர்த்தப்பட்டிருந்த கு()முகக் கல்வியலுவலர்களின் துணையோடு ஊர் ஊராகச் சென்று பெற்றோர்களைக் கூட்டி சங்கம் அமைத்து, தமிழ்ச் சிறார்களைக் கல்வி பயில வைப்பதில் சரகக் கல்வியதிகாரிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்துக் காட்டினர்.

            1959- ஆம் ஆண்டிலிருந்து  62- ஆம் ஆண்டுவரை அருப்புக்கோட்டையிலும், விருதுநகரிலும் பணியாற்றிய எனக்குப் பெருந்தலைவர் காமராசரோடு அணுக்கமாய் பழகுகின்ற நல்வாய்ப்பு நிறையக் கிட்டியது.

            அதற்கும் முந்தியே அப்பெருந்தலைவரிடம் ஒரு சிறு அளவில் நான் அறிமுகமாகியிருந்தேன். பறம்புக்குடி மன்னர் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் நாற்பது ஆண்டுகட்குமுன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வருகை புரிந்த முதலமைச்சர் காமராசரைப் போற்றும் பாடலொன்றை இயற்றி அதை மாணாக்கரே ஆர்வம் மேலிடப் பாடுமாறு ஏற்பாடு செய்திருந்தேன். இசையின் இனிமையாலும் பாட்டினுள் அடங்கியிருந்த ஆட்சியின் அருஞ்செயல்களை சுட்டிக் காட்டும் பட்டியலாலும்  அவ்வகையில் உணர்ச்சி வயப்பட்ட  காமராசர் அப்பாடலை என்னிடமிருந்து பெற்று 10,000 படிகள் அச்சிடுமாறு, தம்முடன் வந்த சட்ட மன்ற உறுப்பினரை வேண்டிக் கொள்ளும் விந்தை அப்போது நேர்ந்தது.  மேலும் கல்வி ஆய்வு அலுவலராக நான் மாற்றமுற்ற பின்னர் அய்ந்தாண்டுத் திட்ட விளக்க நடவடிக்கைகளில் நானும் நிறையப் பங்கேற்க வாய்த்ததால் மாவட்ட ஆட்சியர், துணையாட்சியர் போன்ற அதிகாரிகளிலிருந்து கீழ்மட்ட அலுவலர்வரை அரசின் பல துறையினர்க்கும் நான் தெரிந்தவனானேன்.

            அந்த நிலையில் முதலமைச்சர் முகவை மாவட்டப்  பகுதிகளில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட வேளைகளில் உடன் செல்லும் அதிகாரிகளின் பரிவாரக் குழுவில் நானும் அடங்கி அவரின் நல்லெண்ணத்தைப் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளிச் சீரமைப்பு மாநாடு, சீருடைகள் வழங்கு மாநாடு, புத்தகப் பை வழங்கு மாநாடு போன்று நாங்கள் ஏற்பாடு செய்த பல மாநாடுகளில் கலந்து கொண்ட முதல்வர் அம்முயற்சிகளைப் பேருவகையோடும், பூரிப்புடனும் பாராட்டி ஊக்குவித்த செய்திகள் இங்கு தேவையில்லை.  பல சிற்றூர்களில் எவ்வாறு திடீர்ப்பள்ளிகள் முளைத்தன என்பதை மட்டும் குறிப்பிட வேண்டும்.

            மக்களிடம் குறை கேட்கும் சுற்றுப் பயணங்களில் காமராசரிடம் அக்காலத்திய் சிற்றூர் மக்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானவையாக இருந்தவை மூன்று.  மின்சாரம், இணைப்புச் சாலை, பள்ளி என்பவையே அவை.  நிலையான பரந்த ஒளியை ஊர் முழுதும் பாய்ச்சவல்ல மின்சாரம் தங்களின் சுவையற்ற - சந்தம் மாறா வழமையான நாட்டுப்புற வாழ்வுக்குப் புதிய வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர்  - சலித்துப் போயிருந்த மக்கள் முதன்மைச் சாலைகளைச் சென்றடைய வெறும் ஒற்றையடிப் பாதைகளையும் கரடுமுரடான பழைமையான வண்டிப் பாதைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள், முறையான இணைப்புச்சாலை போடப்பட்டுவிட்டால் இன்றியமையா உடனடி உதவிகட்காகப் பேருந்துகள் ஓடும் சாலையை விரைந்தடைய எளிதாக  - ஏந்தாக விருக்குமென்று சரியாகவே அவர்கள் கற்பனை செய்தனர்.  அடுத்த ஊரில் இருக்கும் பள்ளிக்குத் தம் பிஞ்சுகளை அன்றாடம் அனுப்பி வைப்பதிலுண்டான தொல்லைகள் நீங்கும் வண்ணம் தம் ஊரிலேயே பள்ளியொன்று திறக்கப்பட்டால் தம் பிள்ளைகள் எழுதப் படிக்க மட்டுமாவது அடிப்படைக் கல்வி பெற்றுவிட முடியுமே என ஆர்வப்பட்டனர் பெற்றோர்.

            காமராசர் அந்தச் சூழ்நிலையில் எப்படி வினையாற்றினார் என்பது ஆர்வத்தூண்டவல்ல - வழக்கமீறிய தனித்தன்மையான செய்தி ! அரசின் பணவொதுக்கீட்டிற்கிணங்க இணைப்புச்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு பற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அவ்வூருக்கெனத் தனியே ஒரு பள்ளி நிறுவுவதற்கான கல்வித் துறை நெறிகள் குறித்து என்னிடமும் ( பிற பகுதிகளில் உரிய கல்வி அலுவலரிடமும் ) கலந்து பேசிய பின்பு, குழுமிய மக்களிடம் முதல்வர் இப்படிக் கூறுவார்.

            மின்சாரம் வந்து கொண்டேயிருக்கின்றது. தமிழ் நாட்டின் அத்தனை சிற்றூர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் வழங்கிவிட வேண்டுமென்று அரசு முழு மூச்சாக முயற்சியில் இறங்கியுள்ளது.  ஆகவே, உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும்.  இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.  அடுத்து, இணைப்புச்சாலைபற்றி உங்கள் பி. டி. . விடம் பேசினேன். கையிருப்பில் உள்ள நிதி ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி கூடிய விரைவில் செய்து விடுவதாக அவர் உறுதி கூறியிருக்கிறார்.  மூன்றாவதாக நீங்கள் கேட்டுள்ள பள்ளிக் கூடத்தை இதோ இங்கு இருக்கிறாரே இன்ஸ்பெக்டர், (என்னை புன்னகையுடன் சுட்டிக் காட்டி) இவர் நினைத்தால்  - அந்த சட்டம் இந்தச்சட்டம் என்று இடையூறு செய்யாமல் இருந்தால் - டி. . .  அவர்களின் ஒப்புதலோடு உடனடியாக ஒரு துணைப் பள்ளிக்கூடத்தையாவது இங்கு உண்டாக்கிவிட முடியும்.  சட்டங்களைக் காட்டி அதிகாரிகள் செய்யும் குறுக்கீடுகளால்தான் உடனடியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது ! “

            இப்படிப் பேசி எங்களை நோக்கிச் சிரித்துக் கொண்டே கண் சிமிட்டி விட்டுச் சற்று நிறுத்துவார் பெருந்தலைவர்.

            நான் அடக்கத்துடன் எழுந்து நின்று ஆனால, அச்சமின்றி, உரிமையுணர்வோடு கருத்துரைப்பேன், “ பெருமதிப்பிற்குரிய முதல்வரய்யா அவர்கள் குறிப்பிட்டபடி சட்டம என்று எடுத்துக் கொண்டால் இந்த ஊரில் பள்ளி உண்டாகவே முடியாது.  இவ்வூர் மக்கள் தொகை 300 -க்கும் குறைவுதான்.  அருகிலேயே ஒரு கல்தொலைவுக்குள் தொடக்கப்பள்ளி இருக்கிறது.  ஆனால் இக்குடியிருப்பிலிருந்து 20 - க்கு மேற்பட்ட சிறுபாலர்கள் அன்றாடம் நடந்து சென்று அப்பள்ளியில் படித்துவிட்டு வீடு திரும்பும் நிலை கவலையளிக்கக் கூடியது.  இரண்டு ஊர்களுக்கும் இடையே ஏதேனும் வாய்க்கால் உள்ளதா? என்று நான் இங்கே கேட்டபோது,  ஓர் ஓடையுண்டு என்றார்கள்,  அந்தக் காரணம் போதும், ஓடையில் நீர் ஓடுவதுண்டா? என்பதைப் பற்றிக் கருதாமல், இயற்கைத் தடை (Natural barrier) இருப்பதாக இக்குடியிருப்பில் துணைப்பள்ளி (Feeder School) யொன்றைத் திறக்க நான் பரிந்துரை செய்ய முடியும்” .

            என் கருத்துரையில் பொதிந்து  கிடக்கும் பல பொருள்களை எண்ணி, முதல்வர் முக மலர்ச்சியோடு,  ரொம்ப சந்தோசம் இதற்காகத்தான் இந்த இன்ஸ்பெக்டரை கையோடு கூட்டிக் கொண்டு வருகிறேன்.  அவரின் பரிந்துரையை மாவட்டக் கல்வி அதிகாரி மறுக்க மாட்டார். அப்புறமென்ன?  இங்கேயே இப்போதே பள்ளிக்கூடத்தைத் திறந்து விடலாம்னேன் ! ” என்றுரைத்து,  ஊர்காரங்க கேட்ட மூன்றில் ஒன்றை உடனடியாகத் கொடுத்தாச்சய்யா என அறிவிப்பார்.

            காமராசர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான  பள்ளிகள், எப்படியெல்லாம் முளைத்தன என்னும் வரலாற்றை இன்றைய இளைஞர் தங்கள் மூளைகளில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே இவற்றை எழுத நேர்ந்தது.  தற்போது வாழும் தமிழக மக்களில் பாதியளவுப் பேர் காமராசர் தோற்றுவித்த பள்ளிக் கழனிகளில் விளைந்திட்ட பயிர்களே.  தமிழக அரசின் வருவாயில் காற்பங்கினைக் கல்வித்துறையில் அந்த நாள்களில் நீண்ட கால திட்டமாக அவர் முதலீடு செய்ததன் பலன்களைத்தான் இந்த நாள்களில் நாடு நுகர்ந்து கொண்டிருக்கிறது.  அவரின் படைப்பாற்றல் இது.

            காத்தருளி  காமராசர்என்பதாக தந்தை பெரியார், அழைத்த தொலைநோக்கினையும், பொருத்தத்தையும் தற்காலத் தமிழ்த் தலைமுறையினர் தேர்ந்து தீர்மானிக்கட்டும்! .

Saturday, February 5, 2011

புகழ் உரை - வழக்கறிஞர் அ. அருள்மொழி


அணிந்துரை எழுதும் பணி இவ்வளவு கடினமானதாய் இருக்கும் என்று இதுநாள்வரை நான் நினைத்ததில்லை.  தான் கண்டுணர்ந்த வரலாற்றைக் கற்றறிந்த செய்திகளோடு, பட்டறிவினால் செதுக்கிக் காலக்கண்ணாடியின் முன் வைத்தாற்போல், ஒரு படைப்பு, எப்பரிமாணத்தைப் பார்ப்பது என்ற தவிப்பும், இத்தனை செய்திகளையும், குறிப்புகளையும் எந்த கணினியில் பதிந்து வைத்திருந்தார் என்ற மலைப்பும் படிக்கும் நமக்கு ஏற்படுவதில் எந்த வியப்பும் இல்லை.

            அய்யா என்றும்,  அண்ணன் என்றும், மாமா என்றும், பெரியப்பா என்றும்,  தாத்தா என்றும் திராவிடர் இயக்கக் குடும்பத்தினராலும், தமிழ் மொழி  அன்பர்களாலும், வேறுபாடின்றி அன்பு பாராட்டப்படும் பேராசிரியர் இறையனார் அவர்கள், தன் காலத்து வரலாற்று நிகழ்வுகளை, ஆய்வு நோக்கில் பதிவு செய்து, திராவிட  இனத்தின் போராட்டங்கள், திராவிடர் இயக்கத்தின் சாதனைகள், தந்தை பெரியாரின் தந்நிகர் இல்லா வாழ்க்கை ஆகியவற்றை இணைத்து இழை இழையாகப் பின்னி நம்முன் விரித்திருக்கிறார் இந்த அரிய நூலை.

            தந்தை பெரியார் அவர்களைப் பற்றிடைம்ஸ் ஆப் இண்டியா “ ( Times of India )  7-12-1999 இதழில்தமிழ் மண்ணின் இயற்கை அமைப்பையே மாற்றி விட்ட வரலாற்றுப் பெருமகன்  என்று குறிப்பிட்டது முதல்,  ஈழவ சமுகத்தில் பிறந்து சிறந்த திரைப்படக் கலைஞராக உயர்ந்தசெம்மீன்ராமு காரியத் அவர்கள் பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கை  நடவடிக்கைகளைத் திரைப்படம் ஆக்கினார் என்ற செய்தியும்,  அதற்குக் காரணமாக  வைக்கம் போராட்டத்தை அவர் நினைவு கூர்ந்தார் என்பது வரை எத்துணையோ அரிய செய்திகள்.

            தந்தை பெரியாரைப் பற்றிய பல தவறான செய்திகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே பேசப்பட்டுள்ளன.  அவற்றுள் சில செய்திகள் அவரை வியந்து பாராட்டும் நோக்கிலும் கூட உருவாயின. அவற்றில் ஒன்று பெரியாரின் உடல் நிலை பற்றியது.  பெரியார் என்று சொல்லும் போதே அவரது செம்மாந்த தோற்றம், வயது முதிர்வினால் தளர்ந்து அமர்ந்திருக்கும் நிலையில்கூட நிமிர்ந்து பார்க்கும் ஓர் அரிமா நோக்குதான் புலப்படும். சிறந்த ஓவியர்களும் புகழ்பெற்ற சிற்பிகளும் படைக்க விரும்பிய தோற்றப் பொலிவு, அவருடையது. அவர் 95 வயது காலம் வாழ்ந்தார். இறுதிவரை பயணம் செய்தார், விரும்பிய உணவை  உண்டார் என்றால், அப்படியொரு திடமான உடல் அமைப்பு  அவருக்கு என்று பலரும் நம்பினார்கள்.  இன்றும் நம்புகிறார்கள்.  ஆனால் பெரியார் பலவிதமான உடற்கோளாறுகளால் துன்பப்பட்ட செய்திகள் 1924 - இல் இருந்தே கிடைக்கின்றன.  1930 களில் கால் வீக்கம்,  இதய பலவீனம் போன்றவை.   குடி அரசுஏட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.  21.02.1937  குடி அரசுஏட்டில்  பிரச்சார உழைப்பால்  மயக்கமும்,  தலைவலியும், கால்களில் சிறிது வீக்கமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது.  அந்தப் பிரச்சார உழைப்பு என்பது,  21.01.1937 முதல் 16.02.1937 வரை மதுரை, திருநெல்வேலி, வடஆர்க்காடு,  தென் ஆர்க்காடு, தஞ்சை, திருச்சி, சேலம்,  சென்னிமலை,  பெருந்துறை, நாச்சியார் கோவில்  மீண்டும் தஞ்சை, கூத்தாநல்லூர், வட ஆர்க்காடு, திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய ஊர்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்து வந்ததைத்தான் குறிப்பிடுகிறது.

            இந்தப் பதிவுகளின் தொகுப்பைப் படிக்கும்போது பெரியாரின் உழைப்பு உடல் திறன் சார்ந்ததல்ல என்பது விளங்குகிறது. தன் வாழ்வின் நோக்கத்தை வரையறுத்துக் கொண்டு இறுதி மூச்சுவரை அதற்காகவே வாழ்ந்த தொண்டுள்ளத்தின் துணிவும் மன வலிமையுமே பெரியாரின் இலட்சியப் பயணத்தை இறுதிவரை வழி நடத்தியிருக்கின்றன என்பதும் புலப்படுகின்றது.  சொலல்வல்லன்,  சோர்விலன்,  அஞ்சான்  என்ற வள்ளுவரின் மொழியைகுடி செய்வார்க்கில்லை பருவம்என்ற  தொடருக்குச் சான்றாக வாழ்ந்த பெரியாரின் அயராத பணி நினைவூட்டுகிறது.  அந்தச் செய்திகளையெல்லாம் தொகுப்பதிலும், குறித்த நேரத்தில் அவற்றைத் தொகுப்பதிலும் அய்யா இறையனாரின் பணியும் அத்தகையதே என்பதை இந் நூல் விளக்குகிறது.

            அது மட்டுமா,  வங்காளத்தில் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கடுமையான நோய் அன்னை தெரசாவின் ஒளி  (புகை )ப்படத்தில் இருந்து புறப்பட்ட ஒளி தன் மேல் பட்டதும் நீங்கி விட்டதாக ஒரு கதை கூற, அதை அப்படியே தேவாலய வட்டாரங்கள் உரத்து முழங்கிய ஒரு கூத்து, அன்னை தெரசா மறைவிற்குப் பின் நடைபெற்றது.  எதற்காக என்றால்,  தெரசா அம்மையாருக்குபுனிதர் “(Saint) பட்டம் கொடுப்பதற்கு.  புனிதர் பட்டத்தைப் பெறுவதற்கு அந்தத் தாய் செய்த தொண்டுகளைத் தவிர வேறு காரணம் வேண்டியதில்லை.  ஆனால், போப் கூட்டத்திற்கு அது போதாது.  அந்த  புனிதர்  அதிசயங்கள், அற்புதங்களைச் செய்தவராக இருக்க வேண்டும்.  அதற்காக இப்படிச் சில போலி செய்திகள் பரப்பப்பட்டன.  இது நிகரற்ற தொண்டினைச் செய்த அன்னை தெரசாவிற்குத் கிடைத்த சிறப்பா?  அல்ல வெட்கம், அவமானம் என்று குமுறுகிறார் பேராசிரியர் இறையனார்.  மேலும், இந்த நிகழ்ச்சி 1929 - இல் இங்கிலாந்து  அரசர் ஜார்ஜ் உடல் நலம் குன்றியபோது நடந்த ஜெபதப நிகழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிற்து. அந்தக் காலத்தில் “ Free thinker “ என்னும் இங்கிலாந்து ஆங்கில நாத்திக இதழ் வெளியிட்ட கட்டுரையும் எடுத்துரைக்கப்படுகிறது.  ஒரு நூற்றாண்டின் இரண்டு எல்லைகளின் இணைப்பு.  அண்ணல் அம்பேத்கர் அவர்களது வாழ்க்கையும் அவரது அறிவாற்றலும் இன்னமும் கூட பொது மேடைகளில் பாராட்டப்படுவதில்லை. தலைவர்கள் பட்டியலில் அண்ணல் அம்பேத்கரின் பெயரைச் சேர்ப்பதற்குக் கூட இருமுறை யோசித்த மகான்கள் வாழ்ந்த இந்நாட்டில், “ நாம் தலைவரெனக் கொள்வதற்கு தகுதியான ஒருவர் அம்பேத்கர் அவர்கள் தான் என்று  தமிழ்நாட்டில் பேசி,  எழுதிய, தலைவர் பெரியார் அவர்கள்.  அண்ணலும் அறிவாசானும் ஓர் ஒப்பீடுஎன்ற தலைப்பில் அய்யா இறையனார் தொகுத்துள்ள அரிய செய்திகளைப் படித்தால் நம் வரலாற்று அறிவு விரிவுபடும்.  தந்தை பெரியார் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவே உழைத்தார் என்றும், அண்ணல்அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதியே பாடுபட்டார் என்றும் குறிக்கப்படும் கோணல் விமர்சனங்களுக்கு இக்கட்டுரை பதில் கூறுகிறது. பிற்பட்டோர் நலன் கருதி அமைக்கப்பட்ட காகாகலேல்கர் கமிஷன்  போன்றவை அமைக்கப்படுவதற்கு மத்திய அரசின் செயல்பாடு  குறித்து அம்பேத்கர் அவர்களின் விமர்சனங்கள் காரணமாக இருந்தன என்ற குறிப்பும் இதில் உள்ளது.

            இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றையும்  ”Hindu Law “ வின் தீர்ப்புகளைப்பற்றியும் பல அரிய செய்திகளைக் கூறுவதோடு  அரக்கர்என்று ஆரியக் கற்பனையாளர்களால் உருவாக்கப்பட்ட திராவிட இன இழிவுச் சித்திரங்களையும், வேத கால ஆய்வுகளின் துணையுடன் நமக்கு வரைந்து காட்டுகிறார் அய்யா இறையனார்.

            நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடைமுறை பற்றி,  குடிசெய்யும் நெறிகளா? என்று இறையனார் கொடுத்திருக்கும் பட்டியல் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமிட்டு வழங்கப்பட வேண்டியதாகும்.

            விரிக்கின் பெருகும்என்று தமிழறிஞர்கள் கூறுவது வழக்கம்.  ஆனால், இந்நூலில் இறையனார் வடித்துள்ள கட்டுரைகளில் காணப்படும் அரிதான செய்திகளை சுட்டிக்காட்டினாலே அணிந்துரை, முனைவர் பட்ட ஆய்வுரையாகிவிடும்.

            இந்த நூல் இனி வரும் வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கும் இனமொழிப் போராளிகளுக்கும் ஓர் ஆவணத் தொகுப்பாகப் பயன்படும் என்பதை இந் நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.

                                                                                                -- வழக்கறிஞர்  . அருள்மொழி.

(பெரியார் பேருரையாளர் இறையனாரின் 75 - ஆம் ஆண்டு  நிறைவு விழாவின் போது வெளியிடப்பட்ட செயற்கரிய செய்த செம்மல்  என்னும் நூல் வெளியீட்டிற்கு வழங்கிய அணிந்துரை )