அணிந்துரை எழுதும் பணி இவ்வளவு கடினமானதாய் இருக்கும் என்று இதுநாள்வரை நான் நினைத்ததில்லை. தான் கண்டுணர்ந்த வரலாற்றைக் கற்றறிந்த செய்திகளோடு, பட்டறிவினால் செதுக்கிக் காலக்கண்ணாடியின் முன் வைத்தாற்போல், ஒரு படைப்பு, எப்பரிமாணத்தைப் பார்ப்பது என்ற தவிப்பும், இத்தனை செய்திகளையும், குறிப்புகளையும் எந்த கணினியில் பதிந்து வைத்திருந்தார் என்ற மலைப்பும் படிக்கும் நமக்கு ஏற்படுவதில் எந்த வியப்பும் இல்லை.
அய்யா என்றும், அண்ணன் என்றும், மாமா என்றும், பெரியப்பா என்றும், தாத்தா என்றும் திராவிடர் இயக்கக் குடும்பத்தினராலும், தமிழ் மொழி அன்பர்களாலும், வேறுபாடின்றி அன்பு பாராட்டப்படும் பேராசிரியர் இறையனார் அவர்கள், தன் காலத்து வரலாற்று நிகழ்வுகளை, ஆய்வு நோக்கில் பதிவு செய்து, திராவிட இனத்தின் போராட்டங்கள், திராவிடர் இயக்கத்தின் சாதனைகள், தந்தை பெரியாரின் தந்நிகர் இல்லா வாழ்க்கை ஆகியவற்றை இணைத்து இழை இழையாகப் பின்னி நம்முன் விரித்திருக்கிறார் இந்த அரிய நூலை.
தந்தை பெரியார் அவர்களைப் பற்றி “ டைம்ஸ் ஆப் இண்டியா “ ( Times of India ) 7-12-1999 இதழில் “ தமிழ் மண்ணின் இயற்கை அமைப்பையே மாற்றி விட்ட வரலாற்றுப் பெருமகன் “ என்று குறிப்பிட்டது முதல், ஈழவ சமுகத்தில் பிறந்து சிறந்த திரைப்படக் கலைஞராக உயர்ந்த “ செம்மீன் “ ராமு காரியத் அவர்கள் பெரியாரின் ஒரு நாள் வாழ்க்கை நடவடிக்கைகளைத் திரைப்படம் ஆக்கினார் என்ற செய்தியும், அதற்குக் காரணமாக வைக்கம் போராட்டத்தை அவர் நினைவு கூர்ந்தார் என்பது வரை எத்துணையோ அரிய செய்திகள்.
தந்தை பெரியாரைப் பற்றிய பல தவறான செய்திகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே பேசப்பட்டுள்ளன. அவற்றுள் சில செய்திகள் அவரை வியந்து பாராட்டும் நோக்கிலும் கூட உருவாயின. அவற்றில் ஒன்று பெரியாரின் உடல் நிலை பற்றியது. பெரியார் என்று சொல்லும் போதே அவரது செம்மாந்த தோற்றம், வயது முதிர்வினால் தளர்ந்து அமர்ந்திருக்கும் நிலையில்கூட நிமிர்ந்து பார்க்கும் ஓர் அரிமா நோக்குதான் புலப்படும். சிறந்த ஓவியர்களும் புகழ்பெற்ற சிற்பிகளும் படைக்க விரும்பிய தோற்றப் பொலிவு, அவருடையது. அவர் 95 வயது காலம் வாழ்ந்தார். இறுதிவரை பயணம் செய்தார், விரும்பிய உணவை உண்டார் என்றால், அப்படியொரு திடமான உடல் அமைப்பு அவருக்கு என்று பலரும் நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள். ஆனால் பெரியார் பலவிதமான உடற்கோளாறுகளால் துன்பப்பட்ட செய்திகள் 1924 - இல் இருந்தே கிடைக்கின்றன. 1930 களில் கால் வீக்கம், இதய பலவீனம் போன்றவை. “ குடி அரசு “ ஏட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. 21.02.1937 “ குடி அரசு “ ஏட்டில் “ பிரச்சார உழைப்பால் “ மயக்கமும், தலைவலியும், கால்களில் சிறிது வீக்கமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சார உழைப்பு என்பது, 21.01.1937 முதல் 16.02.1937 வரை மதுரை, திருநெல்வேலி, வடஆர்க்காடு, தென் ஆர்க்காடு, தஞ்சை, திருச்சி, சேலம், சென்னிமலை, பெருந்துறை, நாச்சியார் கோவில் மீண்டும் தஞ்சை, கூத்தாநல்லூர், வட ஆர்க்காடு, திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய ஊர்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்து வந்ததைத்தான் குறிப்பிடுகிறது.
இந்தப் பதிவுகளின் தொகுப்பைப் படிக்கும்போது பெரியாரின் உழைப்பு உடல் திறன் சார்ந்ததல்ல என்பது விளங்குகிறது. தன் வாழ்வின் நோக்கத்தை வரையறுத்துக் கொண்டு இறுதி மூச்சுவரை அதற்காகவே வாழ்ந்த தொண்டுள்ளத்தின் துணிவும் மன வலிமையுமே பெரியாரின் இலட்சியப் பயணத்தை இறுதிவரை வழி நடத்தியிருக்கின்றன என்பதும் புலப்படுகின்றது. “ சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான் “ என்ற வள்ளுவரின் மொழியை “ குடி செய்வார்க்கில்லை பருவம்” என்ற தொடருக்குச் சான்றாக வாழ்ந்த பெரியாரின் அயராத பணி நினைவூட்டுகிறது. அந்தச் செய்திகளையெல்லாம் தொகுப்பதிலும், குறித்த நேரத்தில் அவற்றைத் தொகுப்பதிலும் அய்யா இறையனாரின் பணியும் அத்தகையதே என்பதை இந் நூல் விளக்குகிறது.
அது மட்டுமா, வங்காளத்தில் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கடுமையான நோய் அன்னை தெரசாவின் ஒளி (புகை )ப்படத்தில் இருந்து புறப்பட்ட ஒளி தன் மேல் பட்டதும் நீங்கி விட்டதாக ஒரு கதை கூற, அதை அப்படியே தேவாலய வட்டாரங்கள் உரத்து முழங்கிய ஒரு கூத்து, அன்னை தெரசா மறைவிற்குப் பின் நடைபெற்றது. எதற்காக என்றால், தெரசா அம்மையாருக்கு “ புனிதர் “(Saint) பட்டம் கொடுப்பதற்கு. புனிதர் பட்டத்தைப் பெறுவதற்கு அந்தத் தாய் செய்த தொண்டுகளைத் தவிர வேறு காரணம் வேண்டியதில்லை. ஆனால், போப் கூட்டத்திற்கு அது போதாது. அந்த “ புனிதர் “ அதிசயங்கள், அற்புதங்களைச் செய்தவராக இருக்க வேண்டும். அதற்காக இப்படிச் சில போலி செய்திகள் பரப்பப்பட்டன. இது நிகரற்ற தொண்டினைச் செய்த அன்னை தெரசாவிற்குத் கிடைத்த சிறப்பா? அல்ல வெட்கம், அவமானம் என்று குமுறுகிறார் பேராசிரியர் இறையனார். மேலும், இந்த நிகழ்ச்சி 1929 - இல் இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் உடல் நலம் குன்றியபோது நடந்த ஜெபதப நிகழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிற்து. அந்தக் காலத்தில் “ Free thinker “ என்னும் இங்கிலாந்து ஆங்கில நாத்திக இதழ் வெளியிட்ட கட்டுரையும் எடுத்துரைக்கப்படுகிறது. ஒரு நூற்றாண்டின் இரண்டு எல்லைகளின் இணைப்பு. அண்ணல் அம்பேத்கர் அவர்களது வாழ்க்கையும் அவரது அறிவாற்றலும் இன்னமும் கூட பொது மேடைகளில் பாராட்டப்படுவதில்லை. தலைவர்கள் பட்டியலில் அண்ணல் அம்பேத்கரின் பெயரைச் சேர்ப்பதற்குக் கூட இருமுறை யோசித்த மகான்கள் வாழ்ந்த இந்நாட்டில், “ நாம் தலைவரெனக் கொள்வதற்கு தகுதியான ஒருவர் அம்பேத்கர் அவர்கள் தான் “ என்று தமிழ்நாட்டில் பேசி, எழுதிய, தலைவர் பெரியார் அவர்கள். “ அண்ணலும் அறிவாசானும் ஓர் ஒப்பீடு “ என்ற தலைப்பில் அய்யா இறையனார் தொகுத்துள்ள அரிய செய்திகளைப் படித்தால் நம் வரலாற்று அறிவு விரிவுபடும். தந்தை பெரியார் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவே உழைத்தார் என்றும், அண்ணல்அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதியே பாடுபட்டார் என்றும் குறிக்கப்படும் கோணல் விமர்சனங்களுக்கு இக்கட்டுரை பதில் கூறுகிறது. பிற்பட்டோர் நலன் கருதி அமைக்கப்பட்ட காகாகலேல்கர் கமிஷன் போன்றவை அமைக்கப்படுவதற்கு மத்திய அரசின் செயல்பாடு குறித்து அம்பேத்கர் அவர்களின் விமர்சனங்கள் காரணமாக இருந்தன என்ற குறிப்பும் இதில் உள்ளது.
இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றையும் ”Hindu Law “ வின் தீர்ப்புகளைப்பற்றியும் பல அரிய செய்திகளைக் கூறுவதோடு “ அரக்கர் “ என்று ஆரியக் கற்பனையாளர்களால் உருவாக்கப்பட்ட திராவிட இன இழிவுச் சித்திரங்களையும், வேத கால ஆய்வுகளின் துணையுடன் நமக்கு வரைந்து காட்டுகிறார் அய்யா இறையனார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடைமுறை பற்றி, குடிசெய்யும் நெறிகளா? என்று இறையனார் கொடுத்திருக்கும் பட்டியல் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமிட்டு வழங்கப்பட வேண்டியதாகும்.
“ விரிக்கின் பெருகும் “ என்று தமிழறிஞர்கள் கூறுவது வழக்கம். ஆனால், இந்நூலில் இறையனார் வடித்துள்ள கட்டுரைகளில் காணப்படும் அரிதான செய்திகளை சுட்டிக்காட்டினாலே அணிந்துரை, முனைவர் பட்ட ஆய்வுரையாகிவிடும்.
இந்த நூல் இனி வரும் வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கும் இனமொழிப் போராளிகளுக்கும் ஓர் ஆவணத் தொகுப்பாகப் பயன்படும் என்பதை இந் நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
-- வழக்கறிஞர் அ. அருள்மொழி.
(பெரியார் பேருரையாளர் இறையனாரின் 75 - ஆம் ஆண்டு நிறைவு விழாவின் போது வெளியிடப்பட்ட “ செயற்கரிய செய்த செம்மல் “ என்னும் நூல் வெளியீட்டிற்கு வழங்கிய அணிந்துரை )
No comments:
Post a Comment