Wednesday, December 22, 2010

இறையனார் மறைவு - கலைஞரின் இறுதி மரியாதை



கலைஞர் அவர்களின் இறுதி மரியாதை

பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தி, அவரது மகன் இசையின்பன் மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005)


தொல்.திருமாவளவன் அவர்களின் இறுதி மரியாதை

பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005),

இறுதி ஊர்வலம்





இறையனார் இயற்கை எய்திய போது, தமிழர் தலைவர் அவர்களின்  புதல்வர்  திரு. அன்பு ராஜ் அவர்கள், (தலைமை நிலையச் செயலாளர் ) அவரது இணையருடன்  இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

அவரது உடல் 13.08.2005 அனறு மாலை 4 மணியளவில், பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக, ஓட்டேரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. 





Sunday, December 19, 2010

அறைகூவல் எறிகிறோம் ஆரியத்திற்கு!

அம்பலத்துக்கு வந்து விட்டது ஆரியம்!.  இறுதி முயற்சியில் இறங்கி  விட்டார்கள் முன்னறிவில்லா முப்புரிநூல் பார்ப்பனர்கள்.

    உள்நாட்டிலும், அயல்நாடுகளிலிருந்தும் கொட்டுகின்ற கொள்ளைப் பணம், இந்திய அரசு தரும் ஏந்துகள்,  ஊடகங்களின் விளம்பர ஒத்துழைப்பு, பங்காளிச் சண்டையினால் காட்டிக் கொடுக்கத் துணியும் தமிழினத்தின் இரண்டகம்,  என்ன நடக்கிறதென்பதைப் பற்றிக் கருதும் பழக்கமில்லா மக்களின் ஏமாளித் தனம், எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்களின் கண்ணன் காட்டிய வழியாம் சூது - சூழ்ச்சிக் கயமை ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கை கொண்டு வெளிப்படையாக வெறியாட்டம் போடுகின்றனர் அவர்கள் - ஆடை துறந்த மனநோயாளிகளாக ! .

    “  பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதும் “  தமிழர் தலைவரும் அவரின் தொண்டுக்குத் துணை நிற்கும் எண்ணத் தொலையா இயக்கத் தோழர்களும் நம்பிக்கை வைத்திருப்பதோ உண்மையின் நன்மையின் மீது தான்.  எனவே,  உண்மையே வெல்லும் ; சூது சுருண்டு மாயும்.  இது உறுதி.    

    “  இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை “ என்று மானமீட்பர் தந்தை பெரியார் தேர்ந்து தெளிந்து அறுதியிட்டார்கள்.

    “  இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டுமானால், வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும் ? “ எனக் கேட்டார் அண்ணா.  இவ்விரு கருத்துகளும் பொருளாழம் மிக்கவை.

    என்றாலும், உள்நோக்கங் கொண்ட ஆரியப் பார்ப்பனர்,  “ இந்துக்கள், இந்துக் கலாசாரம்,  இந்துத்துவா,  இந்துராஷ்ட்ரம் “ என்பதாகக் காட்டுக் கூச்சலிட்டுக் பார்க்கின்றனர்.

குரலுயர்த்திக்  கூவினார்.

    “ நம்முடைய தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆகட்டும், அல்லது சங்க காலப் பழைய ஆதாரங்களில் ஆகட்டும், அல்லது ஆரிய நாகரிகப் பழக்கவழக்கங்களைக் கொண்ட வேதம், சாஸ்திரம், புராணம், சரித்திரம் முதலிய எவற்றிலாவது இந்து அல்லது இந்து மதம் என்ற வார்த்தை இருக்கிறதா ? “ என்று முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே - அதாவது இந்த நாட்டைப் பிடித்த பெருந்தொழுநோயான, “ ராஷ்ட் ரீய சுயம் சேவக் சங் “ என்னும் மதவெறி அமைப்பு தோன்றிய தொடக்கக் கட்டத்தில் - ஆம், 1925 - ஆம் ஆண்டிலேயே குரலுயர்த்திக் கூவினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

    அய்யாவின் கேள்வியை அறை கூவலாக எதிர்கொண்டு,  “ இதோ இருக்கிறது - இந்நாட்டின் இன்ன நூலின் இன்ன இடத்தில் -               ”இந்து“ என்னும் இந்நாட்டு மதத்தைக் குறிக்கும் பெயர் இருக்கிறது “     என்று எவரேனும் நிலைநாட்ட முன்வந்ததுண்டா?  வெட்கக்கேடு என்னவென்றால் -   இந்துத்துவ முன்னோடி சூர தீர வீர சவர்க்காரும் முனையவில்லை.  இந்து வெறி அமைப்பை நிறுவிய குரு கோல்வால்கரும் முன்வரவில்லை. அவ்வமைப்பின் ஏனைய தலைவர்களும் முயலவில்லை.

    ஏன், இந்து என்று சொல்லிக் கொள்ளுவதிலே தான் பெருமிதம் அடைவதாக அக்காலத்தில் வெளிப்படையாக அறிவிக்க வெட்கமேபடாத காந்தியாருங்கூடத் துணிந்தாரில்லை.

    காந்தியாரோ,  “ இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. உண்மைதான். நான் ஒப்புக் கொள்ளுகிறேன் “ என்று ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது  பார்ப்பனரால்,  “ தெய்வம் “ என்றும்,  ”ஜகத்குரு” என்றும் கொண்டாடப்பட்ட மறைந்த காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெரியவாளே என்ன சொல்லிற்று?.
                               “ இப்போது ஹிந்து மதம் என்ற  ஒன்றைச் சொல்லுகிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது.  நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது ! “

    இன்னொரு  “ துறவி “ யாகிய விவேகானந்தர்,  “ ஹிந்து “ என்னும் சொல்லை வழங்கத் தமக்கு விருப்பம் இல்லை என்பதாகத்தானே அறிவித்தார்.

    சமஸ்கிருத மொழியில் கற்றுத் துறைபோகிய - “ மஹா மஹோபாத் யாய “ பட்டம் எய்திய  “ பண்டித ராஜ் “  ஷ்யாம் குமார் ஆச்சார்யா என்னும் காசிப் புலவரே,  “ வட மொழி அகர முதலிகளிலும் தற்காலம் வரையிலான வடமொழி இலக்கியம் முழுவதிலும் ஹிந்து,  ஹிந்துஸ்தான் என்ற சொல் எதுவும் கிடையாது “ எனப் பதிவு செய்துள்ளாரே ! .

    பண்டித ஜவஹர்லால் நேரு,  சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்ற வடநாட்டு - தென்னக பார்ப்பனர்களும்,  “ நமது பழைமையான இலக்கியங்களில் “ஹிந்து “ எனும் சொல் இல்லை “ என்றும்,  “ அது ஒரு அண்மைக்காலப் புதிய பெயர் “ என்றே எழுதிவிட்டார்களே !. 

    தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாகிய மறைமலையடிகள்,  மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, காசு. பிள்ளை,  திரு.வி.க. முதலியவர்களின் ஆய்வுகளிலும்  “ ஹிந்து“ என்றொரு சமயம் அகப்படவில்லையே ! .

சட்ட அறிஞர்கள்

    சட்ட அறிஞர்கள் சாற்றுவது தான் என்ன?

    வெள்ளையராட்சியின்போது இருந்து  “ Federal  Court  “ என்னும் தீர்ப்பு மன்றத்தில் தீர்ப்பாளராகப் பணியாற்றிய மாண்பமை வரதாச்சாரி,  “ இந்து மதத்திற்கு இலக்கணம் வகுப்பது எளிதன்று “ என்றும்,

    ஜெய்ப்பூர் பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரி முதல்வராகவிருந்த  கே. ஆர்.ஆர்.  சாஸ்திரி,  “ திகைப்பூட்டும்  ஹிந்து எனும் சொல்லாட்சியே நம் நாட்டு மூலத்தைக் கொண்டதன்று “ என்றும்,

    தலைமைத் தீர்ப்பாளராய்க் கடமையாற்றிய மாண்பமை இராச மன்னார்,  “ இந்து மதம் என்ற சொல்லின் தெளிவில்லாத பொருள் பற்றிய கூர்த்த உணர்வோடுதான் பேசுகிறேன் “ என்றும் பதிவு செய்து நிலையூன்றி விட்டார்களே ! .

    பிறகு,  ஹிந்துவியல் என்னும் இழவுப் பெயருக்கு மூலப் பெயரே இல்லையா?  அதன் உண்மையான பெயர்தான் யாது ?

    பெயர் இல்லாமல் என்ன?  வேதாந்தம், மதம்,  சமாதான தர்மம்,  பிராமண மதம்,  ஆரிய தர்மம் எனும் பெயரால் பார்ப்பனியக் கொள்கை அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

    “ மணிமேகலை “ ஆசிரியர் சுட்டுகின்ற அளவைவாதி,  சைவவாதி, வைணவவாதி,  வேவாதி, ஆசீவக வாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேஷகவாதி, பூதவாதி என்ற சமயக் கணக்கர் பட்டியல் இப்பொருள் தொடர்பாக நாம் தீர்மானிப்பதற்குத் துணையாய் ஒளிகாட்ட வல்லது.  சைவம், வைணவம், வேதம் ஆகிய நெறிகளின் சார்பில் வழக்குரைத்தனர் என்றால் இந்துத்துவம் என்பதற்கு இடமேது?

    சாத்தனார் காலத்திற்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்னர் ஆதி சங்கரர் காலத்தில் இருந்தனவாகக் கூறப்படும் காணாபத்தியம்,  கௌமாரம், வைஷ்ணவம், சங்ரம், சாக் தம், சைவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ‘ சண்மதம் “ (அறுசமயம் ) என்றழைக்கும் சூழ்நிலை உருவானது எனும் செய்தியும்,

    “ இந்து சமயம் எனும்அடையாளப் பெயரில் எந்தவொரு மத நிறுவனமும் இந்தியாவில் நடந்து வரவில்லை “ என்னும் அக்னி ஹோத்ரம் ராமாநுஜ தாத்தாச்சாரியின் கூற்றும் உண்மையைத் துல்லியமாகத் தெளிவாக்கும் பெருஞ்சான்றுகள்.

    ஆனால், உண்மைப் பெயர்களையே தொடர்ந்து பயன்படுத்தி அழைத்துக் கொண்டிருந்தால், நாட்டில் பெரும்பான்மை மக்களை ஏமாற்றி உயர்வாழ்வு வாழ எப்படி முடியும்?  ஆழமாய்க் கருதியது ஆரியம்.

    அதன் விளைவாக,  அயல்நாட்டுக்காரர்கள் இட்ட பெயரையே பயன்பாட்டில் வைத்துக் கொண்டு, நிலையூன்றி பிழைக்காலம் எனத் திட்டமிட்டு “ஹிந்து “ என்ற சொல்லையே கையாண்டு பார்க்கின்றனர் பண்பாடு - மாந்த நேயம் என்பதை முற்றாகத் துறந்தொதுக்கிவிட்ட பார்ப்பனர்.

    “ வெள்ளைக்காரன் நமக்கு  ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம்,  அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது “ என்னும் சந்திர சேகரேந்திர சரஸ்வதித் தெய்வம்  “ அருளிச் செய்த “ மெய்ம்மொழியால் நமக்கு எத்தனையோ விளக்கங்கள் கிடைக்கின்றன.

    கிரேக்கர்,  பாரசீகர், அராபியர்,  பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், முதலியோரெல்லாம் போலியாகப் பலுக்கிய - உச்சரித்த - “ஹிந்து “ என்ற சொல்லாட்சியை - ஆளவந்த அயலவர்கள், பேச்சு - எழுத்து வழக்குகளில் கையாண்டது மட்டுமின்றி, அவர்கள் நமக்காக இயற்றிய சட்டங்களிலேயே  பதிவு செய்து, அதைத் திரும்பப் திரும்பப் பயன்படுத்திப் புழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர்.

    கி.பி. 1770- களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் முதலில் வங்காளப் பகுதிக்கென வில்லியம் ஜோன்ஸ் உள்நாட்டில் நிலவி வந்த வாழ்வியல் சட்டங்களைத் தொகுத்து அதற்கு  ஹிந்துச் சட்டம் ( Hindu Law )  என்ற பெயரை இட்டு, அதனைக் கல்கத்தா உயர்முறை மன்றத்திற்கு உரியதாக்கி,  பிறகு பம்பாயிலும், சென்னையிலும் உயர்மன்றங்கள் அமைக்கப்பட்டபோது அதே ஹிந்துச் சட்டத்தைப் பிற பகுதிகட்கும் உரியதாக்கினார்.

செப்பு

    ஆக, ஆரியரல்லா மக்கள் ஹிந்துச் சட்டத்திற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். ஹிந்துக்களாய் ஆக்கப்பட்டார்கள். திராவிட இனத்தவர் வடபுலத்துக்கேயுரிய  மிதாட்சரச் சட்டம் தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அறியாமையில் ஆழ்த்தப்பட்டுக் கிடந்தனர்.  இன்றைக்கு அந்தச் சட்டப்படி பார்ப்பனரைத் தவிர ஏனைய மக்கள் அனைவரும் சூத்திரர்கள் ! . இவ்வுண்மைகளையெல்லாம் இந்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து தெளிவடையும் காலம் வந்தாகிவிட்டது.

    இதோ அறைகூல் எறிகிறோம் ஆரியத்திற்கு ; .  மேற்கண்ட செய்திகளை அறிஞர்கள் வெளியிட வில்லை என்றோ, அவர்களின் கூற்றுக்கள் யாவும் பொய் என்றோ மறுக்க முன்வரும் வீரம் - மானம் - நாணயம் , துளியளவும் - உனக்கு உண்டோ?  ஆரியமே ! செப்பு.

- இறையன்.










Saturday, December 18, 2010

பவள விழா - சிறப்புரை

தமிழர் வாழ்வில், வரலாற்றில் ஒப்புயர்வற்ற சிறப்பிற்கும்,  பின்பற்றுதலுக்கும் உரியவரான தந்தை பெரியாரின் இயக்கம், அந்த வகையில், இலட்சக்கணக்கான பின்பற்றாளர்களையும், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் நூற்றுக்கணக்கான முன்னோடிகளையும் பெற்று வந்திருக்கிறது.

    அத்தகைய முன்னோடிகளில் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்,சொற்பொழிவாளர்கள் என பல்துறை வித்தகர்கள் இருந்து வந்துள்ளனர்.  இவர்களின் ஆற்றலால் தந்தை பெரியாரின் இயக்கம் ஆழ்ந்து வேரூன்றி அகன்று பரவியது.  அதே அளவு தந்தை பெரியாரின் தத்துவங்கள் இவர்களது பல்துறை ஆற்றல்களைச் சிறப்பித்தது. திராவிட இயக்கக் கருத்துகளை நீக்கிப் பார்த்தால், இவர்களின் ஆற்றல்கள் பொருளற்றதாகிவிடும்.  அதேபோல் இந்த முன்னோடிகளின் செயல்பாடுகளை நீக்கிப் பார்த்தால் திராவிட இயக்கம் வரலாறு இன்றிப் போய்விடும்.

    திராவிட இயக்கத்தின் சிறப்பே,  “பகுத்தறிவு தத்துவத்தை ஒரு தேசிய இயக்கமாகச் செயல்படுத்தியது தான் ” என்பது உலகளாவிய பேரறிவாளர்களின் மதிப்பீடு.

    மேற்குறிப்பிட்ட முன்னோடிகள் வெறும் எழுத்தாளர்களாகவோ, கவிஞர்களாகவோ, சொற்பொழிவாளர்களாகவோ அறியப்படுவதில்லை.  மாறாக,  தந்தை பெரியாரின் பகுத்தறிவியக்க எழுத்தாளர், பகுத்தறிவியக்கக் கவிஞர்,  பகுத்தறிவியக்கச் சொற்பொழிவாளர் என்றுதான் அறியப்படுகிறார்கள். அப்படி அறியப்படுவதில்தான் அவர்கள் பெருமைப்படுகிறார்கள்,  நிறைவு கொள்கிறார்கள்.

    தங்களின் சிந்தனை,  செயல்,  சொல்லாற்றல்களின் உயிர்ப்பு, வளர்ச்சி, மேம்பாடு  என்பவை பகுத்தறிவியக்கத் தத்துவங்களோடுதான் என்கின்ற வகையிலேயே தங்களின் வாழ்வின் இயல்புகளை முறைப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

    சமூகத்தின் எந்தப் பிரிவினருடைய மனமும் புண்படாமல் அவர்களின் பொதுவான உணர்வுகளை மகிழ்வித்தால் மட்டும் போதும் என்று கருதியிருந்தால் இவர்களில் பலர் ஏராளமான பொருளும் ஈட்டியிருக்கலாம்.  எல்லாத் தரப்பு மக்களின் பாராட்டையும்,  மதிப்பையும் பெற்றிருக்கலாம்.  ஆனால், இவர்கள் தாங்கள் பெறும் புகழிலும், பாராட்டிலும்  சமூக மேம்பாட்டிற்கான,  மனித இன விழிப்பிற்கான பொருள் இருக்க வேண்டும் என்பதாக உறுதி எடுத்துக் கொண்டவர்கள்.

    தந்தை பெரியாரியக்கம் உருவாக்கிய பல்வேறு ஆற்றலாளர்களில் சிந்தனையாளர்கள் வெகு சிலர். அவர்களுள் மொழிப்புலமை பெற்றவர்கள் இன்னும் சிலரே.  அதிலும் எழுத்தாற்றல்,  சொற்பொழிவாற்றல் இரண்டிலும் சிறந்தோர்  மிகமிகச் சிலரே.  இதில் விரல் விட்டு எண்ணத்தக்கவர்களே தமிழிலும்,  ஆங்கிலத்திலும்  சீர்சால் புலமை பெற்றவர்கள்.  இத்தனை சிறப்பியல்புகளையும் ஒருங்கே பெற்று, பகுத்தறிவியக்கத்தின் விலைமதிப்பற்ற  கருவூலம் போன்ற சிலரில் ஒருவர்தான்  பேராசிரியர் இறையனார் அவர்கள்.

    அவருடைய கேண்மை பலரை - குறிப்பாக இளைஞர்களை அறிவியக்கச் சிந்தனையாளர்களாக ஆக்கியுள்ளது.

    அவரது இல்லம், எங்கிருந்தாலும், பெரியாரியக்கத்தின் கருத்தரங்கக் கூடமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது.

    அவர் சொற்பொழிவாற்றும் மேடைகள், சமுதாயக் கேடுகளுக்கெதிரான வழக்காடுதல்களாகவே அமைந்து வந்திருக்கின்றன.

    அவர் எழுத்தின் தெளிவு, சொல்ல வந்த கருத்தின் முடிவான வார்த்தைகளாகவே அமையும்.

    அவருடனான உரையாடல், பாசம் இயைந்ததானாலும் முகமன் கருதா துணிச்சலுடனேதான் இருக்கும்.

    அவர் திரட்டிய உறவும், நட்பும் பெரும்பாலும் அறிவு சார்ந்தவையாகவே வளர்ந்து வந்திருக்கின்றன.

    ஆர்ப்பாட்டமில்லாத அறிவாளி.  தெளிவான சிந்தனையாளர். அயராத ஆற்றலாளர்.

    தந்தை பெரியாரியக்க வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து பயன் பெறத்தக்க பேரறிவாளர்.

    திராவிட இயக்கத்தின் மிக அரிதான மாமனிதர் இறையனார் அவர்கள்.

    “ அண்ணா ” என்று அவரை அழைக்கும்போது நான் பரவசமாகிறேன்.

    “ தம்பி ” என்று என்னை அவர் அழைக்கும்போது தந்தை பெரியாரியக்க வரலாற்றுத் தூண் என்னை அனுசரணையாக ஏந்திக் கொள்ளும பெருமிதம் அடைகிறேன்.

    பகுத்தறிவியக்கத்தின் இந்தப் பேரறிவாளர்க்கு பவள விழா எடுத்துச் சிறப்பிக்கும் அனைவரையும் பாராட்டுவதோடு, அவர் பொருட்டு வெளிவரும் இந் நூல் எதிர்கால மக்களுக்கு இறையனாரின் வாழ்வை வழிகாட்டியாக்கும் என்று உறுதிபட வாழ்த்துகிறேன்.


- டாக்டர்.  பி. ஜெகதீசன்,
( முன்னாள் துணைவேந்தர்,
பாரதிதாசன் பல்கலைக் கழகம்.)

 மாநில திட்டக்குழு உறுப்பினர்



                 




இறையனாரே, மறைந்தீரா ?

இறையனாரே        மறைந்தீரா?            மறைந்தீர்        என்னும்
                    இச்செய்தி,            பொய்யாகிப்            போய்            விடாதா?
                    இறுதியாய்            நேற்றும்மைப்        பார்த்த        போது,
                    எள்ளளவும்            அய்யமின்றித்        திரும்பி        னேனே

                    உறுதியாய்            உயிர்பிழைத்துக்        கொள்வீர்        என்றே,
                    உண்மையாய்        நம்பினேனே,             ஏமாந்            தேனே.
                    மறுகணமே            மறைந்தீரே,            என்ன            மாயம் ?
                    மடாரெனக்            கொத்தியதோ,        மரணப்        பாம்பு.

                    கண்திறந்து            பார்த்தீரே,             வாய்            திறக்கக்
                    கடு முயற்சி            செய்தீரே,            அசைந்த        சைந்து
                    பண் திறந்து            பாடுகின்ற            உங்கள்        வாயால்
                    பாசத்தைத்            தந்தொருசொல்        சொல்வீர்        என்றே
                    பாவி நான்            எதிர்பார்த்தேன்.        திறந்தீர்        இல்லை.

                    அண்ணனோ            நம் வீரமணி            ஊரில்            இல்லை
                    அவர் கண்ணீர்        மழையினிலே        நனைந்        திருப்பார்
                    கருஞ் சட்டைக்        காவலரே,             பெரியார்        கையின்
                    கைத்தடியாய்,        அவர்கையின்        சுடராய்,        நீங்கள்
                    பெரு முழக்கம்,        கொள்கைகளின்        விளக்கம்        செய்த
                    பேருரை            யாளர் அன்றோ?,        இனிமேல்        அந்த

                    உரைமுழக்கம்        கேட்பதெங்கே?        அடடா,        அந்த
                    உச்சரிப்பை,            ஒலி நயத்தைக்        காண்ப        தெங்கே?.
                    ஒருதிங்கள்            முடியவில்லை.        விழாக் கண்        டீரே,
                    உறங்கி விட்டீர்        சாவினைப்போல்        கொடியோன்        இல்லை.


                                                    புலவர்  இளஞ்செழியன்,  எம்.ஏ,   


இயற்கையின் அழைப்பை ஏற்றார் இறையன்

விலைபேச             முடியாத             இமய            மென்றே
விழாவெடுத்தோம்        புகழ்ந்துரைத்தோம்        இன்றோ        நீங்கள்
நிலையாமை            நிலைத்ததென்ற        குறட்            கருத்தை
நினைவூட்டிக்            கண்மூடித்            துயில்கின்        றீரோ

அலைகடலும்        மாஉலகும்            வணங்கி        வாழ்த்தும்
அய்யாவாம்            பெரியாரைக்            காண்ப        தற்கே
அலைகடலாய்ப்        புகழேந்திப்            புறப்பட்        டீரோ ?
ஆசானாய்            இயற்கையுமை        அழைத்த        தாமோ ?

அய்யாவாய்            வீரமணி            ஈங்கிருக்க
அவர்துணையை        மறந்தோராய்            ஏன் துயின்றீர் ?
பொய்யானோர்        குவிகின்றார்            என்பதாலா ?
புதுவாழ்வைத்        தேடுதற்கே            புறப்பட்டீரோ.
           
நெய்வடியும்            உம்பேச்சில்            நெற்கதிர்கள்
நிறைவளமாய்க்        கொட்டுமுன்றன்        பேரெழுத்தில்
வெய்யோனும்        வெண்ணிலவும்         உம்மிழப்பை
விரும்பாமல்            தேம்பியழும்.            துயில்வதேனோ ?

திருமகளை            உம்வாழ்வின்            துணையாய்ப்         பெற்றும்
திரும்பாத            ஊருக்குப்            பயணம்        ஏனோ ?
மருமகன்கள்            மகன்களாகக்            கிடைத்திருந்தும்   
மறந்தவரைப்            பிரிந்தீரே,            ஞாயந்தானா ?   
   
பெருமகளாய்            உம்மகள்கள்            பெருமை        சேர்த்தார்
பெரியாரை            உம் வழியே            பற்றி            வந்தார்.
ஒரு மகனாம்        இசையின்பன்        பேத்தி            பேரன்
உமக்கென்ன            குறையய்யா ?        உறங்கி        விட்டீர்.   
எண்திசையும்        பெரியாரின்            புகழ்            கிடக்கும்
எத்திசையில்            இறையன்நீர்            தேடச்            சென்றீர்.
விண்திசையில்        நீர்போந்து            தமிழர்            வாழ்வை
வித்தூன்றி            வளர்ப்பதற்கே        விரும்பி        னீரோ.

மண்திசையில்        தமிழரெலாம்            மானம்        விற்றார்.
மறந்தவரை            நீங்கிடுவோம்            என்றா            சென்றீர் ?
புண்தசையாம்        உடலென்று            வெறுத்தொ        துக்கிப்
புகழுயராய்            வாழ்வதற்கு            முடிவா        செய்தீர்.   

                   
                                                    -கவிஞர்  அரிமா.


பவள விழா - பாமாலை

          பெரியார்பே                 ருரையாளர்              இறையன்,          மேடைப்
          பேச்சருவி,                  கோடையிடி,            கொள்கைத்         தென்றல்
          அரியதிறன்                 கொண்டிருக்கும்     ஆற்றல்                கோமான்
          ஆற்றொழுக்கில்       ஆறுகளை                 வென்ற                 வீரர்
                   
          புரியவைப்பார்,           தெளியவைப்பார்,    உணர                   வைப்பார்
          போர்ப்படையை         உருவாக்கும்              சொல்லின்         சிற்பி
          கரியதிரு                        மேனியினால்            எனைக்க            வர்ந்த
          கனத்தஞான                 மழைக்கொண்டல்,  தமிழர்                 செல்வம்.

          சாதிகளைத்                  தன்வீட்டில்                வெட்டிச்              சாய்த்த
          சாதனையின்               வேங்கையிவர்,        திரும                   ணத்தால்
          ஏதிவர்க்கே                   இணையாய்இன்      னொருவர்?        அய்யா,
          என்னதவம்                   செய்தாரோ                 இவரை                ஏந்த,

          மாதர்குலம்                   போற்றுகின்ற           திரும                    கள்தான்
          மனைவிளக்காய்        இறையனுக்கே        வாய்த்த               தாலே,
          சாதியிலே                      இணைதேடாச்          சரித்தி                  ரத்தை
          சாதித்தார்.                      சாதித்தார்.                வெற்றி               பெற்றார்.

          செந்தமிழ்தான்             இவர்மூச்சு                  தூங்கும்             போதும்
          சிந்தனைதான்              இவர்விழிப்பு,              எதற்கும்            ஏங்கி
          முந்தாத                          துறவுமனம்                 எவரி                   டத்தும்
          முகமலர்ந்து                பேசுகின்ற                    கனிவு           நெஞ்சம்.

          சிந்தாத                            கண்ணீரைச்                சிந்த          வேண்டாம்.
          சித்தரைப்போல்           சாவுதனை                    இவர்க              டப்பார்.
          இந்தநாள்                        போல்இறையன்         என்றும்           வாழ்வார்.
          என்தமிழ்போல்            வாழ்கவென்றே           வாழ்த்து          கின்றேன்.


                                            மலர்மாமணி புலவர் இளஞ்செழியன், எம்.ஏ       







செயற்கரிய செய்த செம்மல்

வெற்றித் திருவுருவாய் விளங்கும் நம் திராவிடர் தந்தை பற்றிய ”ஆட்சியில் தி.மு.க.“ எனும் நூலின் ஆசிரியர் பிலிப் ஸ்ப்ராட் மிகச் சிறந்த வரலாற்றுப் பேருண்மை ஒன்றினைக் கண்டுணர்ந்து வெளியிட்டுள்ளார்.

    “ மிகப் பெரும் புலமையோர் எனபோர் தோல்வியுற்ற முயற்சியில் திரு. பெரியார் ஈ.வெ.இராமசாமி மிக கடுமையற்ற பகுத்தறிவுக் கோட்பாட்டின் ஆர்வத்துடன்  ( “ திராவிடர் -  “ தமிழர்” எனும் ) துணைத் தேசிய இனத்தின் மிக வெம்மையான உடனடி உந்துணர்வுகளையும் கூட்டியூட்டி வெற்றி பெற்று விட்டார் “ என்பதே அவரின் முடிவு.  ( '' Mr. Periyar E.V. Ramasamy has succeeded where more intellectual men have failed by adding to the tepid enthusiasm of Rationalism the more fiery urges of sub-Nationalism '' ? Mr. Philip Sratt in  "" The D.M.K. in Power"

மூன்று உண்மைகள்

    அவரது இந்தத் துணிவு ஏதோ நுனிப்புல் மேய்ந்ததன் விளைவன்று. நிறைய உண்மைகளை ஆழ்ந்து, ஆய்ந்து,  தேர்ந்து, தெளிந்த நிலையான தீர்வாகும்.

    மேற்கண்ட முடிவில் அவர் மூன்று உண்மைகளைச் சுட்டுகிறார்.

    (1)     பேரறிஞர்களால் முடியாததைப் பெரியார் அவர்கள்  முடித்துக்    காண்பித்தார்கள்.        (2)      இணவுணர்ச்சித் தீயை மூட்டிப்           (3)     பகுத்தறிவு ஒளியைப் பரப்பினார்கள்.

    இம்மூன்றினையும் பற்றி முழுமையாக இல்லாவிடினும் கொஞ்சமேனும் திறனாய்வு செய்வது பகுத்தறிவாளரிடையே பயனுள்ள தெளிவினைப் படைக்க வல்லது.

அசைக்க முடியவில்லையே ஏன்?

    தமிழகத்தைப் பொருத்தமட்டில் வள்ளுவர் தொடங்கி, திருமூலர் நடுவாக,  வள்ளலார் இறுதியாக கற்றுத் துறைபோகிய கணக்கற்ற அறிவாளிகள் மக்களின் வாழ்க்கைப் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டே தீரவேண்டும் என விரும்பினார்கள்.  இயன்ற வழிகளில் முயன்றார்கள், என்றாலும் உருப்படியான - குறிப்பிடத்தக்க - நிலையான பலன்களை அவர்கள் கண்டாரல்லர்.  தமிழகத்தற்குப் புறமான மற்ற மாநிலங்களில் தோன்றிய புத்தர் - சாங்கியர்களிலிருந்து தொடங்கி வேமண்ணா, நாராயண குருக்கள் ஆகியோர் வரை எவருடைய முற்போக்குக் கருத்துக்களும் நம் வாழ்முறையைத் தாக்கி அசைத்திட முடியவில்லை,  காரணம் என்ன?  நம் மக்கள் மாற்றங்கள் எவற்றையும் விரும்பியேற்க முன்வரா அளவிற்கு அறியாமைச் சாக்கடையில் உளம் ஒப்பிக் கிடந்தார்கள்.  இத்தகைய மண்ணில் - ஏனையோர் வெற்றி கற்பனை கூடச் செய்யவொண்ணாமற் போய்விட்ட மண்ணில் நம் அய்யா அவர்கள் எய்திய மாபெரும் வெற்றி வையம் முழுதும் ஏற்றுக் கொண்டுவிட்ட இயல்பான உண்மையாக நிற்கிறது. 

காலூன்றி நிலைத்தனவா ?

    எப்படி முடிந்தது இத்துணை அருஞ்செயல் ?
   
    “ மெய்பொருள் காண்பது அறிவு “ என்றும்,

    வள்ளுவர் தம் குறளிலேயே பகுத்தறிவுக் குரல் எழுப்ப முனைந்தார் என்பது உண்மையே.

    “  நட்ட கல்லும் பேசுமோ ? “ -  திருமூலர் அடித்துக் கேட்கத்தான் செய்தார்.

    “  கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக “ - வள்ளலார் இவ்வாறு வாய்விட்டுக் கதறியது அண்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியே.

    ஆனால் இவற்றை இன்றைய மேடைப் பேச்சுகளில் பயன்படுத்தும் நிலை மட்டுமே  உண்டானதே தவிர, இக்கருத்துக்கள் அன்றைய மக்களிடையே வலுவாகக் காலூன்றி நிலைத்தனவா என்றால், இல்லையென்பது மட்டுமன்று,  இக்கருத்துக்களைச் செவிமடுத்து கேட்க மக்கள் ஆர்வமாக முன் வந்தார்கள் என்பதற்கு அறிகுறி எதுவும் கிடையாது.

இப்படியும் பாடினார் வள்ளுவர்

    இதற்கு இரண்டு காரணங்களை நம்மால் காணமுடிகிறது. முதன்மையாக, பகுத்தறிவியல் இலக்கணததை எல்லாத் துறைகளுள்ளும், எல்லாச் செய்திகளுள்ளும் செலுத்தி முழுமையான திறனாய்வு செய்து மக்கள் முன்னர் வைக்க இவர்கள் தயக்கம் காட்டிவிட்டனர்.
   
    “ எந்தப்  பொருளாயினும், எவர் வாயிலிருந்து வந்தாலும், எத்தன்மை பெற்றதாயினும் துருவிக் காண்பதே அறிவு “ என்று அருமையாக விளக்கிய அதே அறிஞர் வள்ளுவர்தான் தெய்வம், அலகை, ஊழ்,  எழு பிறப்பு,  மேலுலகம்  போன்றவற்றில் மக்கள் வைத்திருந்த அறிவற்ற நம்பிக்கையினை ஏற்றுப் போற்றினார்.   “ பிறப்பினால் எல்லோரும் ஒத்தவரே “ என்று பேசிய அவரே, துணைவி கணவனைத் தொழ வேண்டும் என்றும்,  “ இரப்போர் இல்லாவிட்டால் உலக நடப்பு சுவை பெறாது “ எனவும், சமநிலை முன்னேற்றத்தின் தடை நிலைகளை உறுதிப்படுத்தினார்.

பகுத்தறிவுக்கு எல்லை

    “ நட்ட கல் பேசாது “ எனும் அறிவியலுண்மையைத் துணிந்து அறைந்த திருமூலர்,  “ நாதன் உள்ளே இருக்கிறான் “ என்று ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது.

    சாத்திரச் சழக்குகளையும், கோத்திரச் சண்டைகளையும் கடுமையாகச் சாடி, “ சமரச சன்மார்க்கம் கண்ட இராமலிங்க வள்ளலார்“
“ சண்முகத் தெய்வமணி “ யையும், “ பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற, அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வத் “ தையும் எதிர்க்கத் தயங்கினார்.

    அதாவது இந்த அறிஞர்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை அமைத்துக் கொண்டு, அதற்கு மேல் வாழ்க்கை நெறிகளை ஆய்வு செய்து அறிவிப்பதற்கு அஞ்சிவிட்டார்கள்,  அல்லது பொது மக்களைப் போன்றே புலன்களுக்கு எட்டாத சிலவற்றின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து விட்டார்கள்.

எல்லாம் அரை வேக்காடு

    உலகப் பகுததறிவு இயக்கத்திற்கு முதன் முதலில் உருக்கொடுத்த சான் மார்ட்டினோ எனும்  “ பிரெஞ்சுப் பேரறிஞர்,  “ குருட்டு நம்பிக்கையின்றி, புலன்கட்கு எட்டக்கூடியவற்றை மட்டும் ஏற்று, தெய்வச் செய்திகள் என்பவற்றைத் தள்ளுபடி செய்யும் ஆழமான அறிவு நிலை நுகர்ச்சியே பகுத்தறிவாகும் “ என விளக்கினார்.

    இதன்படி மேற்கண்ட நம் நாட்டு அறிஞர்கள் யாவரும் அரைகுறைப் பகுத்தறிவாளர்களேயொழிய முழுமை எய்தியோர் அல்லர்.

    இரண்டாவதாக,  இவர்களுள் எவரும், பகுத்தறிவு முன்னேற்றக் கொள்கைகட்குப் பிறவிப் பகைவராக வாய்த்துவிட்ட பார்ப்பன இனத்தின்மீது நேரடியாகப் போர் தொடுக்க ஓர் இயக்கம் அமைத்தோ இன்றேல் தனியாகவோ முனையவில்லை, முயலவில்லை.

பார்ப்பனரைப் பணியும் வீரம்

    “ சுரர் “ களின் அறங்களை   வெறுத்தெதிர்த்த  “ அசுரர் “ களின் அவல முடிவினைத் தெரிவிக்கும் கற்பனைக் கதைகளையும், அவற்றின் விளைவாகப் பார்ப்பனரைப் பணிந்து கிடந்த  வீர (?) மன்னர்களையும் கருத்திற்கொண்டு இவர்கள் அடங்கி ஒடுங்கிக் கிடந்திருக்கலாம்.  அன்றேல்,  “ நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி “ முடிவெடுப்பதில் தவறிழைத்திருக்கலாம்.

    இவ்விடத்தில் நாம், பிற்காலத்தவையும், பிற நாடுகளிலிருந்து இறக்கப் பெற்றவையுமாகிய இசுலாமிய, கிறித்தவச் சமயங்களைச் சார்ந்த மன்னர்களே, பார்ப்பனர்களால் ஏற்கெனவே வகுக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த விழா மரபுகளும், சடங்கு முறைகளும் தங்கள் சமய நடப்புக்களிடையே நுழைந்து கொள்ளுவதைத் தடுக்க முடியவில்லை என்ற உண்மைகளையும், எப்படி இவர்கள் பார்ப்பனரையே தங்கள் நம்பிக்கைக்குரியோராய் வைத்துதக் கொள்ள நேர்ந்தது எனும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் நினைத்தல் தேவை.

இதுவும் அவன் செயலே

    இப்படியாக, நாகரீகத்தின் நறுமணமே படாமல் மேலும் மேலும் நலிந்து, அறியாமையில் ஆழ்ந்து, அடிமைத்தளையில் பிணிக்கப்பட்டுக் கிடந்த தமிழின உழைப்பாளி மக்களை உய்யச் செய்வதில் தந்தை பெரியார் அவர்கள் எப்படி அயராது முயன்று வெற்றி பெற்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில் மெய்சிலிர்க்கிறது.

    இளமைப் பருவததிலேயே எதனையும் துணிவாக எதிர்மறையில் அணுகி ஆராய்வதில்அய்யா அவர்கள் சுவை கண்டிருக்கிறார்கள்.  “ தாழ்த்தப்பட்டோர் “  இல்லத்தில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதில் விடாப்படியாக அவர் இருந்தமையால்,  “ எல்லாம் அவன் செயல்,  அவனன்றி ஓரணுவும் அசையாது “ என்று சொல்லிக் கொண்டிருந்த ஒருவரது கடை முன்புறமிருந்த பந்தலை வீழ்த்திவிட்டு  “ இதுவும் அவன் செயலே என்று அவர் கடைகாரரைக் கிண்டல் பண்ணியமையும் அவர்தம் பகுத்தறிவுப் பார்வைக்கு மிகப் பொருத்தமான எடுத்துக் காட்டுக்கள்.

வியப்புணர்வே காரணம்

    உளவியலின்படி இவ்விரு வேறு நிகழ்ச்சிகள் தாம் பெரியாரவர்கள் பிற்காலத்தில் மாபெரும் சாதி ஒழிப்பு வீரராயும், ஆரியத்தை அஞ்சாது எதிர்க்க வல்லவராயும், பகுத்தறிவின் ஆழத்தையே காணும் பண்டாரகராயும், ஓங்கித் திகழ அடிப்படையாக அமைந்தன என்று கருதலாம்.

    “ மெய்யியல்  (தத்துவம்) வியப்புணர்வில் தொடங்குகிறது “  என்று விளக்கினார்,  நாட்டுக்கு நன்மை கூட்டும் பகுத்தறிவு பகர்ந்து நஞ்சைப் பரிசாக ஏற்ற கிரேக்க பெரியார்.

    அதே வியப்புணர்வே - நம் மக்களின் வாழ்க்கை வழிகளில் நிரம்பியிருந்த முரண்பாடுகள், கொடுமைகள் பற்றிய வியப்புணர்வே திராவிடப்  பெரியார்க்குத் தீராச் சிந்தனையைக் கொடுத்து, தெளிவான பகுத்தறிவுக் கருத்துகளின் ஊற்றாக அவர்களைப் பக்குவப்படுத்தியது.

தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ்

    தந்தை பெரியாரவர்கள் கடந்த அரை நூற்றாண்டாக உலகியலின் எல்லாத் துறைகள் பற்றியும் முறைகள் பற்றியும் தமக்கென்றே உரிய தனிப்பாணியில் ஆய்ந்து பிழிந்து, சாற்றையும் சக்கையையும் பகுத்து நாட்டிற்கு - ஏன் - உலகிற்கே வழங்கயுள்ளார், அவர்தம் கருத்துக்களை எல்லா வகை இலக்கணக் கோல்களையும் வைதது அளந்து பார்த்த பின்னர்தான், உலக நாடுகளின் மாபெரும் மேதைகளை உறுப்பினராய்க் கொண்ட அனைத்து நாட்டு அறிவியல் - பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தந்தை அவர்கட்கு  “ தென்கிழக்காசியாவின் சாக்கிரடீசு “  “ புதிய உலகின் தொலை நோக்காளர் “  என்ற பொறித்த இசைப் பட்டயம் தந்து தனக்கு ஏற்றம் சேர்த்துக் கொண்டது.

மார்க்சையே கண்டேன்

    வடநாட்டு  “ பிளிட்சு “ இதழின் துணையாசிரியர் திரு. கே. ஏ. அப்பாஸ்,  அய்யாவைச் சந்தித்த பின்னர்,  “ மார்க்சையே கண்டுவிட்ட மனநிறைவு கிட்டிற்று “ என்று புகழ்ந்து எழுதுகையில்,  தமிழ்நாட்டுப் பொதுவுடைமை இயக்கத் தான்தோன்றிகள் சிலர் அய்யாவைக் “கொச்சை பொருள் முதற் கொள்கையர் “  என்பதாகத் திறனாய்வு எனும் பெயரில் திட்டினாலும், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பெரியாரின்  “ மெட்டீரியலிசம் “,  “ தத்துவ விளக்கம் “ ,  “ பெண் ஏன் அடிமையானாள்? “ எனும் மூன்று நூற்களை மட்டுமே படித்தால்கூட அவர் முழுமையான பகுத்தறிவாளர் என்பததை புரிந்து கொள்ள முடியும்.

கரடுமுரடான சொற்கள்

    “ கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,  பரப்பியவன்  அயோக்கியன்,   வணங்குபவன் காட்டுமிராண்டி  “  என்ற அண்மைகால அறிவிப்பு மேலோட்டமாய்ப் பார்த்தால், மிகவும் கடுமையான - நயமற்ற - முரட்டுத் தன்மை வாய்ந்த சொற்றொடர்களாகப்படும்.  ஆனால், அவர்தம் நகைச்சுவை தோய்ந்த விளக்கங்களைப் புரிந்து கொண்ட பின்னர் எவரும் அச்சொற்றொடர்களைப் பொருளாழம் மிக்க மெய்யியல் தீர்ப்பு என்று ஏற்றுக் கொள்ளவே செய்கின்றனர். அதிலும்  “ அய்யத்தின் பலனைத்தான் ( Benefit of Doubt ) ஆண்டவன் மீது ஏற்றினார்கள் “ எனும் அவர்தம ஆய்வுரை நினைந்து  நினைந்து வியந்தின்புறக்கூடிய அருமையான, அழகிய உண்மையாகும்.

    தந்தையின் பணி பகுத்தறிவுக் கோட்பாடுகளைப் பரப்புவதுடன் நின்று விட வில்லை.  பகுத்தறிவு வாடையே படாத மடமைச் செய்திகளைச் சமயத்தின் பெயரால் சலிப்பின்றிப் புளுகி வைத்தோரும், எங்கிருந்தேனும் பகுத்தறிவுக் கருத்துக்கள் வருமாயின் அவற்றை உடனடியாக ஒழித்துக் கட்டுவதில் “ சரச - சாம - தான - பேத - தண்ட ” முறைகளை கையாண்டு வெற்றி கண்டு வந்தோருமாகிய பார்ப்பனக் கொடுமையாளரோடு வெறியுடன் போராட வேண்டிய இன்றியமையாமையும் தந்தைக்கு ஏற்பட்டது.

அரசியலும் ஆலயமும்

    உலகமாந்தன்  ( Citizen of the World ) எனும் நூலில் ஆலிவர் கோல்டு சுமித் எனும் ஆங்கில அறிஞன்,  “ பாதிரிகள்,  பார்ப்பனர்,  பிக்குகள் ஆகியோர் எவ்வகை மாற்றத்திற்கும் ஏற்பளிக்க உளங்கொள மாட்டார்கள் “  என்று காட்டியபடி, எல்லா நாடுகளிலும், மதத்தலைவர்களின் மனப்போக்கு ஒரே தன்மையாகவே இருந்தது என்றாலும் கூட, மற்ற நாடுகளில் அரசியல் தலைவர்களின் கைகள் ஓங்கியபோது சமயத் தரகர்களின் கொட்டம் ஓய வேண்டியிருந்ததை வரலாற்று ஏடுகள் நமக்குக் காண்பிக்கின்றன.  ஆனால்,  நம் நாட்டில் பார்ப்பனர் மட்டுமே படிப்பறிவு பெற்றிருந்தமையால், இயற்கையாக அவர்களே அரசியல் தலைவர்களாகப் பெரும்பாலும்  வர நேர்ந்தது.  எனவே, அரசியல் தலைமைக்கும், ஆலயத் தலைமைக்கும் எந்தச் சூழ்நிலையிலும் ஒற்றுமையும் இணக்கமுமே நிலவி வந்தன, சில வேளைகளில் மாற்றங்கள் கட்டாயமாகத் தேவைப்பட்டபோது மதத் தலைவர்களாம் பார்ப்பனர் விட்டுக் கொடுக்க மறுத்தே விட்டார்கள்.
   
பார்ப்பனரை ஏன் சாட வேண்டும் ?

    இச்சூழ்நிலையில் தந்தையவர்கள் தமிழரிடையே பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சுவதோடு, பார்ப்பன எதிர்ப்புத் தன்மான  உணர்வினையும் ஊட்டினால்தான் உருவான பயன் காண முடியும் என்று கண்டார்கள் அவரின் திட்டத்தைத் தொலைநோக்குடன் புரிந்து கொள்ள வியலாத நிலையில் சில அறிஞர்கள், “ பகுத்தறிவைப் பரப்பவேண்டியதுதான்,  ஆனால், பார்ப்பனர்களை ஏன் கடுமையாகச் சாட வேண்டும் ? “ என்றனர்.  வேறு சிலர் பார்ப்பனர்தம் பிடியிலிருந்து நாம் விடுபட வேண்டியதே,  எனினும் எதற்காக கடவுளையும் மதத்தையும் எதிர்ப்பதில் கருத்துச் செலுத்த வேண்டும்?  என்றனர்.

    இவற்றையெல்லாம் பெரியார் பொருட்படுத்தவில்லை.  பகுத்தறிவுக்குப் புறம்பான குருட்டு நம்பிக்கைகளும் பார்ப்பன இனத்தின் உழைப்பில்லா உயர் வாழ்வும் பிரிக்க வொண்ணாமல் பின்னிக்கிடந்த நுட்பமான நிலை நூற் பயிற்சியாலும், நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளாலும் அவர்க்கு நன்றாகப் புலப்பட்டது.  எனவே, நாட்டு மக்களின் நலனுக்காக இரண்டு வகைக் கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றுவதென உறுதி பூண்டார்கள்.  ஊர்தோறும் சுற்றி உள்ளம் திறந்து பேசினார்கள்.

கருப்புச் சட்டையின் உட்பொருள்

    இந்த எதிர்நீச்சலில் எதிர்பார்த்தபடியே எத்தனையோ இடுக்கண்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் இறுதியில் அவர்தம் விடா முயற்சி வென்றது. 

    பார்ப்பனர் அனைவரும் வடமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஆரிய இனத்தினர் ஆனபடியால், தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனரல்லாத தமிழர்கட்குத் திராவிடர் எனும் இனப்பெயரைச் சூட்டுவதற்கு நல் வாய்ப்புக் கிட்டிற்று பெரியாருக்கு.

    பகுத்தறிவு - தன்மானஇயக்கத்தின் பெயரைத் திராவிடர் கழகம் எனும் இனவழியமைப்பாக மாற்றினார்.  திராவிடர்களின் இருண்ட நிலையைக் குறிக்கும் கறுப்பு வண்ணமும், அவ்விருளினை நீக்கவல்ல வீரத்தைக் காட்டும் சிவப்பு வண்ணமும் கொண்ட கொடியை அறிமுகப்படுத்திய அய்யா அவர்கள் இயக்க தொண்டர்கள் ஒரே சீராக கறுப்புச் சட்டை அணிந்து கொள்ளச் செய்தார்கள்.

சங்கராச்சாரியே ஏற்றார்

    “ இந்து மதமும், இந்து மதக் கடவுள்களும்,  தமிழனுக்கோ, தமிழ் நாடடிற்கோ தொடர்புடையனவல்ல. எந்த தமிழராலும் ஏற்பட்டவையும் அல்ல.  எவையும் தமிழ்மொழியில் தமிழ்நாட்டில் செய்யப்பட்டவையும் அல்ல.  இவை யாவும் அயல் மொழியாகிய ஆரிய மொழியிலும், வட நாட்டானான ஆரியனாலுமே ஏற்படுத்தப்பட்டவை ” என்ற தமிழனத் தந்தையின் கருத்தை இதுவரை எவரும சான்றுகளுடன் மறுத்துரைக்க முன்வரவில்லை.  மாறாக இக்கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சான்றுகள்தான்  ” கல்கி ”  இதழில் சமயத் தலைவர் சங்கராச்சாரி வாயிலாகவும்,  “ கலைக் களஞ்சியம் ” தொகுப்பில் சட்ட அறிஞர் வரதாச்சாரி வாயிலாகவும் கிடைத்துள்ளன.

    “ பார்ப்பனர் தம் ஒழுக்கக் கேடுகளையெல்லாம் இந்து மதக் கடவுள்கள் மீது ஏற்றிவிட்டனர் ” எனும் அய்யாவின் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டோருக்கு அரிய விருந்தாயிற்று.

பார்ப்பனத்தி நாற்று நடுகிறாளா?

    “ இந்து மதம் நமது மதமாயிருந்தால், அதில் நாமே நம்மை ஈன சாதி - இழிபிறவி - நாலாம் சாதி - சூத்திரன் - பார்ப்பனனின் அடிமை -நம் பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தக்கவர்கள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ” எனும் ஈரோட்டு ஏந்தலின் இயல்பான கேள்வி எத்தனை ஆயிரம் தமிழர்கள் இந்து மதத்திற்கு விடைகொடுத்துவிட்டு, முழுப் பகுத்தறிவாளர்களாகத் தங்களை உயர்த்திக்கொள்ள செய்தது.

    “ கோவில் கட்டியவன் தமிழன்,  குளத்தை வெட்டியவன் தமிழன்,  கடவுளுக்கு உருவம் சமைத்துக் கொடுத்தவன் தமிழன், குடமுழுக்குக்குக் கொட்டியழுதவன் தமிழன், இவ்வளவும் செய்த தமிழன் கருவறையினுள் நுழையக் கூடாது என்கிறானே ஆரியன். இன்னும் தமிழனுக்கு மானம் - வெட்கம் - பகுத்தறிவு வரவில்லையென்றால், பிறகு எந்த நூற்றாண்டில் வரமுடியும் ? ”  என்றும்

    “ எந்த பார்ப்பனத்தியாவது நாற்று நடுகிறாளா?  களை எடுக்கிறாளா?  பேயாடுகிறாளா?  இல்லையே, ஏன்? ”  என்றும்

    தமிழனத் தலைவர் விடுத்த கணை ஒவ்வொருவரின் உளச் சான்றையும் உலுக்கி எடுத்தது.

தாலி ஆராய்ச்சி

    நம் தமிழர் இல்லங்களில் கடைபிடிக்கப் பெற்றுவந்த திருமண முறைகள் தொடர்பாக, ” பொய்யும், வழுவும்  தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப ”  எனும் தொல்காப்பிய வரிகளை எடுத்துக் காட்டிய பெரியாரவர்கள்,  ” இன்று பெண்களின் அடிமைச் சின்னமாய் விளங்கும்  “ தாலி ” பண்டைய தமிழகத்தில் இடம் பெற்றிருந்ததா? ”  எனத் தமிழ்ப் புலவர்களிடம் அய்ய வினா எழுப்பியதால்,  “ தமிழர் திருமணத்தில்  தாலி ” எனும் பொருள் பற்றி ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்,  “ மங்கல நாணோ, தாலியோ தமிழர் திருமணத்தின்போது கட்டப்பட்டதாகத் தெரியவில்லை ” என்று முடிவு கட்ட வேண்டியிருந்தது.

அடிகளார்  கண்ட நாத்திகம்

    வ. உ. சிதம்பரனார்,  மறைமலை அடிகளார், திரு. வி. கலியாணசுந்தரனார்,  சோம சுந்தர பாரதியார்,  தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் எல்லாம் பெரியாரது இன உணர்ச்சிக் கண்ணாடியை அடிக்கடி பொருத்திக் கொண்டதால் அவ்வப்பொழுது, ஆங்காங்கே பகுத்தறிவுக் கொவ்வாத நிலைகளைக் கண்டுபிடித்துக் கண்டிக்க முடிந்தது.  மிகப் பெரும் சமயத் தலைவராகிய குன்றக்குடி அடிகளாரோ, இனவுணர்ச்சியின் எல்லைக்கே சென்று,  “ இன்றைய ஆத்திகம் என்பது தமிழின அழிவாகும், இன்றைய நாத்திகம் என்பது தமிழின உய்வாகும்” என்று அறிக்கை விட்டாரென்றால், அதற்கு அடிப்படையிட்டது தந்தை பெரியாரே என்பதனை அடிகளாரே ஒப்புக் கொள்ள தயங்க மாட்டார்.

பகுத்தறிவாளருக்கு இனப்பற்று இருக்கலாமா?

    இவ்வண்ணமாகப் பெரியாரவர்கள் பகுத்தறிவு, இனவுணர்வு ஆகிய இரு மருந்துகளையும் ஒன்றாகக் குழைத்துக் கொடுத்து, தமிழர்களின் அடிமை நோயின் அடிப்படை வலுவைக் குறைப்பதில் மிகப் பெரும் வெற்றியைக கண்டுவிட்டார்கள். விதைத்தவரே விளைச்சலை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்.

    இங்கே ஒரு கேள்வி பிறக்கிறது.  “ ஒரு பகுத்தறிவாளருக்கு இனப்பற்று இருக்கலாமா ? ”  என்பதே அது.

    எடுத்த எடுப்பில் இது சிக்கலாகக் காணக் கூடும். சிறிது சிந்தித்தாற்கூட தெளிவு கிட்டிவிடும்

    பகுத்தறிவியலின் குறிக்கோள் யாது?  மன்பதை முழுதும் மகிழ்வாக வாழச் செய்வதே - அதாவது வேறுபாடுகளற்ற சமநிலை சமைப்பதே. ஆக,  பகுத்தறிவாளர்க்குத் தேவையானது மனிதப்பற்று.

ஆரியமும் இந்திய தேசியமும்

    பெரியாரவர்களும் தமக்குக் கடவுள் பற்று, நாட்டு பற்று, மொழிப் பற்று கிடையா என்றும், மனிதப்பற்று மட்டுமே உண்டு என்றும் அடிக்கடி கருத்து வெளியிடுகிறார்.  இந்த மனிதப் பற்றுக்குப் பெருங்கேடாய் - தடைக்கல்லாய் நிற்பது ஆரிய இனவழி வந்தோர் கற்பனையாக உருவாக்கி வைத்துள்ள “ இந்திய தேசியம் ”  என்பதாகும்.  மாந்தப் பற்றுக் கொண்டோர் தங்கள் குறிக்கோளுக்கு குறுக்கே வரும் எவற்றையும் எதிர்த்தாக வேண்டும். தந்தையின் உயர்ந்த நோக்கம் நிறைவேறவிடாமல் ஊறு விளைவிப்பவை ஆரியமும், இந்தியத் தேசியமுமே.  தமிழக அரசினரின் சட்டத்தை எதிர்த்து ஆகம நூற்களில் குறிப்பிட்டுள்ள வகுப்பார் தவிர, ஏனைய பிரிவினர்  “ சாமி ” யெனும் கல்லைத் தொட்டால்,  “தீட்டு”ப் பட்டு விடும் என்பதாகச் சென்ற ஆண்டு பார்ப்பன இனத்தவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்காடினமையும்,  அதனை ஏற்றுக் கொண்டு நடுவர்கள் தீர்ப்பு வழங்கினமையும் சமநிலைக் கோட்பாட்டுக்கு எவர்  உலை வைக்கத் துணிகின்றனர் என்பதற்கு இணையற்ற சான்றுகள்.  எனவே, திராவிடத் தேசியம் அல்லது தமிழ் தேசியம் எனும் பெயரால் மனிதச் சமநிலை படைத்த மன்பதையைக் காண விரும்பி உழைக்க முனைந்தார் பெரியார்.

பொதுவுடைமையும்  தனி நாடும்

    “ சோவியத் ” துத் தலைவர்கள் எப்படித் தனிநாட்டில் பொதுவுடைமைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முயன்றார்களோ, அதே போன்றுதான் தற்போதைக்குத் தமிழ்நாட்டிலே யும் சமநிலை அமைப்பை உருவாக்கி வழிகாட்டலாம் என்று செயலாற்றினார் பெரியார். “உண்மையான பொதுவுடைமை ஆட்சி இந்நாட்டில் உண்டாகுமாயின்,  அப்போது தனிநாட்டுக் கொள்கைக்குப் பெரும்பாலும் தேவையிராது” என்று 1952- ஆம் ஆண்டிலேயே தந்தை அறிவித்தமை அவர்களுடைய கொள்கைத் தெளிவினை அய்யத்திற்கிடமில்லாமற் காட்டிவிட்டது.

    எனவே, பெரியாரவர்களின் நடைமுறைக் கோட்பாடுகளில் குழப்பம் எதுவும் கிடையாது.

    அனைத்துலகின் மூத்த பேராசிரியர்களின் கருத்துப்படி, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் நடந்திராத மிகப் பெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காண்பித்தே விட்டார்கள் நம் தந்தை.

    தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது போன்று தமிழினத்தின் தூக்கத்தைக் கலைக்க மதயானையென வந்து மிதித்துப் பெரியார் அவர்கள் பெரும் அறிஞர்களென்போர் செய்தற்கு அரிதாகிவிட்ட மலை போன்ற முயற்சியில் மாட்சிமை நிறைந்த வெற்றியை ஈட்டி விட்டார்கள்

    செயற்கரிய செய்த செம்மலின் புகழ் வரலாற்றில் நிலைத்து வாழப் போவது உறுதி.

-இறையன்






என் அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்தேனே


    நமது இயக்கத்தின் முதுபெரும் முக்கியத் தோழர்களில் ஒருவரும் பெரியார் பேருரையாளருமான பேராசிரியர் இறையன்அவர்கள் மறைந்தார் என்ற செய்தி, பேரிடி தாக்கியது போல் தாக்கியது - என்னையும் இங்குள்ள என் குடும்பத்தினரையும், கழக நண்பர்களையும். கடந்த சில நாட்களாக உடல் நலமற்று, சிகிச்சையில் இருந்த இறையன் அவர்களை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று செய்த முயற்சிகள் இறுதியில் பலனளிக்கவில்லையே!  ஆம் ,  நாம் தோற்றுப் போனோம்.  என்னே கொடுமை!

    நம் ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறுகின்ற “இயற்கையின் கோணல் புத்தி ” என்பது பற்பல நேரங்களில் இப்படித்தான் நம்மை வாட்டி வாட்டி வதைக்கிறது.  அவருடைய  75 ஆம் ஆண்டு அகவை விழாவை மிகச் சிறப்பாக நடத்தி கழகக் குடும்பத்தினரும், அவருடைய குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

நம்பிக்கை தளராமல் இருந்தோம்

    அதற்கு முன் சற்று தளர்ந்திருந்த  இறையனார் அவர்கள்,  ஏற்புரை நிகழ்த்தும்போது, அவருக்கே உரிய மிடுக்கோடு முழங்கினார்.  நானோ,  நண்பர்களோ அதை அன்று அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு உற்சாகப் பெருவெள்ளத்தில் அவரும் நீந்தினார். நம்மையும் நீந்த அனுமதித்தார். அவரது நோய் சற்று கடுமையானது என்று மருத்துவர்கள் சொன்ன போதிலும், நாங்கள் நம்பிக்கை தளராமல்தான் இருந்தோம்.  பாரீஸ் மாநாட்டிற்கெனப் புறப்பட வேண்டிய காரணத்தினால், அவரது பிறந்தநாளை சில நாள்களுக்கு முந்தியே நடத்திடுமாறு - நான் இறையன் அவர்களையும், திருமகள் அவர்களையும் கேட்டுக் கொண்டேன்.

எங்கள் அங்கங்கள்

    எதை எப்பொழுது சொன்னாலும் ஏற்க பழக்கப்பட்ட, பண்பட்ட அந்தக் கொள்கைக் குடும்பம் அதையும் அன்புக் கட்டளையாக எடுத்துக் கொண்டு செயல்பட்டது.  கடந்த சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் பெரியார் திடலில் உவகையும், மகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்த விழாவாக அவ்விழா அமைந்தது.  ”அவர்கள் இருவரும இயக்கத்தின் கொள்கைத் தங்கங்கள் மட்டுமல்ல. எங்கள் அங்கங்கள்”  என்று நான் அன்று கூறியது எனது உள்ளத்து உணர்வுகளின் அப்பட்டமான வெளிப்பாடு,  மிகையல்ல.

என் அரிய தங்கம்,  அங்கத்தை இழந்தேனே

    அப்படிப்பட்ட அரிய தங்கத்தை, என் அங்கத்தை இழந்து தவிக்கும் கொடுமை இவ்வளவு விரைவில் ஏற்பட்டு விட்டதே,  என் செய்ய? கும், இறையனாரின் இனநலப்பற்றும், எதையும் ஏற்று இன் முகத்தோடு செயல் புரிந்திட்ட பாங்கும் அவரது தனித் தமிழ் அறிவும், ஆர்வமும் தனித்தன்மைக்கொண்டவை. எவரைக் கொண்டும் அவர்தம் இடத்தை நிரப்பிட இனி ஒரு போதும் முடியாது,  முடியவே முடியாது.

எளிதில் எவரும் இல்லை

    பதவி ஓய்வு என்ற நிலைக்குப் பின் அவரது தொண்டறம் இயக்கத்தின் எல்லா முனைகளுக்கும் வற்றாது கிடைத்தது.  வரலாறாக நிலைத்தது.  எழுதுவதில், பேசுவதில்,  வாதாடுவதில், ஆய்வு செய்தலில் அவருக்கு இணை எளிதில் எவருமில்லை என்று நிறுவி - இயக்க வரலாற்றில் நிலைத்தவர்.

சாதியை ஒழிப்பதில் ஓர் ஒப்பற்ற செயல் வீரர்

    சாதியை ஒழிப்பதில் அவர் ஓர் ஒப்பற்ற செயல் வீரர்.  அதற்கு அவரது குடும்பமே ஒரு சிறு போர்ப்படை! அவரது கொள்கைப் பற்று, வெறும் எழுத்து, பேச்சோடு நின்று விடுவதல்ல.  செயல்,  செம்மையான செயல் என்பதன் மூலமே ஒளிவீசித் திகழ்கிறது.  அவரது ஆற்றல்,  பல்துறை ஆற்றல். செய்திகளை நல்ல தமிழாக்கம் செய்து அவர் மேடையில் நின்று முழங்கினால் அது முதன்மைப் பேச்சாளரின் பொழிவுக்கே அணி சேர்க்கும்.

சாவிலும் பறிக்க முடியாத ஒன்று

    ஆய்வுத் துறையில் அவரது தலைசிறந்த படைப்பு, காலத்தால் அழிக்க முடியாதது - சாவிலும் பறிக்க முடியாத ஒன்று.  அவரது ஆய்வு நூலான ”இதழாளர் பெரியார் ” என்ற நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடான உரைக் கொத்து.  40 ஆண்டுகளுக்கு மேலான நட்புறவில் நிகழ்ந்த எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அடுக்காக நினைவில் வந்து நின்று நம் வேதனையை, தாங்கொணாத் துயரத்தைப் பெருக்குகிறது.

கொள்கைச் சிங்கத்தை ஆழிப் பேரலை அடித்துச் சென்று விட்டதே!

    பாழும் நோய்,  எங்கள் கொள்கைச் சிங்கத்தை இப்படி ஆழிப் பேரலைபோல் அடித்துச் சென்று விட்டதே! என்றும் மாளாத் துயரத்தில், மீளாத் துன்பத்தில் உள்ள நிலையில் எங்களைவிட நேரடியாக பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ள திருமதி திருமகள் இறையன் அவர்களுக்கும், அவர்தம் அன்புச் செல்வங்களுக்கும் எப்படித்தான் ஆறுதல், தேறுதல் கூறுவது!  நாம் பகுத்தறிவாளர்கள் எந்த இழப்பையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பெற்றவர்கள் என்பதால்,  எதைத் தவிர்க்க இயலாதோ அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர, என்னதான் தீர்வு?

இறையனாருடன் தொலைபேசியில் பேசினேன்

    கடந்த வாரம்தான் தஞ்சையில் இறையனார் தங்கியிருந்தபோது, நாங்கள் இருவரும் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்தபோது, இப்படி ஒரு செய்திக்கு யாரும் தயாராகவில்லை.  தொண்டருக்குத் தொண்டர் என்று எண்ணியே நாளும் கடமையாற்றிடும் நானும், என் வாழ்விணையரும் இப்போது சென்னையில் இருந்து அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கடமையாற்ற இயலாது காலம் சதி செய்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தைப் பிழிந்தெடுக்கிறது.

நம்பிக்கை,  ஏமாற்றம்

    நம் கருஞ்சட்டைக் குடும்பம் கடமையாற்றும் என்பதுதான் இதில் ஒரு சிறு ஆறுதல்.  அவரிடம் நாங்கள் விடைபெற்றுக் கொண்டு பயணமானபோது அதுவே அவரது பிரியா விடையாக இருக்கும் என்று எண்ணவில்லை.  காரணம் நம்பிக்கை!  ஏமாற்றம்தான் என் செய்வது!

கண்ணீரை உகுக்கிறேன்

    அவருக்கு இயக்கத்தின் சார்பில் தலைதாழ்ந்த வீரவணக்கம் கூறுகிறோம்.  அவரது தொண்டறத்தால் அவர் மறைய மாட்டார்.  நம் ஒவ்வொருவரின் இதயங்களில் நிறைந்து இயக்க வரலாற்றின் இணையற்ற பொன்னேடாகத் திகழ்வார்;  திகழ்ந்து கொண்டே இருப்பார்!

                                      கண்ணீர் மல்க வழியனுப்பும் உயிர்த் தோழன்,
கி. வீரமணி,
தலைவர்,
               திராவிடர் கழகம்.

Friday, December 17, 2010

இரங்கல் அல்ல, உறுதி ஏற்பு!

                            தெறித்து விழும்  சொற்கள்
                                எரித்து விடும் ஆரியத்தை
                            பறித்து விடலாம்  இயற்கை
                                உம்மை எம்மிடமிருந்து - ஆனால்,
                            அரித்து விடவா முடியும அவைகளால் உம் கருத்தை

                            கோடை நிழலே,
                                கொள்கை அழலே!
                            அருவருக்கும் ஆரியத்தை
                                கருவறுக்கும் அருமருந்தே!
                            தனித் தமிழ் விருந்தே!

                                அறிவாற்றலில் உம்
                            அருகே நிற்கும் அருகதை பெற்றேன் இல்லை- ஆயினும்
                                ஒழுக்கத்தில், நாணயத்தில் உம்மை
                            ஒத்து நிற்க எம்மால் இயலும்.

                            அந்தத் துணிச்சலில் ஒழுக்கமுடையோர்
                                யாவரும் ஒன்று சேர்ந்து கூறுவோம்!
                            இன்னும் இறையனார் இறக்கவில்லை...
                                யாம் இறையனாரின் தொடர்ச்சி.....   

                            போர்க்களத்தில் ஒப்பாரியா?
                                இரங்கல் தெரிவிக்கவா வந்தோம்?
                            இல்லை, இல்லை உம்வழியில் நடப்போம் என
                                உறுதி ஏற்கவே வந்தோம்!!.

                                                    -   க.ச. பெரியார் மாணாக்கன்






வாழ்க்கைக் குறிப்புகள்

இறையன்,  இனநலம்,  தமிழாளன், நாடகன்,  பொருநன், பெரியார் மாணாக்கன்,  மாந்தன்,  பாணன்,  வேட்கோவன்,  சான்றோன்,  அறிவேந்தி,  கிழவன்,  வழக்காடி,  பிடாரன்,  சுவைஞன்,  சீர்தூக்கி,  பூட்கையன்,  செய்தி வள்ளுவன் போன்ற பல புனைபெயர்களில் திராவிட இயக்க இதழ்களில் எழுதி வந்த இவரின் இயற்பெயர் கந்தசாமி என்பதாகும்.  மதுரையில் இராமுத்தாய் - அழகர்சாமி ஆகிய பெற்றோரின் மூத்த மகனாய் 4.6.1930 அன்று பிறந்து, திண்டுக்கல்லில் வளர்ந்து, இன்று, தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் தந்தை பெரியார் நிறுவிய திராவிடர் தலைமையகத்தில் இயற்கை அழைத்துக் கொள்ளும்வரை  (12.08.2005 வரை) பொறுப்பாற்றிய இவரின் வாழ்க்கை குறிப்புகள் பல்சுவை வாய்ந்தவை.

      அமெரிக்க கிறித்தவத் தொண்டற நிறுவனத்தின் (A.M.C.C.) தொடக்கப் பள்ளியில் தன் அய்ந்தாம் ஆண்டகவையில் முதலாம் வகுப்பில் சேர்ந்த இவரின் இசையுணர்வு, கலையார்வம், வாயாடும் இயல்பு, எதனையும் உடனடியாகப் புரிந்தேற்கும் திறன் முதலியவற்றைக கண்டுகொண்டனர் ஆசிரியப் பெருமக்கள்.

            எனவே, படிப்பு, பாட்டு, நடிப்பு, விளையாட்டு ஆகியவற்றில் இரண்டாம் வகுப்பிலிருந்தே இவருக்கு நிறையப் பயிற்சி அளித்து, கல்லி யெடுத்து வெளிக் கொணருதல் என்னும் நற்கடமையை அக்கறையுடன் நிறைவேற்றிய ஆசிரியப் பெருமக்கள், இவர் அய்ந்தாம் வகுப்பு முடித்து வெளியேறுவதற்குள்,  கல்விக் கூறுகள் எல்லாவற்றிலும் நல்ல தேர்ச்சி பெற்ற  முதல் தர மாணாக்கனாக இவரை உருப்படுத்திவிட்டனர்.  இவ்வண்ணம், இவரின் பிற்கால நடவடிக்கைகளுக்கெல்லாம் வித்திட்டு நீரூற்றியவர்கள் சான்றோர்களாகிய ஆசான்மாரே.

            இவரின் இயல்பூக்கங்கள் பண்படுவதற்கு அறிவியல் அடிப்படையிலான மரபியல்கூறும் ஒரு காரணியாய் அமைந்தது.  இவரின் குடும்ப முந்தையர்கள் அய்ந்தொழிலாளர்கள் ஆவர்.  தொழிற் புலமைக்காகப் பல தங்கப் பதக்கங்கள் பெற்றவர்கள்.  இவரின் அன்னையாரும் இனிமையாகப் பாடுவார்.  எனவே, மரபியல்,  சூழ்நிலை இரண்டு வாய்ப்புகளுமே சிறப்பாக அமைந்து இவரை சமைத்தன.

            லேடீஸ் க்ளப்  என்னும் மகளிர் மனமகிழ்மன்றம்  (சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் இந்நாட்டில் உருவான நகர நாகரிகத்தின் ஒரு கூறு அவ்வமைப்பு ),  திருமண விழாக்கள் போன்றவற்றுக்குப் பலரும் இவரை அழைத்துச் சென்று பாடி - நடிக்க வைத்ததால், தயக்கமின்றி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும் கூச்சமற்ற சிறுவனாக - பின்னர் விடலையாக - இவர் வளர முடிந்தது.  இச்சூழ்நிலையில் இவரின் தந்தை இவர் அய்ந்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருக்கும் கட்டத்தில்,  திடிரென்று  உறார்மோனியம்   என்னும் இன்னிசைத் துருத்தியை இவரிடம் கொண்டுவந்து கொடுத்து, ” ஆசிரியரொருவரை ஏறபாடு செய்யும்வரை தானாகவே கற்றுக் கொண்டுவாஎன்று ஊக்கப்படுத்தினார்.  விழுந்து எழல் ” (Trial and Error )  முறையில்  ஙொய்யா ஙொய்யா பையாஎன அழைக்கப்படலானார்.

            அதே பள்ளிப் பருவத்திலேயே இவர் பல்வேறு பட்டறிவுகளுக்கு இலக்காக நேர்ந்தது.

            மூன்றாம் வகுப்பில் இவர் இருந்தபோது ஒரு முறை தன் தந்தையிடம்  வண்ணான் வந்தான்எனக் கூற நேர்ந்தது.  இவர் கன்னத்தில் ஓங்கி அறைந்த இவரின் அப்பா,  வந்தார் என்று சொல்எனக் கண்டித்து விளக்கமாக அறிவுரை சொன்னார்.

            இவருடன் அய்ந்தாம் வகுப்பில் பயின்ற ஆதிதிராவிட மாணவர்களை இல்லததிற்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் உட்கார விரிப்புத் துணியோ,  பாயோ எடுத்துப் போட இவரின் அம்மா தயக்கம் காட்ட, அவருடன் கடும் சொல்லாடலில் இறங்கி விடாப்பிடியாக நின்று, தன் நிலைப்பாட்டில் இறுதியாக வென்றார்.  இவரின் தந்தையின் தீர்ப்பு இவர் பக்கம் இருந்தது.

            கீழை நாடுகள் சென்று நிறைய உறைவகங்களும் வளமனைகளும் படைத்து ஊர் திரும்பிய இவரின் பெரியப்பாவின் கடைசல்  பட்டறைத் தட்டிகளின்மீது ஒட்டப்பட்டிருந்த  விடுதலைஇதழ் களை நோக்க நேர்ந்த இவர், அவற்றில் காணப்பட்ட புதுமுறை எழுத்துக்கள் பற்றிப் பெரியப்பாவிடம் முழுமையான விளக்கம் கேட்டு, அதன் நியாயத்தை அப்போதே உணர்ந்தவரானார்.

            இவவாறு சிறுவனாக இருந்தபோதே பெரியார்ப் புரட்சியின் பாதிப்புகளுக்குத் தன்னை அறியாமலேயே இலக்கானார்.  அப்பாதிப்புகள் பிற்காலத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளாக வளர்ந்து இவரை அறிவாசான் அய்யாவின் பாசறைக்கு இட்டுச் செல்லுவதில் பங்காற்றியுள்ளன.

            இவர் பயின்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதாலும், அன்பர் ஒருவரிடம் தனிப்பாடம் கேட்டதாலும் திண்டுக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இவர் எளிதாக சேர முடிந்தது.  ஆறாம் படிவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு வரையிலும், படிப்பிலும் முதல் மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார்.  விளையாட்டுகளில் நிறைய ஆர்வம் காட்டிய இவர் வெளியூர்கட்கெல்லாம் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டார்.

            அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கிய-சொல்லாடல் மன்றம் (Literary and debating Society ) என்ற ஒன்று அமைக்கப்பட்டு, மாணவர்கட்கு ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்சி தரப்பட்ட நிலையில், இவர் அதை நல்ல வண்ணம் பயன்படுததிக் கொண்டு சொல்லாற்றல், எழுத்தாற்றல், நடிப்பாற்றல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டார்.  பள்ளி போட்டிகளிலும், கலந்து கொண்டு நிறையப் பரிகள் பெற்றார்.

            இவர் நான்காம் படிவம் என்னும் ஒன்பதாம் வகுப்பில் (1944-இல்) படித்துக் கொண்டிருக்கையில் தமிழிசை இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் நிறுவப்பட்ட தமிழிசைச் சங்கத்தில் சேர்ந்து முறைப்படியான தொல்லிசை பயின்று, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருள் முதல் மாணாக்கனாகத் தேர்ந்து, வெள்ளிக் கோப்பைகளும், வெள்ளிப் பதக்கங்களும் வென்றார்.  தொடர்ந்து எட்டாண்டுகள் தொல்லிசையில் ஆழமான பயிற்சியை இவர் பெற்றமை அவ்வப்போது பிற்காலத்தில் பயன்படவே செய்தது.

            தமிழிசை பயின்று கொண்டிருந்த காலத்தில் பார்ப்பனப் புன்மை பற்றி நன்றாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இவருக்குக் கிட்டின.

            திண்டுக்கல்லில் பார்ப்பனர் நடத்திக் கொண்டு வந்த  யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்ஸ்எனும்  சபாவின் சார்பில் நிகழ்ந்த  கச்சேரிகளின் தமிழ்மொழித் தீண்டாமை - ” சபாவில் பாடிய அதே இசைப் பெருங்கலைஞர்கள் தமிழிசை மேடையில் இசைக்க வந்தபோது வெளிக்காட்டிய அநாகரிகப் பண்புகள் -

            ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் திண்டுக்கல்  அங்குவிலாஸ்  பளிங்கு மாளிகைக் கண்ணாடி அரங்கத்தில் பாடவந்த பார்ப்பனரல்லா இசைப் புலவர்களுக்கு இவர் அணுக்கத் தொண்டனாகப் பணிபுரிந்து அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட கலையுலகம் பற்றிய கருத்துக்கள் -

          பார்ப்பனர்களுடன் பல போட்டிகளில் இவர் கலந்துகொண்டபோது உயர்ந்த மதிப்பெண்களை இவர் ஈட்டினாலும் உரிய பரிசுகள் இவருக்கு வழங்கப்படாமல், பார்ப்பன இளைஞர் சார்பாகக் காட்டப்பட்ட பாகுபாடு போன்றவை இவரின் மூளைத் திரையில் அழுத்தமாகப் பதிந்தன.

            பதிவுகள் உறுதியாக நிலைக்க வேண்டுமே . திண்டுக்கல் தமிழிசை விழாவில் பங்கேற்ற பேரறிஞர் அண்ணாவின் ஆழமான விளக்கவுரை அதைச் செய்தது.  தமிழன் தமிழிசையை வெறுக்க மாட்டான்.  வெறுப்பவன் தமிழனாய் இருக்க மாட்டான்என்னும்  கி..பெ.வின் ஒலி முழக்கத்திற்கும் அதில் பங்குண்டு.

            ஒரு முழுமையான தமிழின உணர்வாளன் கருவாகி உருவாகத் தொடங்கிவிட்டான்.  ஒவ்வொரு  குடிஅரசுஇதழின் எழுத்துக்களும்    திராவிடநாடுஏட்டின் கருத்துக்களும் இவ்விளைஞனால் மேயப்பட்டன, ஆயப்பெற்றன.

            உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் பயின்று கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் இனவுணர்வுத்தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த இவர் பொதுவுடைமை இயக்கப் பாதிப்புக்கும் இலக்காகியிருந்தார்.  இவர் வாழ்ந்து வந்த பகுதி  குறவன் பள்ளம்என்னும் பாட்டாளிகளின் குடியிருப்புகளை அடுத்ததாகும்.  சுருட்டு சுற்றுதல்,  சுவைப் புகையிலைச் சிப்பமிடுதல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்த உழைப்பாளிகளிடையே  பணியாற்றிய பொதுவுடைமைக் கட்சி முன்னோடிகளுடன் நன்கு உறவாடிய இவர் இந்திய மாணவர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.  பொதுவுடைமை தொடர்பான நூல்களையும்,  இதழ்களையும், சிற்றேடுகளையும் ஆழமாகப் படித்தார்.  அப்படிப்பு பின்னர் தந்தை பெரியாரின் கோட்பாடுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கப் பேருதவியாய் இருந்தது.  பிற்காலததில் திண்டுக்கல் மலைக்கோட்டைப் பூங்காவில் அடிக்கடி பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுடன் அமர்ந்து சொல்லாடல் நிகழ்த்துவதற்கு அவர் முன்னர் பயின்ற பொதுவுடைமை இலக்கியங்கள் தகுந்த சான்றுகளாய் அமைந்தன.

            இத்தகைய பட்டறிவுகளால் இவருக்கு ஒரு பெரும் உண்மை தெளிவாயிற்று.  அதாவது பொதவுடைமைக் கொள்கைகளைப் பெரியார் ஏற்றுக் கொள்ளுகிறார்.  மேலும் சிறப்பான சிலவற்றைக் கூறுகிறார்.  ஆனால் பொதுவுடைமையாளரோ,  பெரியாரின் இன்றியமையாக் கொள்கைகட்கு ஏற்பிசைவு தர மறுக்கின்றனர்.  ஓர் உண்மையான பொதுவுடைமைக் கொள்கையாளரை  பூர்ஷ்வாஎனக் கொச்சைப் படுத்துகின்றனர். ” ஏன் எனும் பெருவியப்பு இவருக்கு.

            உயர்நிலைப் பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு (1947- மார்ச் ) எழுதிய இவரின் எண், தேர்வு முடிவுகளில் அச்சேறவில்லை.  அப்படியானால் தோல்வி என்றுதானே பொருள்?  தேறாமைக்கான காரணம் இவருக்குப் புரியவில்லை.  கற்பித்தவர்கட்கோ கற்பனை செய்யவே முடியவில்லை. மீண்டும் இவர் அதே பள்ளியில் இறுதி வகுப்பில் தலைமையாசிரியரின் நல்லெண்ணத்தின் உதவியால  மீள்பயில் மாணாக்கனாக -  Supplementary Student ”  சேர்ந்து பயிலத் தொடங்கிவிட்டார்.

            ஒரு வெறியோடு காலாண்டுத் தேர்வுக்காக இவர் அணியமாகிக் கொண்டிருந்தபோது, - ஆம்,  மூன்றரை மாதங்கழித்து  -  கந்தசாமி அரசுப் பொது தேர்வில் வெற்றியடைந்து விட்டான்என்னும் செய்தி தலைமையாசிரியருக்குத் கிடைத்தது.  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படிப்பு அவ்வளவுதான்.

            சிரிப்பதா?  அழுவதா ?  என்னும் நிலை இவருக்கு.  நம்நாட்டை நாமே ஆளத் தொடங்கியதன் உடனடிப் பயன் இது.  ஆனால், அதுவும் ஒரு நன்மையை விளைவித்தது.  இவரின் இயல்புகளுக்கும் விருப்பங்களுக்கும் பொருத்தமான ஆசிரியர் பணியை மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பாக அது அமைந்தது.

            அக்கல்வியாண்டு முடிந்ததும்,  ஆசிரியர் பயிற்சிக்காக இவர் கோரிக்கை அனுப்ப,  அடுத்த கல்வியாண்டில் (1948) திண்டுக்கல் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே பயில மாவட்டக் கல்வியதிகாரியின் ஆணை கிடைத்து விட்டது.

            பயிற்சி நிறுவனத்தில் இவர் சேருங்காலத்திற்குள் ஒரு முதிர்ச்சியுள்ள திராவிடர் கழக இளைஞனாய் ஆகிவிட்டிருந்தார்.  எனவே, ஆசிரிய மாணாக்கன் என்னும் அந்தத் தகுதியை எய்தியவுடனேயே இவர் ஆற்றிய முதல் வினையே திராவிடர் மாணவர் கழகம் நிறுவியமைதான்.

            பயிற்சியின் தொடக்கக் கட்டத்தில் அன்றாடம் காலை மாணவர் கூடலின்போது பாடப்பட்டுவந்த  வாழிய செந்தமிழ்எனும் பாடலை இசை கற்றவராகிய இவர் முற்படப் பாட வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். 

            சுப்பிரமணிய பாரதியின் பல்வகைப் பாடல்களையும் பயின்று,  போட்டிகளில் பங்கேற்று நிறையப் பரிசுகள் வாங்கிய இவர், அப்பாடலில் இடம் பெறும்ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்என்னும் வரி பற்றி முனைப்புடன் கருதி, பயிற்சியில் சேர்ந்திருந்த மாணவர்களின் குறிப்பிட்டவர்களை அழைத்து  ( ஆசிரிய மாணாக்கர்களின் பெரும்பான்மையோர் பெரியார் இயக்கச் சார்பாளர்கள்) கலந்தாய்வு செய்தார். 

            தன்னை முன்பாட்டிசைக்க நிறுத்துவார்களேயானால்,  ஆரிய நாட்டினர்எனும் வரிக்கு மாற்றாகச்  செந்தமிழ் நாட்டினர் செம்மையோடியற்றும்  என்பதாகத்தான் முன் எடுத்தத் தர, தோழர்களெல்லாம் அவ்வாறே பின்பாட்டாக இசைக்க வேண்டும் என இவர் திட்டம் தந்தார்.

            மறுநாள் காலை கூட்டம் தொடங்கியபோது, எதிர்பார்த்தபடியே இசையாசிரியர் இவரைத் திரும்பத் திரும்ப வற்புறுத்த, திட்டமிட்டபடியே இவர் முன்பாட்டிசைக்க, பாதி மாணவர்கள்  செந்தமிழ் நாட்டினர் செம்மையோடியற்றும்என்று பிற்பட்டுப்  பாட, மீதியான தேசிய மாணவர்கள் ஆரிய நாட்டினர்என்றே பாட,  அதன் விளைவாகப் பரபரப்புச் சூழ்நிலை உருவாகி,  அச் செய்தி                     வீடுதலையிலும் வெளியாகிவிட, அச்சிக்கல் பற்றிச் சென்னை அரசு சிந்தித்து, அப்பாடலின் முதலிரண்டு வரிகளும் கடையிரண்டு வரிகளும் பள்ளிகளில் பாடப்பெற்றால் போதுமென ஆணை வழங்க நேர்ந்தது.

            பயிற்சி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1948-ல் ஈரோட்டில் நடந்த சிறப்பு மாநாட்டிற்குச்  சென்றிருந்தபோது, ஏற்கெனவே திண்டுகல்லில் இவரின் நடவடிக்கைளைக் கவனித்திருந்த  டார்ப்பிடோ   .பி. சனார்த்தனம் அவர்களால்  கி. வீரமணி,  மு.கருணாநிதி  ஆகிய அன்றைய இளம் முன்னோடிகளிடம்  இவர் இயக்கத்திற்கு நன்கு பயன்படுவார் என அறிமுகப்படுததப் பெற்றார். அப்போதிருந்து,  இயற்கை தன்னை அழைத்துக் கொள்ளும் வரையிலும்,  தமிழகத்தில் கழகச் சார்பில் நடைபெற்றுள்ள பெரிய மாநாடுகள் அனைத்திற்கும் சென்று கலந்திருக்கிறார்.

            1949-இல் நிகழ்ந்த விரும்பத்தகா வெளியேற்றங்களின்போது,  ஆசிரியர் பயிற்சி மாணவராக இருந்த இவர், அய்யாவின் விளக்கங்களை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்டு,  உணர்ச்சிக்கடிமையாகாது, அறிவின் ஆட்சிக்கு இலக்கானவராய் - அய்யாவின் கழகத்தில் ஊன்றி நின்றார்.

            மேலும், திண்டுக்கல் திராவிடர் கழகத்தையே முற்றிலுமாகக் கலைத்துவிட வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கியோரிடம்,         கழகத்தைச் சார்ந்து கடைசியாக ஒரேயொரவர் இருந்தாலும் அவரிடம் பிறர் பதவி விலகல் மடல் கொடுத்துவிட்டு வெளியேறிவிட வேண்டுமே யொழிய கழகத்தையே கலைப்பதாகக் கூறுவதை ஒப்பமாட்டோம்என்று உறுதி காட்டியதுடன், புதிய நிருவாகக் குழு ஒன்றை அரும்பாடுபட்டு அமைப்பதில் பெரும்பங்காற்றினார்.

            அத்துடன்  அய்யா-அம்மா திருமண ஏற்பாட்டை வரவேற்கும் முறையில் திண்டுக்கல்லுக்கு அவர்களை வரவழைத்து மாபெரும் கூட்டமொன்றை மாணவர் கழகத்தின் சார்பில் நடத்திக் காட்டினார்.

            திராவிடர் மாணவர் கழகத்தில் தொண்டாற்றிக் கொண்டே  YMDA  எனும்  திராவிட இளைஞர் விளையாட்டுக் கழகம் அமைத்து, வளைப்பந்து, (Tennikoit) உதைபந்து  (Foot ball) ஆகிய விளையாட்டுகளில் நம் இளைஞர் பயிற்சி பெறச் செய்து, பல போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப் பெற ஏற்பாடு பண்ணியவர் இவர்.

            ராஜகோபாலாச்சாரி புதிய கல்வி என்ற பெயரில்  குலக் கல்வித் திட்டம்கொண்டுவந்த போது உயர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த இவர் அக்கல்வித் திட்டத்தை மறுத்து ஆசிரியர்களின் ஆய்வுக் குழுக்களில் குரல் கொடுக்க தயங்கவில்லை.

            அதே ஆச்சாரியார், ஆடசியின்போது அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பெற்ற இவர்,  . கந்தசாமி, ஆசிரியர்,  அரசர் சேதுபதி உயர்நிலைப் பள்ளி,  பறமக்குடிஎன்னும் முகவரிக்கு  விடுதலைவரவழைத்து,  பார்ப்பன ஆசிரியர்கள் உட்பட ஆசிரியரனைவரையும் படிக்கச் செய்தார்.

            பறமக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கழகக் கிளைகளைச் செம்மைப்படுத்துவதற்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த வழக்கறிஞர் இரா. சண்முகநாதன்,   என். ஆர். சாமி  ஆகிய முகவை மாவட்டத் தலைவர்கட்குப் பெருந்துணை புரிந்தார் இவர்.

            சில ஆண்டுகளிலேயே நிலையுயர்வு வழங்கப்பட்டு, பள்ளி ஆய்வாளராய்த தேவகோட்டைக்கு அனுப்பபட்ட இவருக்கு ஆசிரியருலகிலும், அரசு அதிகாரிகளிடத்திலும் நற்பெயர் கிட்டியது.

            பெரியார் நெறியைப் பின்பற்றிய இவர் ஆசிரியர்கட்கு உயர்ந்த மதிப்பளித்து (கல்வியதிகாரிகளை  எஜமான்என்றெல்லாம் அழைக்கும் ஆசிரியர்கள் வாழ்ந்த காலமது ) அவர்களுடன் தோழராக,  ஊக்குவிக்கும் வழியாட்டியாகப் பழகிய இவரது பான்மை ஆசிரியர்களிடையே வியப்பு, தன்மதிப்பு,  தன்னம்பிக்கை ஆகியவற்றைத் தோற்றுவித்தது.

            அக்காலத்தில் முதியோர் கல்வி என்னும் பெயரில் நடைபேற்ற இரவுப் பள்ளிகளைத் திடீரென்று பார்வையிடச் சென்று ஊர்மக்கள் கூடலுக்கு ஏற்பாடு பண்ணிக் கல்வியின் இன்றியமையாமையைப் பயன் கூட்டும் வண்ணம் எடுத்துரைத்த இவரின் பொறுப்புணர்ச்சி, அக்காலத்திய அய்ந்தாண்டுத் திட்டங்களைப் பரப்புவதில் இவர் காட்டிய பேரார்வம் ஆகியவற்றால் கல்வித்துறை மேலதிகாரிகள் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியாளர்களும் இவரைப் பாராட்டி,  காமராசர் அரசுக்கு அறிக்கைகள அனுப்பினர்.

            தேவகோட்டை,  அருப்புக்கோட்டை,  விருதுநகர்,  அம்மாப்பேட்டை (தஞ்சை),  குளித்தலை,  மாயனூர், சீர்காழி,  திருவாடானை,  (தேவகோட்டை),  திருப்பூர்,  குடிமங்கலம்,  பல்லடம்  ஆகிய வட்டாரங்களில் கல்வி ஆய்வாளராகவும்,  கீழக்கரை,  பறமக்குடி,  கோடைக்கானல்,  சேயூர்,  கோடம்பாக்கம்(சென்னை) முதலிய ஊர்களில் அரசுப் பள்ளிகளின் துணை ஆசிரியராகவும்,  திண்டுக்கல்,  குருக்கத்தி, மேலூர், அமராவதி புதூர்,  ஆகிய ஊர்களில்ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநராகவும், பாடியநல்லூர் (செங்குனறம்) ஆண்டார்குப்பம்,  அன்னை சிவகாமி நகர் ஆகிய ஊர்களில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராயும் கல்வித் துறையின் பல நிலைகளிலும் பணியாற்றிப் பட்டறிவு நிரப்பினார் இவர்.

      இப்பணிகட்கிடையே இவர்  இளங்கலை ப் பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், கல்வித்துறையின் இசைவு பெற்றுப் படித்து, பயிற்றுவித்தலில் பட்டம் (Bachelor of Teaching-English and Tamil ) எய்தினார்.

            கல்வித்துறையால் இவர் பெங்களூரிலுள்ள  ”Regional Institute of English ” எனும் நிறுவனத்தில் முழுமையான சிறப்பு பயிற்சி பெற அனுப்பப்பட்டார். ” British Council ” பேராசிரியர்களிடம் உயர்தரப் பயிற்சி அங்கு இவருக்குக் கிட்டியது.  இக்கல்லூரிகளிலெல்லாம் பாடம் கற்பிப்பதில் முதன்மைத் தகுதியாளராகவே இவர் வைக்கப்பட்டார்.  அவ்வாறு இவர் எய்திய தகுதி நம் இயக்கத்திறகு அவர்      இயற்கை எய்தும் காலம் வரை பயன்பட்டு வந்துள்ளது. 

           
தொடக்கத்தில் கிறித்துவப் பள்ளிகளிலும் பின்னர் அரசுக் கல்வித் துறையின் பல பிரிவுகளிலுமாக 38 ஆண்டுக்காலப் பணிகளின்போதும் தான் ஒரு பெரியார்க் கொள்கையாளன் என இனங்காட்டிக் கொள்ள இவர் தயங்கியதே கிடையாது.

            நடைமுறை வாழ்க்கையிலும பெரியாரின் தமிழெழுத்துச் சீரமைப்பு நெறியையே  கையாண்ட இவர், கல்வியதிகாரி எனும் நிலையில் பள்ளிகளில் ஆய்வுக் குறிப்புகள் பதிவு செய்தபோது  பெரியார் எழுத்துக்களைக் கையாளுகிறீர்களேஎன்று     வினவியோர்க்கு,  என் வரையில் பெரியார் எழுத்துக்களே பொருத்தமானவை - இயற்கையானவையாகும்.  நீங்களும் இதை இப்போது பின்பற்ற வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை.  ஆனால், பிற்காலத்தில் இதைத்தான் நீங்கள் ஏற்றுக் கற்பிக்கப் போகிறீர்கள்என்றார். அவையே உண்மையாகி,  தமிழக அரசால், பெரியார் எழுததுச் சீர்திருத்தம்,  ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனைவராலும் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

            சிறுவனாக இருந்தபோது இவரின் பெரியப்பாவின் பட்டறையில் அன்றாடம்  விடுதலைஎழுத்தகளை நோக்க நேர்ந்த இவர் அவ்வெழுத்துக்களையே அன்றாடம் எழுதவும் நேர்ந்தது.

            சில சிற்றூர்ப் பள்ளிகளில் ஆதித்திராவிட பழந்தமிழ்க்குடிக் குழந்தைகள் பிரித்து அமரவைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகளை - தலைமையாசிரியர்களிடம் நயமாகவும், சட்டப்படி வற்புறுத்தியும், சரி செய்ய முனைப்புக் காட்டினார்.

            பிகானீரிலிருந்து வந்த கல்வித் தூதுக்குழுவினர், தமிழகக் கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை இராமேசுவரம், திருவெண்காடு,  வைத்தீசுவரன் கோவில் முதலிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்  கடமைவாய்த்தபோது, பிற ஏற்பாடுகளைக் குறைவற முறையாகச் செய்து முடித்துவிட்டு,  மன்னிக்க வேண்டும், நான் இதில் நம்பிக்கை இல்லாதவன்,  நீங்கள் உள்ளே சென்று திரும்புகின்றவரை நான் இங்கே - மண்டபத்திலேயே காத்திருக்கிறேன்எனத் தயங்காமல் கூறியவர் இவர்.  இவரின் தலைமைக்கு இலக்கான பள்ளிகள் - பணிமனைகளில் சமயம் தொடர்பான எவ்வகை நிகழ்ச்சியும் நடவாதவாறு இவர் செய்தார்.

            மாதந்தோறும் நடைபெறும் ஆசிரியரவைக் கூட்டங்களில் இவர் ஆற்றிய பகுத்தறிவுப் பொழிவுகள் பிற வட்டார ஆசிரியர்களிடத்தும் தாக்கம் விளைவித்தன.

            பள்ளி விழாவில் பங்குபெற வந்த அடிகளாரிடம் சமய நம்பிக்கையாளர்கள் வழமைப்படிதிருநீறுஏந்திப் பெற்றுக் கொண்ட நிலையில், அவரின்பால் பெருமதிப்புக் காட்டி வணக்கம் தெரிவித்த இவர், திருநீறு மட்டும் வாங்காது தவிர்த்துக் கொண்டதன் பயனாக இருவரும் எடுத்துக்காட்டான அன்பர்களாகிவிட நேர்ந்தது.

            திருப்பத்தூர் (காரைக்குடி),  விருத்தாசலம் ஆகிய ஊர்களில் அடிகளார் பொறுப்பில் நிகழ்ந்த மதம், கடவுள் பற்றிய பட்டிமன்றங்களின் இவரும் பங்காற்றும் அரிய நல்வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததுடன், அன்றைய தமிழக முதல்வர் கலைஞர்  அவர்கள் பறங்கிமலைப் (பிரான்மலை) பாரியாக அமர்ந்து நாற்பத்தொன்பது புலவர்க்குப் பரிசில் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த அடிகளார் இறைவன் நம்பிக்கையற்ற இறையனைப் பற்றி பரிசில் பெறும் ஒரு புலவராய் பங்கேற்கச் செய்தார்.

            அய்யா அவர்கள் 1957 -இல் சிறைப்படுத்தப்பட்டுச் சென்னை - பொதுமருத்துவமனையில் இருந்தபோது, சென்னைக்கு வந்த இவர் அன்னை மணியம்மையாரின் ஏற்பாட்டில் அய்யாவுக்கு உணவு கொண்டுபோகும் தோழருடன் சென்று அய்யாவைக் கண்டார்.

            ஆய்வாளராகப் பணியாற்றிய இவர் கையூட்டை (அப்பதவியில் அதற்கான வாய்ப்பு நிறைய உண்டு ) இறுதிவரை மறுத்து வாழ்ந்து காட்டிய பூட்கைப் பெருமிதத்திற்கு உரியவர், அன்பளிப்பு என்னும் பெயரால் பொன் - பொருள் ஆகியவை இவரை நாடி வந்த வாய்ப்புகளின்போது மிகக் கடுமையாக நடந்து கொண்டார்.

            அரசுப் பணியில் இருக்க நேர்ந்தாலும் இவர் அய்யாவையே எண்ணி வாழ்ந்த கொள்கையாளர் என்பதை ஒளிபாய்ச்சிக் காட்டும் சிறப்புச் செய்தி ஒன்றுண்டு.  அதுதான் அய்யாவின் கொள்கைப்படி இவர் தன் வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்து பற்றிக் கொண்டமை.

            அய்யாவின் கொள்கைகளே இவ்வுலகை ஆள வேண்டியவை என்பதிலே அசைவிலா ஊக்கம் படைத்தவராய், அய்யாவின் அருங்கோட்பாடுகளைப் பரவச் செய்வதில் தன்னால் இயன்ற பங்களிப்பு என்னவாக இரக்க முடியும் என்பதுபற்றிப் பல ஆண்டுகளாகக் கருதிக் கருதிப் பார்த்த இவர் சாதியொழிப்பு மணம் செய்து கொள்ளுவதே, சாலும் எனும் முடிவுக்கு வந்து, அது பற்றித் தன் தோழர்களுடன் கலந்தாய்வு நடத்தியிருந்தார்.

            பறமக்குடியில் இவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டத்தில் அவ்வூரில் திராவிடமுன்னேற்றக் கழக நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்த, ஏற்கெனவே இவருடன் பழக்கப்பட்ட - நண்பரின் மருமகள் இலட்சுமி (பின்னர் திருமகள் ஆகிவிட்டார்) அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த மாணவி. இராமநாதபுரம் சேதுபதி குடும்ப உறவினரான அவர் இவரின்பால் காட்டிய பற்றும், பரிவும் இவருக்கு அவரின்மீது நல்லுணர்வும் நம்பிக்கையும் தோற்றுவித்தன.

      அய்ந்தாண்டுக் காலம் பொறுத்திருந்து ஒருவருக்கொருவர், நன்றாகப் புரிந்து கொண்டு எந்தக் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும் எனும் உளத்திண்மையும் பூண்டு, அச்சுறுத்திய எதிர்ப்புகளையெல்லாம் திட்டமிட்டு வென்று, 10.03.1959 அன்று இருவரும் துணைவர்களாக - இணையர்களாக - திராவிடர் கழக - திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துக்களுடன் தந்தை பெரியாரின் முதற்கொள்கையான ஜாதி யொழிப்புக்குப் பங்களிப்புச் செய்த வீரர்களாயினர்.  அன்றைக்கே இருவரும்  எங்களின் இணைப்பைக் காதல் திருமணம் என்று குறிப்பிடாதீர்கள் இது சாதியொழிப்புக் குறிக்கோள் மணம்   என்று அறிவிப்புச் செய்தனர்.  இவர்களின் இணைப்பு தற்செயலாக நேர்ந்த ஜாதிக் கலப்பு மணமன்று.  இவர்தம் பிற்கால நடவடிக்கைகள் இவ்வுண்மையினை நிலைநிறுத்துபவை.

      இவர்களின் மக்கள் பண்பொளி,  இறைவி,  மாட்சி  ஆகிய மூன்று பெண்களுக்கும் இவரிருவரின் ஜாதி களையும் சேராதோரைக் கணவர்களாய் ஆக்கிவைத்துக் காட்டினர்.  அவ்வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் முறையே அன்னை மணியம்மையார் தலைமையிலும்,  இந்திய குடியரசுத் தலைவர் கியானி செயில்சிங் முன்னிலையிலும்,  ஆசிரியர்  கி.  வீரமணியவர்களின் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்படடன.  தன் துணைவியாரிடம் இவர், தங்களின் இரண்டாம் செல்விக்குத் தமிழ்க் கண்டத்தின் தலைக்குடியான ஆதித் திராவிடப் பஞ்சமக்குடியிலிருந்து ஒரு துணைவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்னும் தனது நெடுங்கால உள்ளக்கிடக்கையை சொல்லிக் காட்டியபோது அவருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.  நானும் பிள்கைளும் முன்பே இப்படி நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்று முடிவு செய்து வைத்திருக்கிறோமே  என்றார் திருமகள்.  எத்தகைய புரட்சி நாட்டம்.  இப்படி ஜாதி கெடுத்தோர் ஆயினர் இவர்கள். அவ்வண்ணமே அது நடந்தது ஒரு மீப்பெரும் தஞ்சை மாநாட்டில்.

      இவர்களுடைய மகனின் வாழ்க்கை ஒப்பந்தம் சற்று வேறுபாடான - புதுமை வாய்ந்த நிகழ்ச்சியாய் அமைந்தது.  குடியரசுத் தலைவருக்கு இயக்கம் கருப்புக் கொடி காட்டும் பேரணி நடத்தி, ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டிருந்தபோது, இவ்விருவரின் திட்டப்படி,  இசையின்பன் - பசும்பொன்  வாழ்க்கை ஒப்பந்தம் தமிழர் தலைவரால் நடத்தி வைக்கப்பட்டது.  இச்சிறைத் திருமணம் பற்றி கைது செய்யப்பட்டோர் கைபிடித்துக் கொண்டனர் எனச் செய்தியேடுகள் வியந்து எழுதின.

            பல ஆண்டுகளாக இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடமுடியாத சூழ்நிலையில் பிறவகை ஒத்துழைப்பு மட்டுமே காட்டிவந்த இறையன் எனும் தமிழ்ப்பெயரை எய்திக் கொண்டுவிட்ட  கந்தசாமி யின் வாழ்வில் கற்பனையே செய்திராத அந்த நல்வாய்ப்பு ஏற்பட்டது.

      02.07.1970 அன்று சிவகங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழகக் கூட்டத்தில் மக்களுக்கு அறிவு கொளுத்த வந்திருந்த அறிவின் எல்லை அய்யா அவர்களைக் கண்டு வணக்கம் தெரிவிக்க சென்ற இவரை மாவட்டக் கழக முன்னோடிகள் அம்மாபெரும் பொதுக்கூட்ட மேடையில் அய்யாவின் முன்னிலையில் பேசுமாறு செய்து விட்டனர்.

      நல்லவண்ணம் தன்மான இயக்கத் தனிச் சிறப்புகளை மக்களின் முன்பு எடுத்துவைத்து அமர்ந்த இறையனை  உயர் எண்ணங்கள் மலரும் சோலை யாம் அய்யா அவர்கள் உளமாரப் பாராட்டினார்.  என்னுடன் இப்படியே பறமக்குடிக்கு வருகிறீர்களா? ” என்பதாக வேறு அய்யா கேட்டுவிட்டார்.  அவ்வளவுதான் இவர் தன்னையே மறந்தார்.  எங்கோ பறந்தார்.

      தொடர்ந்து அய்யா அவர்கள் மககளுக்குப் பாடங்கள் கற்பித்த கூட்டங்களில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. உலகப் புகழ் வாய்ந்த சேலம் மாநாடு (1971),  இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருவாரூர் மாநாடு (1971) ஆகிய தனிச்சிறப்பு படைத்த மாநாடுகளில் இவர் சிற்றுரையாற்றுமாறு அய்யா செய்தார்கள். தி.மு.க. ஆட்சியில் பகுத்தறிவாளர் கழகங்கள் நிறைய முளைத்தெழுந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்கள் பரப்பிய பெரும் பணியில் நல்ல அளவுக்குப் பங்குண்டு இவருக்கு.

      இவரின் தொண்டின் எல்லையின் விரிவாக்கத்திற்காகவும் இவரது உரைப்பொழிவுத் திறன் கழக இளைஞர்களைப் பயிற்றுவிக்கப் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் கழகத் தலைமை வட ஆற்க்காட்டு வடசேரியில் நடந்த பயிற்சி முகா மிற்கு இவரை அழைதது, பாடங்கள் எடுக்குமாறு ஏற்பாடு செய்தது.  அங்கு இவர் விளைவித்த தாக்கத்தை மதிப்பிட்ட கழகத் தலைமை தொடர்ந்து இவரைப் பயிற்றுநர்ப் பணியில் ஈடுபடுத்தியது.

      பகுத்தறிவாளர் கழகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர் கழகத்தின் தலைமையால் புதிதாக உருவாக்கப் பெற்ற பகுத்தறிவு ஆசிரியரணி எனும் அமைப்பின் தலைவராக அமர்த்தப்பட்டார்.  அவ்வமைப்பின் சார்பில் பல பயன் கூட்டும் நடவடிக்கைள் மேற்கொண்டார்.

      ஆற்றலும் ஆர்வமும் மிக்க சென்னைப் பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர்களின் துணைக் கொண்டு  10- ஆம் வகுப்பு,  12-ஆம் வகுப்புப் பயிலும் (பார்ப்பனரல்லாத்) தமிழ் மாணவ-மாணவியர்க்கு இலவசமாகச் சிறப்பு வகுப்புகள் இவரால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க இனத் தொண்டாகும்.  பல ஆண்டுகள் இத்திட்டத்தினைப் பெரியார் திடலில் நடைமுறைப்படுத்தினார் இவர்.

      1989-மே  31 அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர் மறுநாட்காலையே தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாக தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி உடனடியாகத் தமிழ்நாட்டு அரசுப் பணித் தேர்வாணைக்குழு நடததும் தேர்வுகட்கு நம் இன இளைஞர்கட்குப் பயிற்சியளிக்கும் திட்டத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வினைப்பாட்டில் இறங்கிவிட்டார்.

      ஏற்கெனவே நமதியக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த இவரை, ”விடுதலை யில்  ஆன்மீகம் அறிவோமா? ” எனும் பொருள் பற்றித் தொடர்ந்து எழுதும் பத்திப் படைப்பாளர் (Columnist) ஆக்கினார்  விடுதலைஆசிரியர்.  அம்முயற்சியில் நல்ல உழைப்புக் காட்டினார் இவர். இன்னும் கழகத்தின் பயிற்சிப் பட்டறைப் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் (கலைத்துறை) ” விடுதலைஅயல்நாட்டுப் பதிப்பு (இணையதளம் ) பொறுப்பாளர்,  பெரியார் பகுத்தறிவு ஆய்வக நூலக இயக்குநர், தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற அமைப்பாளர், பாரளாவிய பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணித்தலைவர்,  புதுமை இலக்கியத் தென்றல் ” , மேடை ஒருங்கிணைப்பாளர்,  பெரியார் பயிலக ஆங்கிலப் பேச்சுப் பயிற்றுநர் போன்ற பல்வேறு பொறுப்புகளை ஏற்று,  குடி செய்வார்க்கு இல்லை  என்று பெரியார் காட்டிய தொண்டறத்தை மேற்கொண்டு உண்மையாகவும், செம்மையாகவும் ஒழுகியவர் இவர்.

            வெல்லுஞ்சொல் திறன் வாய்ந்த இவர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பெரியாரியலை மக்களிடம் பரப்புவதில் இன்பம் கண்டவர்.  சில ஊர்களில் நடந்த இயக்க நிகழ்ச்சிகளின்போது கொள்கை எதிரிகளின் தொல்லைகட்கும் உள்ளானவர்.

            பட்டிமன்றங்கள் பாங்கறிந்து ஏறிச் சொல்லாடல் புரிவதில் நிறையப் பட்டறிவு இவருக்கு உண்டு என்பதால்இயக்கத்திற்கு நல்ல அளவிற்குப் பயன் பட்டார்.  மதப் புன்மைகளையும் பாழ்த்தும்  தன்மைகளையும் மக்களிடையே வெளிப்படுத்தி நாட்டையே குலுக்கிய ” A ” பட்டிமன்றங்களை இயக்கம் ஏற்பாடு பண்ணியபோது இவர் பெரும் பங்காற்றினார்.

            சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  சோவியத் இதழ்கள் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் நடந்தசோவியத் யூனியனில் நடைபெறும் மாற்றங்கள் சோஷியலிசத்தைப் பலப்படுத்துமா?  பலவீனப்படுத்துமா? ”என்னும் பட்டிமன்றத்தில்  பலவீனப்படுத்தும்என்று கழகத்தின் சார்பில் வழக்காடிய அணியின் தலைவராக இறையனார் எடுத்துவைத்த வழக்கு பெரும் பரபரப்பை  விளைவித்ததுடன் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களின் அரும் பாராட்டுகளை ஈட்டியது.  அம்மேடையில் இவர் சோவியத்துக் குழுவினரின் முன்னிலையிலேயே  போச்சு,  போச்சு என அலறிய வண்ணமே, சோவியத் ஒன்றியம் உடைந்தே போனது.

            இவரது பயனுடைய உரை வீச்சின் வலிமையையும் இவரின் பெரியாரியற் பயிற்சியின் ஆழத்தையும் மதிப்பீடு செய்த கழகத் தலைமை இவருக்குப்  பெரியார் பேருரையாளர்விருதளிக்க வேண்டுமென்று கருதியது.

            அதன்படி 1982- பிப்ரவரியில் திருச்சியில் மூன்று மாலைகளில் கற்றுத் துறைபோகிய சான்றோர்களின் தலைமையில் முறையே,  பெரியார் ஒரு சமுதாய வழக்குரைஞர் ” ,  ஒரு நோய் முதல் நாடும் மருத்துவர் ”,  ஒரு தேர்ந்த பொறியாளர்என்னும் தலைப்புகளில் செய்திச் செறிவான உரைப் பொழிவுகள் நிகழ்த்திய இறையன் அவர்களுக்குப் பெரியார் பேருரையாளர் என்னும் விருதினைக் கழகத் தலைமை 21.02.1982 அன்று அளித்து பெருமைப்படுத்தியது.

            இவரின் மொழிபெயர்ப்பாற்றலில் நம்பிக்கை கொண்ட கழகத் தலைமை நம் இயக்க நிகழ்ச்சிகளில் இவரைப் பயன்படுத்தியது.  வி.டி. ராஜசேகர், சந்திரஜித்,  டி.பி. யாதவ்,  பசவலிங்கப்பா,  டாக்டர்  . கிருஷ்ணசாமி, ராம் விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி,  தேவராஜ் அர்ஸ், பிரகாஷ் அம்பேத்கர் முதலியோரின் ஆங்கிலப் பேச்சுகள் இவரால் மொழிபெயர்த்து மக்களின் முன் வைக்கப்பட்டன.  பசவலிங்கப்பா, டாக்டர்  . கிருஷ்ணசாமி போன்றோர்,  இட்டு வாருங்கள் இறையனை  என விரும்பியழைக்கும் அளவிற்கு, மக்களிடம் தாக்கம் விளைவிக்கவல்லதாக இவரது மொழி பெயர்ப்புத் தன்மை இருந்தது.

            இவரின் எழுத்துநடை தனித் தன்மை வாய்ந்தது.  தூய தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் - பெரிதும் சிறிதுமாக - எழுதியுள்ளார்.  பெரும்பாலும், எல்லாமே ஆய்வு முறையில் அமைந்தவை.

            விடுதலை ” ,  உண்மை ” - சிறப்பு மலர்களில் அய்யாவின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த விளக்கக் கட்டுரைகளை விரித்தெழுதியுள்ளார்.   சோராமசாமி என்னும் பார்ப்பன எழுத்தாளர்  ”Sunday” என்னும் ஆங்கில இதழில் திராவிடர் இயக்கம் பற்றிக் கொச்சைபடுத்தி வரைந்த கட்டுரையைத் திறனாய்வு செய்து இவர் படைத்த கட்டுரைத் தொடர், இனத்திற்குக் கேடு விளைவிக்கும் ஏனைய கருத்தாளர்களுக்கு இவரால் எழுதப்பட்ட மறுப்புக் கட்டுரைகள், நம்முடைய மாநாடுகள் - விழாக்கள் பற்றி இவர் எழுதிய எழுத்தோவியங்கள், கழகத் தலைவர் அவர்கள் பங்கு பற்றிய கல்லூரி - பல்கலைக் கழகங்களின் கருத்தரங்குகளின் பயன் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள் ஆகியவை குறிக்கத்தக்கவை.

            இவர் யாத்த  சுயமரியாதைச் சுடரொளிகள், இல்லாத இத்துமதம்,  ஜெயலலிதாவின் பின்னாலா திராவிடர் கழகம் சென்றது?  ஆகிய நூல்கள் பிறரால் மேற்கோளாகக் காட்டப்படுபவையாக விளங்குகின்றன.

            பெரியார் ஆயிரம் ”,  மகாபாரத ஆராய்ச்சி  என்னும் தொகுப்பு நூல்களில்  இவரின் பங்களிப்பு உண்டு.  தமிழக அரசின் திறந்த வெளிப் பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட  நூலில் அய்யா பற்றிய இவரின் கட்டுரை இடம் பெற்றது.

            குறைந்த அளவே புழக்கத்திலுள்ள தனித் தமிழ்ச் சொற்களை இவர் தன் கட்டுரைகளில் ஆங்காங்கே பெய்து எழுதுவதால் புரிதலின் நேரம் கூடுகிறது என்னும் நடப்புண்மையை இவர் பகுத்தறிவுப் பார்வையுடன் ஏற்றுக் கொண்டார் எனினும் நாளடைவில் நன்மையே என நம்பினார். ” பெரியாரியல்எனும் சொல்லாட்சியைப் புழக்கத்திற்குக்கொண்டு வந்ததில் இவருக்குப் பேரளவுப் பங்குண்டு.

            இவர் ஒரு பாவலர் என்பதுவும் பதிவு செய்யத்தக்கது.  பல்வகைப் பாவினங்களிலும் பாக்கள் புனையும் புலமை கொண்ட இவர் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஜெர்மன் தலைநகரத்திலும் நடந்த பாவரங்குகளில் பங்கு பெற்றுள்ளார்.

      இவர் ஒரு பாவாணரும் ஆவார்.  பாடல்கள் இசைத்தல் மட்டுமின்றி இசைப்பாடல்கள் இயற்றுவதிலும் அவற்றிற்குப் பண்ணமைத்துப் பாடுவதிலும் பயிற்சி நிரம்பிய இவரின்  ஆண்களா? பெண்களா?, ”  தமிழினத்தின் விடிவெள்ளி ”,  வாராது வந்த மணி எனும் பாடல்கட்கு நிறைய வரவேற்பு.  தஞ்சை - தங்கம் வழங்கு விழாவில் இவர் இயற்றி இசைத்த Universal Community ||  என்ற பாடல் வெளிநாட்டு விருந்தினரின் பெரும் பாராட்டை ஏற்றது.

            இயக்கத்தின் வளர்ச்சிக்கான களப் பணிகளில் ஈடுபாடும் கழகக் கிளர்ச்சிகளில் பங்குபற்றும் துணிச்சலும் கொண்ட இவர் எட்டுமுறை காவலதுறையினரால் தளையுண்டவர்.

            இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்காலத்தில் தளைசெய்யப்பட வேண்டிவர்களின் பட்டியலில் இறையன் பெயரும் இருப்பதாகக் கூறி, காவல்துறையினர் இவரை அழைத்துக் கேட்டபோது, ” பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஒருபோதும் எழுதிக் கொடுகக மாட்டேன்என்று வீரங்காட்டினார்.

      சமுதாய விஞ்ஞானி என்று போற்றப்பட்ட தந்தை பெரியார் நடத்திய இதழ்கள் அனைத்தும் ஏழை, எளிய மக்களைச் சிந்திக்க வைத்தன.  அவர் இந்த இதழ்களை நடத்திவரும்பொழுது சந்தித்த இடையூறுகள், எதிர்ப்புக்கள்,  சிறைவாசங்கள், தண்டனைத் தொகை செலுத்துதல் ஆகியவற்றை இக்கால இளைஞர்கள் அறிய வாய்ப்பில்லை. பெரியார் ஒரு மாபெரும் பத்திரிக்கையாளர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இதழாளர் சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளையின் சார்பாக  இதழாளர் பெரியார் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்த முடிவு செய்து, அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு. இராமர் இளங்கோ அவர்களும், இந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் மு. வளர்மதி அவர்களும் பெரியார் பேருரையாளர் அ. இறையனார் அவர்களை அழைத்து 09.12.1998 அன்று புதுக்கல்லூரித் தமிழ்த்துறை வழியாக இந்நிகழ்வை நடைபெறச் செய்ததன் பேரில்,  சொற்பொழிவாளரான இறையனார் இத்தலைப்பை யொட்டி ஒரு மணிநேரம் சுருக்கப் பொழிவு வழங்கினார். இதனை முழுமையாக விரிவாக எழுதி வழங்கினால், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர் பலருக்கும் பெரிதும் பயனுடையதாக அமையும், என அடுத்து வந்த இயக்குநர் முனைவர் சா. கிருட்டினமூர்த்தி அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் இப்பணியை மிக விரிவாகவும் ஆழமாகவும் செய்து, இதழாளர் பெரியார் எனும் நூல் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, பலராலும் பாராட்டப்பெற்றது.  இறையனாரின்  இறுதி காலத்தில், இந்நூல் வெளியிடப்பட்டு அவரது இயக்கத் தொண்டறத்தில் இது ஒரு மகுடமாக அமைந்துள்ளது.

            இத்தகைய பல்வகைப் பண்பு நலன்களுடன், இயக்கத் தொண்டறத்தில் இவர் இத்தனை ஆண்டுகள் இடையறாது ஈடுபட்டொழுக,  உறுதுணையாக - உந்துவிசையாக - ஊக்குவிப்பாளராக ஒத்துழைப்புத் தந்து வந்த இவரின் இணையர் திருமகள் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

            இவருடன் கைகோத்த நாள்தொட்டு பெரியார் படையில் சேர்ந்துவிட்ட திருமகள் கழக வீராங்கனையாகவே தன்னை இனங்காட்டிக் கொண்டார்.  தாலி அணியாமை,  குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளாமை, மத நடவடிக்கை எதிலும் அகத்தாலோ, புறத்தாலோ ஈடுபடாமை ஆகியவற்றை கடைபிடித்து வந்த திருமகள், மதுரையில் 1971- இல் நடந்த மாபெரும் பெரியார் கூட்டத்தில், சேலத்தில் அய்யா போட்ட மகளிர் உரிமைப் புரட்சித் தீர்மானத்தை வரவேற்றுப் பாராட்டிதழ் படித்துப் பணிந்தளிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

            தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகிய இருவரின் பாராட்டிற்கும் பரிவுக்கும் இலக்கான திருமகள் தங்களின் குழந்தைகளுக்கும் தன்மானக் கொள்கைகளைப் புகட்டிப் புகட்டி அவர்களையும் உருப்படுத்தினார்.

            ஒரு குறிக்கோட் குடும்பத்தைத் தன் துணைவர் இறையனாருடன் இணைந்து கட்டியது மட்டுமா?  அக்குடும்பம் உறைவதற்கு மடிப்பாக்கம் , பெரியார் நகரில்,  வீரமணித் தெருவில்,  மணியம்மையார் மனையையும் இணையர் இருவரும் எழுப்பிப் பெருமிதங் கொண்டனர்.  அவ்வில்லத்தைத் திருமகள் பெயருக்கே உடைமையாக்குவதில் இறையனார் பேரின்பம் கண்டார்.

            இறையனாரின் இணையர் திருமகள், மகள்கள் மூவர், மருமகள் ஆகிய அய்வரும் மீட்பர் பெரியாரின் உருவக்கல் பதித்த தொங்கலொன்றை அணிந்து கொண்டுள்ளனர். வீரமணி, வெற்றிமணி, புயல், சீர்த்தி, அழல், புகழ், இனநலம், அடல் என்பவை இக்குடும்பப் பிள்ளைகளின் பெயர்கள். 

            இவ்வண்ணம் குடும்பத்தையே இயக்கத்திற்காகக் கொடுத்தும்,  ஜாதியைக் கெடுத்தும் தொண்டறம் மேற்கொண்டிருக்கும் இறையனார் அவர்கள் தன் பதினேழாம் அகவையிலிருந்து இயற்கை எய்திய எழுபத்தாறாம் அகவை வரை ஒரே கொள்கை, ஒரே கழகம்,  ஒரே தலைமை, ஒரே கொடி என வாழ்ந்து காட்டியுள்ளார் என்பது நாமனைவரும விம்மிதமுற வேண்டிய செய்தி.  

            புத்தம், தம்மம், சங்கம், சரணம் ஆகிய சொற்கள் பற்றிய அறிவாசான் தந்தை பெரியாரின் இலக்கண விளக்கத்திற்குத் தக ஒழுகிவந்த இறையனார் தம் எழுபத்தாறாம் அகவையில் உடல்நலக்குறைவின் காரணமாக  2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 12 ஆம் நாள் இரவு 9 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார்-மணியம்மை மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.

            அன்னாரது உடல், கழகத் தோழர்கள், நண்பர்கள் உறவினர்களின் பார்வைக்காக பெரியார் திடலில் வைக்கப்பட்டது.  டாக்டர் கலைஞர், தொல். திருமா வளவன்,  நெடுமாறன், சுப. வீரபாண்டியன், இளஞ்செழியன், மற்றும் பல தலைவர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மறுநாள்  மாலை 4 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக ஓட்டேரி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித சாத்திர, சடங்குகளும் இல்லாது எரியூட்டப்பட்டது.