Monday, June 4, 2018

கூட்டு முயற்சி, குழுப் பயிற்சிக்கு இலக்கணம் இறையனார்! - அ.அருள்மொழி

இப்படி ஒரு பட்டிமன்றம்..நடந்தது உங்களுக்குத் தெரியுமா ????

1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. ரஷ்யாவில் அதிர்ச்சி தரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி...உச்சத்தை தொடும் நேரம்.. "புரஸ்தராய்கா" என்ற பெயரில் தாராளமயத்தை தொடங்கினார் ரஷ்ய அதிபர் கோர்பசேவ்.

இனி இரஷ்யா என்ற நம்பிக்கை நாடு என்னவாகும்?அதன் தாக்கம் இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்தன..

சோவியத் ரஷ்யா அமெரிக்கப் பாதையில் கால்வைப்பது சீரழிவே என்றும் அதனால் ரஷ்யா தன் தனித்துவத்தை இழந்து விடும் என்றும் திராவிடர் கழகம் விமர்சித்து எழுதியது.

இந்திய பொதுவுடமை இயக்கத்தினரோ அந்த மாற்றங்கள் சிறப்பானவை என்றும் ரஷ்யா மேலும் முன்னேறும் என்றும் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்கள்.

அந்த நேரத்தில் பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தார்கள்.

இடம: வள்ளுவர் கோட்டம் சென்னை.

தலைப்பு: சோவியத்தில் தற்போது நடைபெறும். மாற்றங்கள் சோஷலிசதை வலுப்படுத்துமா? வலுவிழக்கச்செய்யுமா (எவ்வளவு சிறிய தலைப்பு!)

நடுவர்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பொதுவுடமை இயக்கத்தினர் வலுப்படுத்தும் அணி.
அவர்களுக்குத் தலைவர் எழுத்தாளர் அறந்தை நாராயணன் அவர்கள்.
வலுவிழக்கச்செய்யும் என்ற அணியின் தலைவர் பேராசிரியர் இறையன் அவர்கள். அவருடன் அணியில் இருந்தவர்கள் 1.தோழர் விடுதலை ராஜேந்திரன். 2அருள்மொழியாகிய நான். 3. தோழர் அஜிதா.

நிகழ்ச்சி நடந்த அன்று வள்ளுவர் கோட்டம் நிறைந்து வழிந்தது..அரங்கில்..மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் பொதுவுடமை இயக்கத் தோழர்கள். ஒருபங்கு திராவிடர் கழகத் தோழர்கள். மேலும் கொஞ்சம் பொதுப் பார்வையாளர்கள்.

எதிர்பாராத காரணத்தால் அடிகளார் வரவில்லை. தோழர் அஜிதாவும் கலந்து கொள்ள இயலவில்லை. பொதுவுடமை அணியில் இருந்த மூத்த தோழர் நடுவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வாதங்கள் தொடங்கின. பட்டாசு வெடிக்காத குறைதான். பொதுவுடமைத் தோழர்கள் வைத்த வலிமையான கருத்துக்களை மறுத்து எங்கள் அணியின் வாதத்தைத் தொடங்கினார் பேராசிரியர் இறையன் அவர்கள்.அவரது ஒவ்வொரு கருத்தும் கைதட்டலை எழுப்பியது. ஆதரவுக் குரல்களும் எழுந்தன.

அவர் பேசும் முறையே ஒரு நாடகம் போல் இருக்கும். பேச்சைத் தொடங்கும் முன்பு வேட்டியை ஒருமுறை இறுக்கிக் கட்டியபடி எதிரணியினரை ஒரு பார்வை பார்ப்பார்.

ஒவ்வொரு கருத்தும் பார்வையாளர்களை சென்று சேர நேரம் கொடுப்பார். கைத்தட்டல் ஓசை அடங்கக் காத்திருப்பார். அவரைத் தொடர்ந்து விடுதலை ராஜேந்திரன் அவர்களும் நானும் பேசியபோது எங்கள் வாதங்களை ஆதரித்து கைதட்டியவர்களில் அதிகம் பேர் பொதுவுடமைத் தோழர்களே. தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் பேசுகிறவர்கள் வைத்த ஆதாரங்களை ஆரவாரத்துடன் வரவேற்ற சிறந்த ஒரு பட்டிமன்றம் அது.

அந்தப்பட்டி மன்றம் முடிந்து பல ஆண்டுகளுக்கு அதைப் பற்றிய பேச்சு இருந்து கொண்டே இருந்தது. அதுசரி..அந்தப் பட்டிமன்றத்தில் எங்கள் பேச்சுக்கள் அவ்வளவு சிறப்பாக அமைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? வாரக்கணக்கில் இரண்டு பக்க செய்திகளையும் சேகரித்து ஆதரவு எதிர்ப்புக் கருத்துக்களைப் பிரித்து.. ஒவ்வொருவரும் எதை எதை பேசப் போகிறோம் என்று தேர்வுசெய்து முதல்நாளே எங்களுடன் விவாதித்து வழிநடத்திய இறையனார் அய்யாவின் உழைப்பும் வழிகாட்டுதலுமே காரணம்.

கூட்டு முயற்சி, குழுப்பயிற்சி, நமது வெற்றி என்ற சொற்களுக்கு இலக்கணம் அய்யா இறையனார்.

தந்தை பெரியாரின் பாதையில் தடுமாற்றம் இல்லாமல் பயணம் செய்த தனித்தமிழ்ப் பற்றாளர். இன்று அவரது பிறந்தநாள்.